”பாமக என்றாலே தலைவர் அன்புமணி தான்” – மாநில பொருளாளர் திலகபாமா உறுதி !
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் வரும் 29ஆம் தேதி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நடைபயணம் மேற்கொண்டு, மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். இதற்கான முன்னேற்பாடுகளைச் செய்வதற்காக, பாமக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில பொருளாளர் திலகபாமா தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில், அன்புமணியின் வருகையை முன்னிட்டு நடைபெறும் நடைபயணம் மற்றும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற தேவையான ஏற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனைகள் நடைபெற்றன. இதில் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய செயலாளர்கள், கிளை நிர்வாகிகள் மற்றும் பல்வேறு பிரிவினரின் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திலகபாமா, “அன்புமணி அவர்கள் 29ஆம் தேதி சிவகாசி வருகை தருகின்றார். அந்நாளில் நடைபெறும் நடைபயணத்தில் மற்றும் பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று அவருக்கு ஆதரவு அளிப்பார்கள். பாமக தலைவர் யார் என்ற விவகாரத்தில் ஜி.கே.மணி கூறும் கருத்துகள் முற்றிலும் தவறானவை. அன்புமணியை தலைவராக தேர்வு செய்த பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையமே ஒப்புதல் அளித்துள்ளது. அந்த ஆவணத்தை நாங்கள் ஏற்கனவே வெளியிட்டுள்ளோம். எனவே, அவர்களின் குற்றச்சாட்டுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. அவர்கள் மேலும் என்ன செய்ய விரும்புகிறார்களோ, செய்யட்டும்” என்றார்.

அவர் மேலும், “பாமக என்பது ஒரே கட்சி தான். அன்புமணியை தலைவராக மக்கள் நம்பத் தயாராகிவிட்டார்கள். மருத்துவர் ராமதாஸ் தொடர்ந்து கூறிவரும் கருத்துகளைப் பொருட்படுத்தாமல், நாம் மக்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அன்புமணியின் தலைமையில் பாமக வலுவாக வளர்ந்து வருகிறது” என்றும் தெரிவித்தார்.
— மாரீஸ்வரன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.