3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்களின் அறிவுமரபு மீட்டெடுக்கப்பட வேண்டும் ! பெருஞ்சித்திரனார் மகன் பொழிலன் பேச்சு !
திண்டுக்கல், காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் 10.08.2026 அன்று சிறப்புச் சொற்பொழிவு நடைபெற்றது. எழுத்தாளரும் பெருஞ்சித்திரனாரின் மகனுமாகிய பொழிலன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் எழுத்தும் வாழ்க்கையும்” என்னும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். தமிழ்த்துறையின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் மு.செல்வக்குமார் வரவேற்புரையாற்றினார்.
தமிழ், இந்தி, இந்திய மொழிகள் மற்றும் கிராமியக் கலைகள் புலமுதன்மையர் மற்றும் தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் தனது தலைமையுரையில் “இந்தியா விடுதலையடைந்தபோது எழுந்த தேசிய உணர்வோடு நாடு முழுவதும் மொழியுணர்வும் ஒருங்கே கிளர்ந்து எழுந்தது. அதன் விளைவாக தனித்தமிழ் இயக்கம் உருபெற்று வளர்ந்தது. அதன் முன்னோடிகளில் ஒருவரான பெருஞ்சித்திரனாரின் தனித்தமிழ் ஈடுபாடும் அதற்கான அவரது பணிகளும் அளப்பரியது. அந்த வகையில் அவரது படைப்புகள் இளைய தலைமுறையினர் கற்று அறியும் வகையில் அவரது மகனால் தொகுக்கப்பட்டிருப்பது பாராட்டுதற்குரியது” என்றார்.
எழுத்தாளர் பொழிலன் தனது உரையில் பெருஞ்சித்திரனார் தனது அரசுவேலையை உதறிவிட்டு மொழிப்போரில் ஈடுபட்டது உள்ளிட்ட அவரது வாழ்க்கைக் குறிப்புகளைப் பகிர்ந்துகொண்டதோடு அவரது படைப்புகளின் தனிச்சிறப்பையும் எடுத்துரைத்தார்.
மேலும், “500 ஆண்டுகளுக்கு முந்தைய ஐரோப்பியரின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டு வியக்கும் நாம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர்கள் வானியல் அறிவு பெற்றிருந்தமையை மறந்து விடுகிறோம். தமிழர்களின் கோள்கள் குறித்த புரிதலை அவர்கள் மாதங்களைப் பகுத்திருக்கும் முறையின் மூலமும் கிழமைகளுக்கு வைத்திருக்கும் பெயர்கள் மூலமும் அறிந்துகொள்ளலாம். கீழடி, அழகன்குளம் உள்ளிட்ட அகழ்வாராய்ச்சிகள் கருவிகள் குறித்த அவர்களது அறிவைப் புலப்படுத்துகின்றன. அனைவரையும் சமம் என்பதே தமிழரின் அறம் என்பதைத் திருக்குறள் வலியுறுத்துகிறது. தமிழரின் வாழ்வியலோடு அறவுணர்வும் இணைந்திருந்தது. ஆனால், இன்றைய சூழலில் தமிழர்களிடையே மொழியுணர்வு குறைந்து வருகிறது. தமிழ் மொழியில் பெயர்வைத்துக் கொள்பவர்களை அரிதினும் அரிதாகவே காணமுடிகிறது. தமிழர்களின் அறிவுமரபு மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்றார்.
இதனைதொடர்ந்து, மதுரை புரட்சிப்பாவலர் மன்றத் தலைவர் பி.வரதராஜன் நிகழ்வில் பங்கேற்று வாழ்த்தியதோடு பெருஞ்சித்திரனாரின் படைப்புகளை உள்ளடக்கிய 16 தொகுதிகளைத் தமிழ்த்துறை நூலகத்திற்கு நன்கொடையாக வழங்கினார். தமிழ்த்துறையின் கௌரவ விரிவுரையாளர் முனைவர் ச.ஜோஸ்பின் செல்வி நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ், இந்தித்துறையைச் சேர்ந்த பேராசிரியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள், முதுகலை மாணவர்கள் பார்வையாளர்களாகப் பங்கேற்றனர்.
— அங்குசம் செய்திப்பிரிவு







Comments are closed, but trackbacks and pingbacks are open.