திமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு- வெடித்தது செருப்பால் அடித்த விவகாரம்..
திமுக பிரமுகருக்கு போலீசார் வலைவீச்சு – வெடித்தது செருப்பால் அடித்த விவகாரம்..
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கறம்பக்குடியில் 100 நாள் வேலை பார்த்த பணியாளரை செருப்பால் அடித்த அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மற்றும் திமுக பிரமுகர் மீது போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கறம்பக்குடி குழந்திரான்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தாள்ளம்மன் கோயில் அருகே 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் மூலம் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு வந்துள்ளது. இதில் அதே கிராமத்தில் வசிக்கும் சிவகுமார் என்ற பணியாளரும் மரக்கன்று நடும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்தப் பணிகளை ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஒன்றிய அதிகாரிகள் ஆய்வு செய்து கொண்டிருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த தொழிலதிபரும் திமுக பிரமுகருமான பன்னீர்செல்வம் மகன் கரிகாலன் மரக்கன்றுகள் நடுவதை பார்வையிட்டு வந்துள்ளார். அப்போது சிவகுமார் மரக்கன்றுகளுக்கு வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது அதனை அவர் முறையாக செய்யவில்லை என்று கூறப்படுகிறது. இதனை கவனித்த கரிகாலன் முறையாக மரக்கன்றுகளுக்கு கூண்டு அமைக்குமாறு சிவகுமாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதனைக்கேட்ட சிவகுமார் கரிகாலனை எதிர்த்து பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கரிகாலன் பணியாளர் சிவகுமாரை தனது காலில் கிடந்த காலணியால் அடித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிவகுமார் இதுகுறித்து கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.புகாரை பெற்று விசாரணை மேற்கொண்ட கறம்பக்குடி போலீசார் சிவக்குமாரை தொழிலதிபர் கரிகாலன் செருப்பால் அடித்தது உண்மை என தெரிய வந்ததையடுத்து, அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர். மேலும் கரிகாலன் திமுகவிலும் அவரது சகோதரர் அதிமுகவில் முக்கிய பொறுப்பில் இருப்பதால் கரிகாலன் மீது நடவடிக்கை மேற்கொள்வது போலீசார் தயக்கம் காட்டி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே 100 நாள் வேலைத்திட்ட பணியாளரை திமுக பிரமுகர் செருப்பால் அடித்த சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
ஜித்தன்