போலீசார் கொண்டாடிய “போக்கிரி பொங்கல்”! சாட்டையை சுழற்றிய எஸ்பி !
திருப்பத்தூர் கந்திலி போலீஸ் ஸ்டேஷனில், ரவுடியுடன் சேர்ந்து பொங்கல் வைத்த போலீஸார்கள் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
திருப்பத்தூர் மாவட் டம் கந்திலி காவல்நிலையத்தில் கடந்த 15-ம் தேதி காவலர்கள் குடும்பத்தினரோடு தடபுடலாக பொங்கல் வைத்து விழா கொண்டாடினர். இதற்காக அக்கம்பக்கத்தில் உள்ள பொதுமக்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்களோடு “ரவுடி பாபு என்ற பாபுஜி” என்பவரையும் அழைத்து வந்த போலீசார்கள் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததாகவும்; அது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி எஸ்பி ஸ்ரேயா குப்தா வரை சென்றதாகவும்; இது தொடர்பாக விசாரணை நடத்தியதன் அடிப்படையில் கந்திலி காவல் நிலைய எஸ்.ஐ.க்கள் அஜித்குமார், கார்த்தி, மற்றும் எஸ்.எஸ்.ஐ. உமாபதி ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கிறார் எஸ்.பி. ஸ்ரேயா குப்தா.
யார் இந்த பாபுஜி ?
கர்நாடக மஹாராஷ்டிரா மாநிலங்களில் பிரபல தாதாக்களோடு வலம் வந்து கொலை, கொள்ளை, கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு நூற்றுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி தேடப்படும் குற்றவாளியாக அறியப்பட்டவர் குனிச்சியை சேர்ந்த பாபுசங்கர். ஒரு கட்டத்தில் ஜெயில் வாழ்க்கையை துறந்து கந்திலியில் செட்டிலாகி கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் என பதவிகளை அனுபவித்து கொண்டே தனது கூட்டாளிகளோடு கொலை கொள்ளை கட்டப்பஞ்சாயத்து சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததாக சொல்கிறார்கள்.
பாபுசங்கரின் லெஃப்ட் அண்ட் ரைட்டாக இருந்தவர் தான் இந்த பாபு என்ற “பாபுஜி. கந்திலி பகுதியில் நிகழ்ந்த பெரும்பாலான குற்றச்செயல்களில் இந்த பாபுஜிக்கும் தொடர்பு உள்ளதாகவும்; பாபுசங்கரோடு சேர்த்து இவர் மீதும் பல வழக்குகள் பதிவாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதில் ஒன்றுதான் கந்திலியில் சிக்கன் கடைக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கும் ஒன்று என கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென்று பாபுஜி ரவுடியிசத்தை துறந்ததாகவும்; தனது கூட்டாளியான பாபுசங்கருக்கு அரசியல் ஆசை வந்து போல் பாபுஜிக்கும் ஆசை வந்து அதிமுகவில் இணைந்து கந்திலி பஞ்சாயத்து தலைவராகியுள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இறந்து போன தனது கூட்டாளி ‘ரவுடி பாபு சங்கரை” போலவே, இந்த பகுதிகளில் நடக்கும் திருவிழாக்களுக்கு பணத்தை வாரி இறைத்து தனக்குத் தானே விளம்பரங்கள் தேடிக்கொண்டு வந்துள்ளார் பாபுஜி.
அப்படித்தான் போலீசார் கொண்டாடிய பொங்கல் திருவிழாக்கு பாபுஜி ஸ்பான்சர் செய்ய, போலீசார்கள் அவரை விருந்தாளியாக அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதே காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு ரவுடிகள் பட்டியலில் பாபுஜியும் இருக்கிறார், என்பதும்; போலீசாரின் தொடர் கண்காணிப்பில் இருந்துவரும் நபர்களில் இவரும் ஒருவர் என்பதுதான் இதில் வேடிக்கையான விசயமே!
— மணிகண்டன்.