தமிழ்நாடு நூலகத் துறையின் தந்தையை மறந்த தேனி மாவட்ட நூலகத்துறையினர்!
தேனி மாவட்டப் புத்தகக் கண்காட்சி அண்மையில் (மார்ச் 23 முதல் ஏப்ரல் 1 வரை) பத்து நாட்கள் நடைபெற்று முடிந்திருக்கிறது. தேனி மாவட்ட மைய நூலகத்தில் புத்தகக் கண்காட்சி தொடர்பான கூட்டம் மார்ச் முதல் வாரத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நான் அழைக்கப் பெற்று கலந்து கொண்டிருந்தேன். இந்தக் கூட்டத்தில் வையைத் தமிழ்ச் சங்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் சிலரும் கலந்து கொண்டிருந்தனர். தேனி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் ஒருவரும் பங்கேற்றார்.

* தேனி மாவட்டத்தில் செயல்படும் பல இலக்கிய அமைப்புகள் நிராகரிக்கப்பட்டிருந்தன. (ஏன்? என்பதற்கு மாவட்ட நூலகத்தினர் மட்டுமேப் பதிலளிக்க முடியும்)
* இக்கூட்டத்தில் மாவட்ட நூலக அலுவலர் கலந்து கொள்ளவில்லை.
* கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கான புலனக் குழு ஒன்று ஏற்படுத்தி, அதில் கூட்டத்தில் எடுக்கப் பெற்ற முடிவுகள் உட்பட அனைத்துத் தகவல்களும் பகிர்ந்து கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், அப்படி எந்தக் குழுவும் தொடங்கப்படவில்லை. எந்தவொரு தகவலும் பகிர்ந்து கொள்ளப்படவில்லை.
* கூட்டத்தின் முடிவிற்குப் பின்பு, நூலகர்கள் இந்தப் பணியை மேற்கொள்ளாமல், கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு அமைப்பைச் சேர்ந்தவர்களிடம் அனைத்துப் பொறுப்புகளையும் விட்டுவிட்டு, தங்களுக்கு எந்தப் பொறுப்புமில்லாதது போல் ஒதுங்கிக் கொண்டனர்.
* அந்த அமைப்பின் தனித்த செயல்பாடுகளால் கூட்டத்தில் எடுக்கப் பெற்ற எந்தவொரு முடிவும் செயல்படுத்த முடியாமல் போனது. குறிப்பாக,

# புத்தக்க் கண்காட்சியில் அமைக்கப்படும் சிந்தனை அரங்கத்திற்குத் தமிழ்நாட்டின் நூலகத்துறையின் தந்தை என்று போற்றப்படும் தேனி மாவட்டம், சின்னமனூரைச் சேர்ந்த வேதி என்றழைக்கப்படும் வே. தில்லைநாயகம் அவர்களது பெயர் வைக்கப்பட வேண்டும் என்கிற முடிவு மாவட்ட நிருவாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவேயில்லை.
# தமிழ்நாடு அரசின் சிறந்த நூலாசிரியர் பரிசு பெற்ற தேனி மாவட்டத்தினர் பெயர், படம், பரிசு பெற்ற நூல், பரிசு பெற்ற வகைப்பாடு, ஆண்டு உள்ளிட்ட குறிப்பு ஆகியவற்றைக் கொண்ட பதாகை வைக்கப்பட வேண்டும் என்கிற முடிவும் மாவட்ட நிருவாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவேயில்லை.
# இலக்கிய அரங்கத்திற்கு ஒதுக்கப்படும் நேரத்தைப் பிற மாவட்டங்களில் இருப்பது போன்று 6.00 மணி முதல் 7.00 மணி வரை மாற்றப்பட வேண்டும் என்கிற முடிவும் மாவட்ட நிருவாகத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படவேயில்லை.
# இலக்கிய அரங்க நிகழ்வில் இடம் பெறும் பட்டியலில் எழுத்தாளர் / கவிஞர் / கலைஞர் / படைப்பாளர் பெயர் எவ்வழியிலும் இரண்டாவதாக இடம் பெறக்கூடாது. இதன் மூலம், கூடுதலாக பலருக்கு வாய்ப்பு வழங்க முடியும் என்கிற முடிவு செயல்படுத்தப்படாமல், சில பெயர்கள் ஒன்றிற்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெற்றிருந்தனர். இதனால், தேனி மாவட்ட மைய நூலக வாசகர் வட்டத் துணைத்தலைவர் திரு நீலபாண்டியன், விடியல் வீரா உள்ளிட்ட பலருடைய பெயர்கள் இடம் பெறாமல் போனது வருத்தத்திற்குரியது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இப்படி பல்வேறு குறைகள்… குற்றங்கள்…
தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் நான் தெரிவித்த பல்வேறு கருத்துகளைத் தேனி மாவட்ட மைய நூலகம் செயல்படுத்த எந்தவொரு முயற்சியும் மேற்கொள்ளாமல், தனிப்பட ஒரு அமைப்பிடம் அனைத்தையும் கொடுத்து ஒதுங்கிக் கொண்ட நிலையில், அந்த அமைப்பின் விருப்பம் போல் அனைத்தும் நடந்தேறியது. அதற்குச் சில அமைப்புகள் துணை போனது அதைவிட வேதனையானது.
இனி வரும் காலங்களில், தேனி மாவட்ட மைய நூலகத்தால் செயல்படுத்தப்படும் எந்தவொரு ஆலோசனைக் கூட்டத்திலும், நிகழ்வுகளிலும், தேனித் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் எந்தவொரு நிருவாகிகளும் கலந்து கொள்ளப் போவதில்லை! (தேனித் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் தனிப்பட்ட முறையில் விரும்பினால் கலந்து கொள்ளலாம) என்கிற முடிவு சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானத்திற்கு வைத்து உறுதி செய்யப்படும்.
— தேனி மு. சுப்பிரமணி.