கவிஞர் தமிழ் ஒளியின் படைப்பும் –  பாராட்டுகளும் !

3

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தமிழ்ச் சமூகத்தில் பாவேந்தர் பாரதிதாசனின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர் கவிஞர் தமிழ் ஒளி. தினமும் ஒரு கவிதை எழுதி பாவேந்தர் பாரதிதாசனிடம் காண்பித்துப் பாராட்டையும் பெற்றார். பாவேந்தர் பாரதிதாசனின் பரிந்துரை பெற்றுத் தஞ்சை கரந்தைத் தமிழ்க் கல்லூரியில் தமிழ் பயின்று வந்தவர். கல்லூரியில் படிக்கும் போது சில கசப்பான அனுபவங்கள் அவருக்கு ஏற்பட்டது. கவிஞர் தமிழ் ஒளி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால் அவருக்கு சாதிய ஒடுக்கு முறைகளும் அடக்குமுறைகளும் நடந்திருக்கின்றது. அதன் காரணமாகவே ஒராண்டு காலம் படித்தவர் அதற்குப் பிறகு படிக்காமல் தன்னுடைய படிப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டார்.

படிப்பைப் பாதியிலேயே முடித்துக் கொண்டாலும் கவிஞர் தமிழ் ஒளிக்கு அங்கிருந்த நண்பர்களோடு நட்பு தொடர்ந்திருக்கிறது. அந்த நட்பினுடைய அடையாளமாக, 12.12.1949 இல் நண்பர் பாலசுந்தரத்திற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அந்தக் கடிதம் மிகவும் முக்கியமான ஒரு கடிதமாக இருந்திருக்கிறது. ஏன் என்று சொன்னால் கவிஞர் தமிழ் ஒளி தொடக்கத்தில் திராவிட இயக்கத்தில் ஈடுபாடு கொண்டிருந்தவர்.

உலகில் No1 ரோட்டரி இந்தியா-Vision 2030 மூலம் மாற்றும் திட்டம்-MMM முருகானந்தம் தகவல்

கவிஞர் தமிழ் ஒளி
கவிஞர் தமிழ் ஒளி

சென்னைக்குச் சென்ற பிறகு சிவப்புச் சிந்தனைகளால் ஈர்க்கப்பட்டு மார்க்ஸியம் கற்கிறார். தமிழ் மட்டுமே அறிந்த அவர் எவ்வளவு அழகாக மார்க்ஸியத்தைக் கற்றிருக்கிறார் என்பதை அவர் தன்னுடைய நண்பர் பாலசுந்தரத்திற்கு எழுதிய கடிதம் ஒரு சாட்சியாக இருக்கின்றது. தமிழ் ஒளிக்கு இருந்த மார்க்ஸிய அறிவை அக்கடிதம் வெளிப்படுத்துகிறது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

சென்னைக்கு வந்து மார்க்ஸியம் பயின்று கம்யூனிஸ்ட் கட்சியில் எட்டு ஆண்டு காலம் செயல்பட்ட கவிஞர் தமிழ் ஒளி தன் கவிதைகளில் சாதியப் பிரச்சனைகளை அதிகமாக அந்தக் காலக்கட்டத்தில் தான் எழுதியிருக்கிறார். தமிழ் ஒளிக்கு அடங்காத தமிழ் உணர்வு இருந்திருக்கிறது. அந்தக் காலத்தில் தமிழ் அறிஞர்கள், அரசியல் பிரமுகர்கள் அவர் மீது பற்றுடையவர்களாக இருந்திருக்கிறார்கள்.

தினமணி தமிழ்மணியில் திரு. வையவனின் வாழ்த்து

தமிழ் ஒளி கவிதையில் இனிய சந்த நயம், மனசில் இன்ப அதிர்ச்சியூட்டும் கற்பனை, சமுதாயப் பார்வை என்ற மூன்றும் இணைந்ததாக ஒளி வீசுகிறது. சங்க காலக் கவிதை முதல் பாரதிதாசன் வரை கற்றவர் தமிழ்ஒளி. “ஜனயுகம்” பத்திரிக்கை நடத்தியவர். “முன்னணி” என்ற வார இதழில் துணையாசிரியராகப் பணியாற்றினார். ‘விதியோ வீணையோ’ என்ற சிலப்பதிகாரத்தை அடிப்படையாக வைத்து ஓர் இசைநாடகக் காவியம் இயற்றினார்.

“காவிரி மங்கை நடந்து கடற்கரை

கண்டு குளிக்குமிடம்

பூவிரி தாழைக் கொன்றவன் ஆடை

களைந்து புனைந்த இடம்

தீவு நெடுந்திரை யோடு கடல்விளை

யாடிய நெய்தல் இடம்

யாவும் விதிக்கரை யாகு மெனக்கடல்

ஆடிய காலை இடம்”

என்று அந்த இசை நாட்டிய நாடகத்தில் வரும் பாட்டு அவரது கவிதை ஓட்டம் முழுவதிலும் கம்பரின் சந்த நயம் செல்வாக்கு இருந்தது. கம்பரின் இதய நாடியைச் சரியாகத் தொட்டு அந்த மரபின் கொழுந்தை ஏந்திச் செல்லும் போக்கு இருந்தது. என விவரித்துள்ளார். மேலும் தமிழ் ஒளியின் கவிதைகளில், ‘மழைத்துளி’, ‘ஞாயிறு வணக்கம்’ ‘வராதீர் வராதீர்’, ‘பந்தாடுகின்றாள்’, ‘வள்ளைப்பாட்டு’, ஆகியவற்றின் தன்மைகளை விதந்தோதுகிறார் என்று தினமணி ஏட்டில் தமிழ்மணியில் 1991இல் கவிஞர் வையவன் அவர்கள் வாழ்த்திப் பதிவு செய்திருக்கிறார்.

கவிஞர் தமிழ் ஒளி எனது ஆசான் ஜெயகாந்தன் பாரட்டு          

“ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலில் ஜெயகாந்தான்  அவர்கள் கவிஞர் தமிழ் ஒளி “எனது ஆசான்” என்று பாராட்டி எழுதியுள்ளார். “தனிப்பட்ட முறையில் எனது தோழனாகவும் என்னோடு விவாதித்துக் கருத்துகளை உருவாக்குகிற ஆசானாகவும் திகழந்தவர் கவிஞர் தமிழ் ஒளி, 1947ஆம் ஆண்டு சுதந்திரத்தினத்தன்று கம்யூனிஸ்ட் கட்சி ஆபிஸிக்குக் கவிஞர் குயிலனும் கவிஞர் தமிழ் ஒளியும் வந்த போது முதன் முதலில் நான் அவரைச் சந்தித்தேன்.

எழுத்தாளர் ஜெயகாந்தன்
எழுத்தாளர் ஜெயகாந்தன்

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தமிழ் ஒளி பெரியார் அவர்கள் சுதந்திர நாளைத் துக்க நாளாகக் கொண்டாடுமாறு கூறி கூற்றை ஏற்க முடியாதவராய் தோழர் ஜீவாவிடம் வந்தார். அதன் பின்னர் அவர் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் மாறினார். இக்காலத்தில் நான் கட்சி ஆபிஸில் வாழ்ந்து கொண்டிருந்தேன் அப்பொழுது அடிக்கடி கவிஞர் தமிழ் ஒளியைச் சந்தித்துப் பழக நேர்ந்தது.

எனது கலையுலகப் பிரவேசத்துக்கு அதிலும் விசேஷமாய் இலக்கிய உலகப் பிரவேசத்துக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருந்து உதவியவர் கவிஞர் தமிழ் ஒளியே ஆவார். நான் அறிந்த இன்று எனக்கு நெருக்கமாக இருக்கிற பல நண்பர்கள், அவர்கள் கலை இலக்கிய உலகாம் சம்பந்தப்பட்டோராக இருப்பின், அவர்களை ஒன்று கம்யூனிஸ்ட் கட்சி மூலமாக அறிந்தேன் அல்லது கவிஞர் தமிழ் ஒளி மூலமாக அறிந்தேன் என்று குறிப்பிட்டு பாராட்டுகிறார்.

கவிஞர் தமிழ் ஒளியின் நட்பு

செ.து. சஞ்சீவி கவிஞர் தமிழ் ஒளியுடன் நெருக்கிப் பழகியவர். அவருக்குத் துணையாக இருந்தவர். அவருடைய படைப்புகள் அனைத்தையும் சேகரித்துத் தமிழ் உலகிற்கு வெளிக்கொண்டு வந்தவர். “இளமைக்காலத்தில் தமிழியக்கம் சார்ந்த நான் புரட்சிக் கவிஞன் பாரதிதாசன் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தேன். அதன் வழி பாரதிதாசன் மாணவரே! தமிழ் ஒளி என அறிந்து அவர் படைத்த ‘வீராயி’ குறுங்காப்பியத்தைப் படித்தேன். அக்காப்பியத்தில் இயற்றியுள்ள கவிதைகளில் வீறுடன் வெளிப்பட்ட புயலில் சீற்றமும் பொங்கு மாங் கடலின் கொந்தளிப்பும் கனன்ற நெருப்பின் கனலும் என்னை வெகுவாகப் பாதித்ததை உணர்ந்தேன்” என்றும்,

கவிஞர்  செ.து. சஞ்சீவி
கவிஞர்  செ.து. சஞ்சீவி

“காலங்காலமாக உழைத்து உழைத்து ஏமாற்றங்களையே எதிர் கொண்டு வாழும் மக்களின் துன்ப துயரங்களையே உணர்வுபூர்வமாக ஏற்றுக் காவியம் படைத்த மக்கள் கவிஞராகவே தமிழ் ஒளியை அறியச் செய்தது. மனம் கவர்ந்த அந்த மகா கவிஞரைத் தோழர் ரகுபதி அவர்கள், 1954 இல் எங்கள் அறைக்கு அழைத்து வந்து அறிமுகம் செய்து வைத்தபோது வியப்பும் மகிழ்ச்சியும் மேலிட அவரை வரவேற்றோம். அன்று தொடங்கி அவர் மறையும் காலம் வரை அவருக்கு நண்பனாகவும் நம்பிக்கைக்கு உரியவனாகவும் விளங்கி நட்புக் கடனாற்றும் பேற்றினை நான் பெற்றேன்” என்று செ.து. சஞ்சீவி பாராட்டி குறிப்பிட்டுள்ளார்.

“1948 இல் சுதந்திரத் தினத்தையொட்டி சென்னை வானொலியில் ஒரு கவியரங்கம். அதில் பங்கு பெற பத்திரிக்கையாளர் நாரண துரைக்கண்ணன் பரிந்துரை செய்திருந்தார். பன்மொழிப் புலவர் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் தலைமை. சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் இராமசாமி முன்னிலை. ‘சுதந்திரம்’ என்ற தலைப்பில் நீண்ட கவிதை வாசித்தார் கவிஞர் தமிழ் ஒளி. சுதந்திரப் போராட்ட வரலாறு, வந்த சுதந்திரம் உழைக்கும் வர்க்கத்திற்கு வாழ்வளிக்க வேண்டும் என வலியுறுத்தி கவிதை அமைந்திருந்தது. ஒமந்தூரார் கவிதையை முழுமையாகக் கேட்டுத் தமிழ் ஒளியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். ஆர். நல்லக்கண்ணு பாராட்டு

“பாட்டாளிகளைப்பாடிய பாவலர்” என்ற தலைப்பில் முதல் பாவலராகத் தமிழ் ஒளியைத் தான் குறிப்பிட்டேன். இரண்டாவது, பாவலராக திருமூர்த்தியையும் மூன்றவது, பாவலராக வரதராசனையும் குறிப்பிட்டேன் என்றும், சோவியத் ருஷ்யா ஸ்புட்னிக் விண்கலத்தை விண்வெளிக்கு ஏவி சந்திரனைத் தொட்ட நேரத்தில் “அந்தரத்தில் மேடையமைத்தான்” என்ற பாடலைப் பாடியிருக்கிறார் என்றும்,

“அந்தரத்தில் மேடை அமைத்தார் – அங்கே

அனுப்பிய மின் விசையாற் செய்தி அறிவார்!”

இந்தக் கவிதை 1959 இல் ‘ஜனசக்தி’ இதழில் வெளிவந்தது என்றும், “ஏ செந்தமிழா! என் சகோதரா! நீ எந்தப்பக்கம்! என்ற கேள்வி கேட்டார் தமிழ் ஒளி. துயர் எழுப்பிடும் கொடியவர் பக்கமா? அல்லது துன்பமுற்ரியும் தொழிலாளர் பக்கமா? என்று ஒரு கேள்வியைக் கேட்டு வாழ்நாள் முழுவதும் தமிழ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தார்” என்றும் ஆர். நல்லகண்ணு பாராட்டி மகிழ்ந்துள்ளார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தா. பாண்டியன் பாராட்டு

“சங்க இலக்கிய நடையில் தமிழுக்குப் புத்தாடை அணிவித்து மக்களுக்காகப் பாடிய மகாகவிஞன், கலிங்கத்துப்பரணியின் விறுவிறுப்பையும், கம்பனின் கற்பனை நயத்தையும் தமிழ்ஒளியிடம் ஒருசேரக் காணமுடியும்” என்றும் “அவரது படைப்புகளைப் படிப்போர் எண்ணிக்கைக் குறைவாக இருந்தாலும், அவர்களைப் போர்க்குணம் பெற வைத்தாலே போதும் என்று எழுதியவர் தமிழ் ஒளி.

அநியாயம் கண்டு சாடும் அறத்தின் சீற்றம் அவரது பாடல்களுக்குக் கருவாய் அமைந்தன. “காவியத்தில் பார்த்ததில்லை கண்டறியா ஓர் புதுமை சோவியத்தில் இன்று சுடர்மணிப் பொன்மாளிகையில் ஏற்றி வைத்தார். உன்னை இசைத்த மலர் மாலைகளால் சாற்றி வைத்தார் இன்பம் சமைத்து வைத்தார் எவ்விடத்தும்” என வர்ணிப்பதில், சிகாகோவில் தொடங்கிய போராட்டம் சோவியத் நாட்டில் வென்று தொழிலாளர் வர்க்கத்தைப் பாராட்டி “மே தினம்” நீள் கவிதை முதன்முதலாகப் பாடிய கவிஞர் தமிழ்ஒளி ” என்றும் பல்வேறு அரசியல் சூழ்நிலையில் கம்யூனிச இயக்கம் தடைசெய்யப்பட்ட காலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் இதழான “ஜனசக்தி” என்ற பத்திரிக்கையைக் கவிஞர் குயிலன் அவர்களைக் கொண்டு துவக்கப்பட்டது.

தோழர் தா.பாண்டியன்
தோழர் தா.பாண்டியன்

கவிஞர் குயிலனோடு, கவிஞர் தமிழ்ஒளி பணியாற்றினார். அப்போது மலேசிய கணபதி போன்றவர்களும், மலேசியத் தமிழர்களும் நாடு கடத்தப்பட்டுத் தமிழகத்திற்கு விரட்டப்படுவதோடு, நாட்டை விட்டு வெளியேறாமல் அங்கேயே பதுங்கியிருந்தவர்களுக்குத் தூக்குத் தண்டனை மேற்கொண்டு கொடுக்கப்பட்டது. இக்கொடுமையைக் கண்டித்துத் தமிழ்ஒளி பல்வேறு கவிதைகளை வடித்துக் கொடுத்திருக்கிறார். அவருடைய நூல்களைக் கூட விற்றுவந்த தொகையை மலேசியத் தமிழர்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார்” என்றும் தோழர் பாண்டியன் அவர்கள் பாராட்டிப் பதிவு செய்துள்ளார்.

கவிஞர் தமிழ் ஒளி ஏழை, எளிய, உழைக்கும் மக்களையே சிந்தித்தும் அவர்களோடு வாழ்ந்தும் வந்தவர். அவர்களின் வறுமையையும், வாழ்க்கையும் கண்டு பல படைப்புகளைப் படைத்தவர். தமிழ் ஒளியின் படைப்புகளை பல்வேறு அறிஞர்களும் அரசியல் பிரமுகர்களும் பாராட்டி வாழ்த்தியுள்ளனர். கவிஞர் தமிழ் ஒளியின் படைப்புகளைப் படித்தால் அதில் உள்ள சிந்தனைகள் அவரவரின் மனதில் காந்தம் போல ஒட்டிக் கொள்ளும். தமிழர்கள் வாழும் வரை கவிஞர் தமிழ் ஒளி தமிழ் மண்ணில் வாழ்வார்.

 

—   பேராசிரியர் சீமான் இளையராஜா, தமிழ்ப் பல்கலைக்கழகம்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

3 Comments
  1. K. Ganesan says

    ஆசிரியர் அவர்களுக்கு
    பேரா. முனைவர் க.கணேசன் ஆகிய நான எழுதிய ” தமிழ் வாழும் வரை கவிஞர் தமிழ் ஒளி வாழ்வார் “நூலை சென்னை சிந்தன் புக்ஸ் செப் 2024ல் வெளியிட்டுள்ளது. அந்த நூலை கட்டுரையாளர் திரு சீமான் இளையராஜா நன்கு வாசித்து இந்தக் கட்டுரைக்கு கையாண்டுள்ளமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். நூல் ஆதாரமாக இந்த நூலைக் குறிப்பிட்டிருந்தால் இன்னும் இரட்டிப்பு மகிழ்ச்சியுற்றிருப்பேன். இருந்தாலும் அவருக்கு நன்றி.

  2. K. Ganesan says

    நான் எழுதி சிந்தன் புக்ஸ் 2024ல் வெளியிட்ட நூலை நன்கு வாசித்து மூன்றாவது கட்டுரையிலிருந்து சுருக்கமாக கட்டுரை வடித்துள்ளார். வாசித்து மகிழ்ந்தேன்.பெரும் மகிழ்ச்சி தான்.கட்டுரையின் இறுதியில் நூல் ஆதாரம் “தமிழ் வாழும் வரை கவிஞர் தமிழ் ஒளி வாழ்வார் ” என்று குறிப்பிட்டிருந்தால் நானும் வெளியீட்டாரும் மகிழ்ச்சி அடைவோம். நன்றி.

  3. சீமான் இளையராஜா says

    அய்யா வணக்கம்..
    தங்கள் நூல் உட்பட 5 நூல்களை முழுமையாக வாசித்து அதிலிருந்து தான் இக்கட்டுரை எழுதப்பட்டது.
    நூல் ஆதாரம் என்று 5 நூல்களையும் குறிப்பிட்டு இருக்க வேண்டும்…

    கண்டிப்பாக அடுத்த முறை நூல் ஆதாரம் என்று இணைத்து விடுகிறேன்…

    நன்றி…

Leave A Reply

Your email address will not be published.