காவல் துறையில் இணைந்த “ NARUTO“ பூனை!
நாம் இதுவரை காவல்துறையில் நாய் இணைந்து தான் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு எதிர்மறாக காவல்துறையில் பூனை ஒன்று இணைந்த சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் பேசு பொருளாகி வருகிறது. ஆம் இச்சம்பவம் தென் அமெரிக்காவின் சிலி நாட்டு காவல்துறையில் நடந்திருக்கிறது. அந்நாட்டின் போர்வெனிர் நகர காவல் நிலையத்தை சேர்ந்த காவல் அதிகாரியான கிறிஸ்டியன் காரிடோ, கடந்த மாதம் தெருவில் நாய்கள் தாக்குதலிருந்து தப்பித்து ஓடி வந்த பூனை ஒன்றை மீட்டார். அந்தப் பூனைக்கு தேவையான முதலுதவி அளிக்கப்பட்டு பின்னர் பாதுகாப்பாக அந்த காவல் நிலையத்திலேயே பராமரிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் அந்தக் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வருபவர்களுக்கு அந்த பூனை ஆறுதலாக இருப்பதை கவனித்த போலீசார், அதனை காவல் நிலையத்தில் ஒரு உறுப்பினராக சேர்க்க எண்ணினர். எனவே காவல் நிலையத்தின் சீருடை போன்ற சிறிய ஜாக்கெட்டை அந்த பூனைக்கு அணிவித்து அதிகாரப்பூர்வ உறுப்பினராக சேர்த்துக் கொண்டனர். மேலும் இந்த பூனைக்கு செல்லமாக “NARUTO” என பெயர் சூட்டப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி மக்கள் அனைவரும் “Carabinero” என்ற சொல்லை “Catbinero” என அன்பாக அழைக்கத் தொடங்கினர். (Carabinero என்பது சிலி தேசிய காவல் படையின் பெயர்).
— மு. குபேரன்