திறந்த மடல் ! பேச்சில் இருந்த வீரம் உள்ளடக்கத்தில் இல்லையே !
“ஒரு விரலால் ஒருவரைக் குற்றம் சுமத்தும்போது, உங்களின் மூன்று விரல்கள் உங்களைக் குற்றம் சுமத்துகின்றன”
பாமக தலைவர் அன்புமணி அவர்களுக்கு, வணக்கம். நலம். நலம் வாழ்க.
கடந்த 23ஆம் நாள் மதுராந்தகத்தில் பிரதமர் மோடியை மேடையில் வைத்துக்கொண்டு ஒரு ஆளும்கட்சியை எப்படி எதிர்க்கட்சி விமர்சனம் செய்யவேண்டுமோ? அப்படி விமர்சனம் செய்து பேசிய உங்கள் உரையைச் சமூக ஊடகங்கள் பாராட்டின. அதே நேரத்தில் விமர்சனமும் செய்துள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
வன்னியர்களுககு 10.5% மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கி 2021 தேர்தல் அறிவிப்புக்கு முன் அவசரஅவசரமாக சரியான ஆய்வுகளின்றி, அதிமுக 10.5% உள் ஒதுக்கீட்டை அறிவித்தது. இந்த உள்ஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், “சட்டப்படி செல்லாது” என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பளித்த நிலையில், உச்சநீதி மன்றத்தில் வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டது.
அங்கே, தமிழ்நாட்டில் அருந்ததியர் சமூகத்திற்கு 3% உள்ஒதுக்கீடு கருணாநிதி ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட செய்தி தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கருணாநிதி உள்ஒதுக்கீடு வழங்கிடுவதற்குத் தேவையான அத்தனை ஆவணங்களையும் இணைத்துள்ளார். 10..5% இடஒதுக்கீட்டில் தமிழக அரசு (எடப்பாடி அரசு) எதையையும் இணைக்கவில்லை. “அவசர கோலத்தில் அள்ளித் தெளித்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீடு சட்டப்படி செல்லதக்கது அல்ல” என்று தீர்ப்பளித்தனர்.
உடனே அதிமுக கூட்டணியிலிருந்து பாமக விலகியது. புதிதாக பொறுப்பேற்ற திமுக அரசிடம் 10.5% வன்னியருக்கான உள்ஒதுக்கீட்டை நிறைவேற்றவேண்டும் என்று பாமக சார்பில் (தந்தை மகன் இணைந்திருந்த காலம்) கோரிக்கை வைக்கப்பட்டது. “எடப்பாடி வன்னியர் இனத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்” அச்சில் ஏற்றமுடியாத அளவுக்கு வசைச் சொற்களால் எடப்பாடியைக் கடுமையாகத் தாக்கி பேசினீர்கள். ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தினால் உள்ஒதுக்கீடு சாத்தியம் என்று சொன்னபோது நீங்கள் திமுகவையும் கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். தற்போது ஒன்றிய அரசு 2027 ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவித்துள்ளது. இதில் திமுக செய்த ’துரோகத்தை’ உங்களின் எழுச்சி உரையில் குறிப்பிட மறந்துவிட்டீர்களே?
ஊழல் ஆட்சி திமுக என்று கடுமையாக விமர்சனம் செய்தீர்கள். சில அரசு அதிகாரிகள் இலஞ்சம் பெற்று கைதாகினர் என்ற நாளிதழ் செய்திகளை வைத்துக்கொண்டு, திமுக ஆட்சியை ஊழல் ஆட்சி என்று விமர்சனம் செய்தீர்கள். அதே நேரத்தில் நீங்கள் கூட்டணி அமைத்துள்ள அதிமுகவின் பொதுச்செயலாளர் செல்வி ஜெ.ஜெயலலிதா ஆட்சி, அதிகாரத்தில் இருந்த 1991 – 96 காலக்கட்டத்தில் ஊழல் செய்தார் என்று 2001இல் தண்டிக்கப்பட்டவர். பின் உச்சநீதிமன்றத்திலும் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்றே அறிவிக்கப்பட்டார். அந்த அதிமுக “அம்மாவின் ஆட்சியை அமைப்போம்” என்று கூறி வரும் கூட்டணியில் உங்களை இணைத்துக்கொண்டு பேசுவது என்பது எப்படி உள்ளது தெரியுமா? “நீ ஒருவனை ஒருவிரலால் குற்றவாளி என்று சுட்டும்போது உன் மூன்று விரல்கள் உன்னைக் குற்றவாளி என்று சுட்டுகின்றது‘” என்ற பேரறிஞர் பொன்மொழிதான் நினைவுக்கு வருகின்றது.
தமிழ்நாடு போதை மாநிலமாக மாறிவிட்டது. மது, போதை, கஞ்சா போதை, ஹெராயின் போன்ற போதைப் பொருட்களால் இளைஞர்கள் அடிமையாக மாற்றிவிட்டது என்றீர்கள். வெளிநாடுகளிலிருந்து வரும் போதைப் பொருள்களைத் தடுக்கவேண்டிய அதிகாரம் ஒன்றிய அரசிடம் உள்ளது. பான்மசலா போன்ற உள்நாட்டு புகையிலை மூலம் தயாரிக்கப்படும் போதைப் பொருள்கள் அனைத்தும் வடநாடுகளிலிருந்தான் தமிழ்நாட்டு வருகின்றது. கடைகளில் விற்கப்படுகின்றது. இதற்கு அங்கீகாரம் வழங்கிய ஒன்றிய அரசின் மீது உங்கள் கோபம் ஏன் திரும்பவில்லை? மது ஒழிப்பைப் பற்றி பேசும் நீங்கள், உங்களின் போராட்ட நிகழ்வுக்குப் பின்னர் பாமக தொண்டர்கள் டாஸ்மாக்கை முற்றுகையிடுவதை அறிவீரா? பாஜக கூட்டணியில் உள்ள பாண்டிச்சேரியில் மதுவிலக்கு நடைமுறையில் இல்லையே. அங்கே ஒருமுறை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் வென்றது உங்களுக்கு நினைவுக்கு வராது. அந்தப் பாண்டிச்சேரியில் மதுவிலக்கை அமல் செய்ய போராட்டம் நடத்தியது உண்டா?
இறுதியாக, உதயநிதியை முதல்வராக்க திமுக இந்தத் தேர்தலில் முயல்கிறது. திமுக வாரிசு அரசியலை ஊக்குவிக்கின்றது என்று சொல்லும் நீங்கள் வாரிசு அரசியலின் வழியாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்தீர்கள். ஒன்றிய அரசில் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருந்தீர்கள். எல்லாம் சரி, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக இருந்து நீங்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக எத்தனை முறை குரல் கொடுத்தீர்கள்? பட்டியலிட முடியுமா? நீங்கள் எத்தனை நாள் அவைக்குச் சென்றீர்கள் என்பதை வெளியிட்டு சமூக ஊடங்கள் உங்களை வறுத்தெடுத்தது நினைவுக்கு வரவில்லை. உங்கள் பேச்சில் வீரம்….. உங்களின் உரையின் உள்ளடக்கத்தில் இல்லையே என்பதை தமிழ்நாட்டின் மக்களின் சார்பில் சுட்டிக்காட்டுகின்றோம்.
— ஆதவன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.