விடுபட்டு போன 3 ஆண்டுகள் பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படும் – துணைவேந்தர் உறுதி !
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா 2021, 22, 23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து நடத்தப்படுகின்றது. – பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.செல்வம் உறுதி வழங்கினார்
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகத் தற்போதைய முனைவர் ம.செல்வம் அவர்கள் 2021 பிப்ரவரி மாதத்தில் பதவியேற்றுக் கொண்டார். 2021, 22, 23 ஆகிய ஆண்டுகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள பெரியார் உயராய்வு மையம் சார்பில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படவில்லை.
இது குறித்துச் சில நாள்களுக்கு முன்பு பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரைக் கண்டித்தும், தந்தை பெரியார் பிறந்தநாள் விழா நடத்தப்பட வேண்டும் என்று புலனம் வழி செய்திகள் பரப்பப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, ஜூலை 5 மற்றும் 6ஆம் நாள்களில் நாளிதழ்களில், “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2023ஆம் ஆண்டுக்கான பெரியார் பிறந்தநாள் விழா வரும் செப்.17ஆம் தேதி கொண்டாடப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. பெரியாரியப் பற்றாளர்கள் மற்றும் திருச்சியைச் சேர்ந்த தமிழ் அமைப்பினர், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் விடுபட்டுப்போன 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன்வைத்துத் திருச்சியில் வரும் 17.07.2023 ஆம் நாள் “3 ஆண்டுகளுக்கும் பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடாத பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த ஆலோசனைகள் நடைபெற்றுவந்தன.
இந்நிலையில், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (AUT) மற்றும் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகம் (TNGCTA) இணைந்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், ‘பாரதிதாசன் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழு (JCC-BARD) என்று அமைப்பின் தலைவராக 2006 – 2011ஆம் ஆண்டு வரை இருந்த பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் இன்று (10.07.2024) புதன்கிழமை மாலை 4.00 மணியளவில் பல்கலைக்கழகத் துணைவேந்தரை நேரில் சந்தித்து, தமிழர் அறிவியக்கப் பேரவை, குண்டூர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பிலும், ‘தந்தை பெரியார் பிறந்தநாள் விழா 2021, 22, 23, 24 ஆண்டுகளுக்கும் நடத்தப்படவேண்டும். அந்தந்த ஆண்டுகளில் பெரியாரியச் சிந்தனையாளர்களுக்கும் ‘பெரியார் பணப் பரிசு தொகை’ வழங்கப்படவேண்டும் என்று வேண்டுகோள் மடல் கொடுத்தார்.
வேண்டுகோள் மடலைப் பெற்றுக்கொண்ட துணைவேந்தர், முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்களின் வேண்டுகோளை ஏற்று ‘பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் வரும் செப்.17ஆம் நாள், 2021,22,23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து நடத்தப்படும் என்றும் அந்தந்த ஆண்டுகளுக்குரிய பெரியாரியச் சிந்தனையாளர்களுக்குரிய பரிசுத்தொகையும் வழங்கப்படும் என்று உடனே அறிவித்து உத்தரவு பிறப்பித்தார்.
வேண்டுகோள் மடல் கொடுத்த பாரதிதாசன் பல்கலைக்கழகக் கூட்டுக்குழுவின் மேனாள் தலைவர் முனைவர் தி.நெடுஞ்செழியன் துணைவேந்தருக்கு நன்றியைத் தெரிவித்துக்கொண்டார். இச் சந்திப்பின்போது முனைவர் தி.நெடுஞ்செழியன், திருச்சி துப்பாக்கி அன்பழகன் எழுதிய ‘சமுதாய மாற்றத்தில் தந்தை பெரியார்’ என்னும் நூலைத் துணைவேந்தருக்கு வழங்கிச் சிறப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, திருச்சியில் வரும் 17ஆம் நாள் பெரியாரியப் பற்றாளர்கள் சார்பில் “பாரதிதாசன் பல்கலைக்கழகத்தைக் கண்டித்து” நடத்துவதாக இருந்த ஆர்ப்பாட்டம் கைவிடப்படுகின்றது என்பதையும் முனைவர் தி.நெடுஞ்செழியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், முனைவர் தி.நெடுஞ்செழியன் பாரதிதாசன் பல்கலைக்கழகம் தந்தை பெரியார் பிறந்தநாளை 4 ஆண்டுகளுக்கும் நடத்தவேண்டும் என்று முதல் அமைச்சருக்கும் இணையம் வழியாக புகாரைப் பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
– ஆதவன்
கட்டுரை சிறப்பு
மகிழ்ச்சி சார்