கலைஞர் எதிர்ப்பையே தனது அரசியலாகக் கொண்டு செயல்பட்டு முடங்கிப் போனவர் ஐயா நெடுமாறன். அவரது வார்ப்புகள் இன்றும் வன்மம் கக்கிக் கொண்டுதான் இருக்கின்றன. 91 வயதாகும் பெரியவர் நெடுமாறன் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் ஐயா நல்லகண்ணுவின் நூற்றாண்டு விழாவிற்காக அழைப்பு விடுக்க வந்திருக்கிறார் என அறிந்ததும் வாசலில் போய் நின்று அவரை வரவேற்று கைத் தாங்கலாக உள்ளே அழைத்து வந்து உட்கார வைத்துப் பேசுகிறார் மாண்புமிகு முதலமைச்சர். அந்த உயர்ந்த பண்பை மதித்துப் போற்றுகிறார் பெரியவர் நெடுமாறன்.
பெரியவர் நெடுமாறன் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தன் வீட்டில் தங்கி இருந்த தமிழ்த் தென்றல் திரு.வி.க, குளித்து முடித்து வந்த போது அவருக்காக விபூதி கிண்ணத்தை ஏந்தி நின்றவர் பெரியார். இறை நம்பிக்கை கொண்ட தமிழறிஞர் தன் வீட்டிற்கு வந்திருக்கும் பொழுது அவருக்குரிய மரியாதை தர வேண்டும் என்பதே திராவிடப் பண்பு.
மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு என்ற பேரறிஞர் அண்ணா, மாற்றுக் கருத்துக் கொண்ட தலைவர்களுக்கும் நினைவிடங்கள்- மணிமண்டபங்கள்-சிலைகள் அமைத்த முத்தமிழறிஞர் கலைஞர் என்று தொடரும் திராவிட பாரம்பரியத்தில், நாகரீகத்தின் உச்சமாக தனது பண்பை வெளிப்படுத்தி இருக்கிறார் திராவிட மாடல் நாயகன்.
உதைப்பேன், உடைப்பேன், ஒழிப்பேன் என்று நடக்கவே நடக்காததை பேசுபவர்களும், அவர்களை நம்பி வீணாய் போனவர்களும் கடைசியாக வந்து நிற்பார்கள் மரியாதைப் பண்பு உள்ள இடத்தில்.