பெற்றோர்களின் கனவுகளும், பிள்ளைகளின் பரிதாபங்களும் !
சமீபத்தில் ஒரு ஊடக பயிற்சிக்காக மாணவர்களை நேர்காணல் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. சொல்லி வைத்தாற் போல் 90 சதவீத மாணவர்கள் தாங்கள் படித்த படிப்பிற்கும், ஊடக பயிற்சிக்கும் சம்பந்தமே இல்லாமல் இருந்தார்கள். இன்னும் சில பேர் இந்த பயிற்சிக்காக தான் பார்த்து கொண்டிருந்த வேலையை விடவும் தயாராக இருந்தார்கள். காரணம் கேட்டதற்கு இது தான் என்னுடைய ஆர்வம், கனவு என சொன்னார்கள்.
ஆனால் வீட்டில் பெற்றோர்கள் சொன்னார்கள் என்பதற்காக இளங்கலையில் வேறு ஒரு படிப்பு படித்தோம். இப்போது அதில் ஆர்வம் இல்லை. அதனால் எங்கள் கனவை நோக்கி பயணிக்கிறோம் என்று சொன்னார்கள். எல்லோரும் 24 வயதுக்கு மேற்பட்டவர்கள். இனி தான் அவர்களின் கனவு அறிந்து படித்து, திறன்களை கற்று, அதற்கு பிறகு பிடித்த வேலைக்கு செல்ல வேண்டும். இப்போது 24 வயது வரை போன நேரத்தை மீட்க முடியுமா ? முடியாது தானே
10 ஆம் வகுப்பு படிக்கும் போதே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் உட்கார்ந்து அவர்களுக்கு என்ன பிடிக்கும், எந்த படிப்பில் ஆர்வம் இருக்கிறது என உட்கார்ந்து கேளுங்கள். பேசுங்கள். உங்களுக்கு பிடித்திருக்கிறது என்பதற்காகவோ, சொந்தக்காரர்கள் சொன்னார்கள் என்பதற்காகவோ, உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காத காரணத்தினாலோ ஒரு படிப்பை உங்கள் பிள்ளைகளின் மேல் திணிக்காதீர்கள்.
உங்கள் மேல் உள்ள பயத்தின் காரணமாகவோ அல்லது மரியாதையின் காரணமாகவோ இளங்கலை படித்து விடுகிறார்கள். ஆனால் அதற்கு பிறகு பிடித்த படிப்பை நம்மால் படிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு ஏற்பட்டு அவர்களுக்கு வாழ்வின் மீதோ அல்லது வேலையின் மீதோ சலிப்பு வந்துவிடுகிறது. அந்த சலிப்பு புதிதாக, எதையும் கற்றுக் கொள்ள மறுக்கிறது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஒரு கட்டத்தில் அவர்கள் மீதே அவர்களுக்கு எரிச்சல் வருகிறது. இது இளம் வயதிலேயே முடிவெடுக்கும் தன்மையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. அது அடுத்தடுத்த கட்டங்களில் வெறுமையை உண்டாக்கி, அடுத்தவரை ஒப்பிட்டு பார்க்கும் மனநிலையில் கொண்டு விடுகிறது.
⭕️ இதையெல்லாம் தவிர்க்க சிறு வயதில் இருந்தே குழந்தைகளை அவர்களின் வாழ்வில் முடிவு எடுக்க பழகலாம்
⭕️ பெற்றோர் என்பதற்காக 100 சதவீதம் நாம் சொல்வது தான் சரி என்று ஆகிவிடாது. வளர்ந்த குழந்தைகளின் முடிவுகளை ஏற்க பழக வேண்டும்
⭕️ முன்பு 30 வருடங்களாக இருந்த தலைமுறை இடைவெளி இன்று 5 வருடங்களாக இருக்கிறது. அதனால் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் அப்டேட் ஆக வேண்டும்
⭕️ தங்களுக்கு விருப்பான கல்வி கிடைத்துவிட்டால் அதில் ரிஸ்க் எடுக்கவும், தங்களை வளர்த்துக் கொள்ளவும் பிள்ளைகள் துணிந்து முடிவு எடுப்பார்கள். அப்போது பெற்றோர் செய்ய வேண்டியது, 4 பேர் 4 விதமாக பேசினாலும் குழந்தைகளின் முடிவுகளுக்கு பக்க பலமாக இருப்பது தான்
⭕️ சிறு வயதில் இருந்தே வீட்டு கஷ்டங்களை சொல்லி வளர்ப்பதும், நன்றாக படித்தால் மட்டுமே உனக்கு விருப்பமான படிப்பை படிக்க முடியும் என தொடர்ந்து வலியுறுத்துவது நல்லது.
⭕️ 30 வயதிற்கு மேல் உங்கள் பிள்ளைகள் சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்றால் 20 வயதுகளில் பிடித்தமான படிப்பையும், 27 வயதில் பிடித்த வேலையிலும் சேர்ந்துவிட வேண்டும். அடிப்படை வலுவாக இருந்தால் அதன் பிறகு எந்த பிரச்சனை வந்தாலும் சமாளித்து கொள்ளலாம்.
⭕️ படிப்பு மற்றும் வேலை சம்பந்தமான முடிவுகளில் எப்போதும் குழந்தைகளின் பக்கம் உறுதியாக நில்லுங்கள் பெற்றோர்களே. அதுதான் நீங்கள் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நல்லது.
அன்புடன்,
ஹேமாராக்கேஷ்,