அரசு ஊழியர் – ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் ! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
2026, ஜனவரி 01-07 நாளிட்ட அங்குசம் செய்தி இதழில் “தமிழ்நாடு முதல் அமைச்சருக்குத் திறந்த மடலை எழுதியிருந்தோம். அதில் அரசு ஊழியர், ஆசியர் பிரச்சனையில் ஓய்வூதியம் வழங்கவேண்டும என்ற கோரிக்கையை முன்வைத்து 20 ஆண்டு காலம் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்தன். அரசு ஊழியர், ஆசிரியர் தங்களின் கோரிக்கை தங்களின் நட்புச் சக்தியாக விளங்கும் திமுக ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழக முதல் அமைச்சருக்கு அரசு ஊழியர், ஆசிரியர் கோரிக்கையை நிராகரிக்க உரிமை உண்டு. காலம் கடத்தி ஏமாற்றக்கூடாது. தேர்தல் நேரத்தில் உடனடி தீர்வு காணவேண்டும்” என்று வலியுறுத்தினோம்.
இன்று (03.01.2025) பகல் 12.00 மணியளவில் அரசு ஊழியர் – ஆசிரியர்களின் ஓய்வூதியக் கோரிக்கையை ஏற்று, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் முதல் அமைச்சரைச் சந்தித்து தங்களின் நன்றியினைத் தெரிவித்தார்கள். சங்கத் தலைவர்களுக்கு முதல் அமைச்சர் இனிப்புகளை ஊட்டி தன் அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் தொலைக்காட்சியில் உரையாற்றிய முதல் அமைச்சர், “தலைவர் கலைஞர் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் எப்படி நட்பு சக்தியாக எண்ணினாரோ, அதைப்போலவே நானும் நட்பு சக்தியாகவே எண்ணுகிறேன். 20 ஆண்டு கால போராட்டத்திற்கு முடிவு ஏற்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின் அம்சங்கள்
மாநில அரசு அலுவலர்கள் 30 ஆண்டுகள் பணியாற்றி கடைசி மாதத்தில் பெற்ற ஊதியத்தில் 50% ஊதியமாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கு அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் 10% ஓய்வூதியத்திற்காக பங்களிப்பைச் செலுத்தவேண்டும்.
ஓய்வூதியம் பெறுவோருக்கு தற்போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் ஆண்டுக்கு இரண்டு முறை (6 மாதத்திற்கு ஒருமுறை) அகவிலைப்படி வழங்கப்படும்.
ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் அவரின் குடும்ப உறுப்பினர்களக்கு 60% குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும்.
அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும்போதும், பணிக்காலத்தில் இறக்க நேரிட்டால் அவரின் பணிக் காலத்திற்கேற்ப 25 இலட்சத்திற்கு மிகாமல் பணிக்கொடை வழங்கப்படும்.
10 ஆண்டுகள் அதற்கும் குறைவான ஆண்டுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றால் அவருக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.10ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் செயல்படுவதற்கு முன்பு பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் சேர்ந்து ஓய்வூதியம் இன்றி பணி ஓய்வு பெற்றவர்களுக்கு சிறப்பு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும்.
தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்த தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் குறித்து, அங்குசம் செய்தி இதழிடம் பேசிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கதின் முன்னாள் தலைவர்,“தற்போது பணியிலிருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் இல்லை என்ற நிலையில், தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருக்கிறார். இதனை அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் வரவேற்றிருக்கின்றன.
சங்கங்கள் போராடியது பழைய ஓய்வூதியத் திட்டத்திற்குத்தான். அது நிராகரிக்கப்பட்டுவிட்டது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படியே இந்த உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அமைந்துள்ளது. ஒரே வித்தியாசம், 2003ஆம் ஆண்டு முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு ஓய்வூதிய பங்களிப்பு 10% செலுத்த தேவையில்லை என்றிருந்தது. இதில் 10% செலுத்தவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்ற ஒரேஒரு வித்தியாசம் உள்ளது.
கடந்த ஆண்டில் ஒன்றிய அரசு UPS என்னும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்திருந்தது. அதில் 10 ஆண்டுகளுக்குக் குறைவாகப் பணியாற்றி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படவில்லை. தமிழ்நாடு அரசு ரூ.10 ஆயிரம் வழங்குவது சிறப்பு. பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைந்து ஓய்வு பெற்றவர்களுக்குத் தமிழ்நாடு அரசு கருணை ஓய்வூதியம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பதும் சிறப்பு. இந்த விதி ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை. அரசு ஊழியர்கள் இறந்தால் 25 இலட்சம் பணிக்கொடையும், குடும்ப ஓய்வூதியம் 60% வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது ஒன்றிய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் இல்லை. ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஒன்றிய அரசு அறிவித்த ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தில் பல மாற்றங்களையும் ஊழியர்களுக்குப் பலன்களையும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது வரவேற்புக்குரியதா? என்பதைச் சங்கங்களின் கேட்டுக்கொள்ளுங்கள்” என்று முடித்துக்கொண்டார்.
தமிழ்நாடு முதல் அமைச்சரை நேரில் சந்தித்து, AUT பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பேராசிரியர் காந்திராஜ் சங்கத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்தார். முதல்வரின் அறையைவிட்டு வெளியே வந்த பேராசிரியர் காந்திராஜ் அங்குசம் செய்தி இதழிடம் பேசும்போது, “தமிழ்நாடு முதல் அமைச்சர் அறிவித்துள்ள உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் வரவேற்புக்குரிய ஒன்றுதான். போராடிய சங்கங்களின் சார்பில் முதல் அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. நானும் நன்றி தெரிவித்தேன். 20 ஆண்டு காலம் ஓய்வூதியத்திற்காக நடைபெற்ற போராட்டங்கள் தற்போது முடிவுக்கு வந்துள்ளன. முதல்வர் பேசும்போது, “கலைஞரைப் போன்று நானும் அரசு ஊழியர்களையும் ஆசிரியர்களையும் நட்பு சக்தியாகவே பார்க்கிறேன்“ என்று குறிப்பிட்டார். முதல்வரின் அறிவிப்பு ஆசிரியர் சங்கங்களுக்கு மனநிறைவைத் தந்திருக்கின்றது. அங்குசம் செய்தி இதழும் ஜனவரி முதல் நாள் வெளிவந்த இதழில் அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கை காலம் கடத்தாமல் நிறைவேற்ற வேண்டும் என்று முதல் அமைச்சருக்குத் திறந்த மடல் எழுதியமைக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டார்.
அரசு ஊழியர் ஆசிரியர் ஓய்வூதியக் கோரிக்கை 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சி காலத்திலும் 2 ஆண்டுகளும், 2006-11 கலைஞர் ஆட்சியில் 5 ஆண்டுகளும், ஜெயலலிதா, எடப்பாடி பழனிச்சாமி காலத்தில் 10 ஆண்டுகளும், முக ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் 4 ஆண்டுகள் வரை என கிடப்பில் போடப்பட்டு வந்த இந்தப் பிரச்சனையை திமுக அரசு முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது. ஸ்டாலின் ஆட்சியில் குறையாகச் சொல்லப்பட்ட அரசு ஊழியர் ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்றியிருப்பதன் மூலம் திமுக அரசு தேர்தல் களத்தில் கூடுதல் பலம் பெற்றுள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.