கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்” – காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய விழாவில் பாராட்டு
கவிக்கோ அப்துல்ரகுமான் குழந்தைகளாக்குமானவர்” காவிரிக் கவித்தமிழ் முற்றம் நடத்திய விழாவில் பாராட்டு !
கவிக்கோ அப்துல் ரகுமான் மரபுக் கவிதை, கவியரங்கக் கவிதை, புதுக்கவிதை என மூன்று வகை கவிதையிலும் கோலோசியவர். ஹைக்கூ கவிதைகளை தம்முடைய பால்வீதி என்கிற நூலில் அறிமுகப்படுத்திய இவர், ஆலாபனை நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர். கஜல் கவிதைகளைத் தமிழுக்கு அறிமுகப்படுத்திய பெருமைக்கும் உரியவர். இவரது மறைவுக்குப் பிறகு இவருடைய சுவைஞர்களால் பல முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
திருச்சிராப்பள்ளி தூய வளனார் கல்லூரித் தமிழாய்வுத்துறைப் பேராசிரியரான முனைவர் ஜா.சலேத் கவிக்கோ கவிதைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். அவரது கவிதைகளை ஆய்வு செய்து பன்னாட்டு மற்றும் தேசியக் கருத்தரங்குகளில் பல ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தவர். அந்தத் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர். திருச்சிராப்பள்ளியில் 2020 ஆம் ஆண்டு முதல் காவிரிக் கவித்தமிழ் முற்றம் என்கிற ஒரு இலக்கிய அமைப்பை தம் இணையரோடு இணைந்து நடத்தி வருகிறார்.

கல்லூரி இளைஞர்களுக்கானப் போட்டிகள், பயிலரங்குகள், கவியரங்கங்கள், கருத்தரங்குங்கள், ஆய்வரங்குகள் உள்ளிட்ட முன்னெடுப்புகளை எடுத்து வருகிற காவிரிக் கவித்தமிழ் முற்றம் சார்பில் இளையோருக்குக் கவிக்கோவைக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் ‘கவிக்கோ : ஞானத்தால் நிறைந்த வானம்’ என்கிற மையப் பொருளில் மாதம் ஒரு நிகழ்வாக 25 நிகழ்வுகளை நடத்த திட்டமிட்டு ஏற்கனவே 10 நிகழ்வுகள் நிறைவு பெற்றிருக்கின்றன.
நவம்பர் 14 குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ‘கவிக்கோ அப்துல் ரகுமான் சிறார்களுக்குமானவர்’ என்கிற மையப்பொருளில் திருச்சிராப்பள்ளி அங்குசம் அலுவலகத்தில் அமைந்துள்ள கவிஞர் நந்தலாலா அரங்கத்தில் குழந்தைகள் தின விழாக் கொண்டாடப்பட்டது.
சீர்காழி செம்மொழி தமிழ் கூடத்தின் இயக்குநர் மகா. இராஜராஜ சோழன் தலைமையேற்று கவிக்கோவிற்கும் குழந்தைகளுக்குமான உறவுகளை அவரின் எழுத்துக்கள் வழி எடுத்துரைத்தார்.
அருள் சகோதரர் ஏ.எஸ். ஆரோக்கியதாஸ் அவர்களின் நினைவாக இரண்டாம் ஆண்டாக காவிரிக் கவித்தமிழ் முற்றும் வழங்கிய ‘முற்றம் சிறார் விருது 2025″ புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பதினொன்றாம் வகுப்பு மாணவி மா.பா.நெகாசினி அவர்களுக்கு வழங்கப்பட்டது. முனைவர் ஜா.சலேத் அறிமுக உரையாற்றினார்.

முற்றம் சிறார் விருதை பால பிரஸ்கார் விருதாளரும், குழந்தைகளுக்காக எண்ணற்ற படைப்புகளைத் தந்திருக்க கூடிய எழுதியிருக்ககூடிய கவிஞருமான மு.முருகேஷ் வழங்கிச் சிறப்பித்தார். அவர் சிறப்புரையில், பெற்றோர்களுக்கும் சமூகத்திற்கும் பிள்ளை வளர்ப்பு குறித்தும் பிள்ளைகளின் மீதான பார்வை குறித்தும் கவிக்கோ எழுத்துக்களின் வழி ஆற்றிய உரையாடல்களைத் தொகுத்து வழங்கினார்.
‘கவிக்கோ அப்துல் ரகுமான் சிறார்களுக்குமானவர்’ என்கிற மையபபொருளில் உரையாற்றிய ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சியின் ‘தமிழ் எங்கள் உயிர்மெய் சுட்டிகள்’ நிகழ்வின் வெற்றியாளர் மா.பா. நெகாசினி புத்தகங்களே குழந்தைகளைக் கிழித்து விடாதீர்கள் என்கிற அப்துல் ரகுமானின் கருத்தை மையமிட்டு உரையாற்றினார் .
காவிரிக் கவித்தமிழ் முற்றத்தின் செயல் இயக்குனர் திருமதி லி.மெர்சி டயானா நன்றியுரை ஆற்றினார். தந்தை பெரியார் ஈவேரா கல்லூரியின் மாணவர் தமிழி விமலா நிகழ்ச்சிகளை நெறியாள்கை செய்தார். கவிஞர் கலியமூர்த்தி, கவிஞர் திருவைக்குமரன், சிகரம் பதிப்பக நிறுவனர் லியோ, பேராசிரியை பாக்கிய செல்வ ரதி, திரு.அன்பு, ஆசிரியர்கள் மு.மாரியப்பன், ரா.பானுமதி உள்ளிட்ட பலர் விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
– சே.பிரான்சிஸ் ஆன்டனி







Comments are closed, but trackbacks and pingbacks are open.