ஏமாந்த முதலீட்டாளர்கள் பணம் – வட்டியுடன் மீட்டு கொடுத்த EOW போலீசார் !
ஏலச்சீட்டு நிறுவனம் ஒன்றில் பணத்தை கட்டி ஏமாந்த முதலீட்டாளர்களுக்கு, இழந்த தொகையை இரண்டு சதவீத வட்டியுடன் மீட்டுக் கொடுத்து சபாஷ் வாங்கியிருக்கிறார்கள், திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார்.
திருச்சி மாநகர் வரகனேரி ரம்பக்காரத்தெருவை சேர்ந்த அப்துல்காதர் மற்றும் அவரது மனைவி ஆஷாபானு ஆகியோர் அப்துல் காதர் சிட்பண்ட்ஸ் என்ற பெயரில் ஏலச்சீட்டு நடத்தி வந்திருக்கிறார்கள். பரவலாக பொதுமக்களிடம் முதலீடை பெற்றவர்கள், ஒருகட்டத்தில் தங்களிடம் சீட்டு கட்டியவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றியிருக்கிறார்கள். தலைமறைவாகியிருக்கிறார்கள்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு, திருச்சி மாநகரம் காந்தி மார்க்கெட் போலீசு நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள். பொதுமக்களின் புகாரின் அடிப்படையில், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து (Cr.No:1109/12) வழக்கை விசாரித்த நிலையில், இது பண மோசடி மற்றும் இழப்பீட்டு தொகையின் வரம்பு ஆகியவற்றின் காரணமாக, இந்த வழக்கானது திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசாருக்கு மேல்விசாரணைக்காக மாற்றம் செய்யப்பட்டது.

இவ்வழக்கில் புலன் விசாரணை மேற்கொண்ட, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. டி.கே.லில்லிகிரேஸ், கடந்த 09.05.2024 ஆம் ஆண்டு, மதுரை TNPID சிறப்பு நீதிமன்றத்தில், மேற்படி அப்துல் காதர் சிட்பண்ட்ஸ் நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களான அப்துல் காதர், ஆஷாபானு ஆகியோருக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தார்.
வீடியோ செய்தி
மதுரை TNPID சிறப்பு நீதிமன்றத்தில், சிறப்பு நீதிபதி ஜோதி அவர்களின் முன்பாக வழக்கு விசாரணையில் இருந்து வருகிறது. பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர் இந்த வழக்கை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிவாரணத்தை வழங்கும் வகையில், மேற்படி நிறுவனத்திடமிருந்து கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் சொத்துக்களை விற்பணை செய்ததில் இருந்து கிடைத்த தொகையிலிருந்து வழங்க உத்தரவிட வேண்டுமென்ற கோரிக்கையை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் தரப்பில் முன்வைத்திருந்தார்கள்.
பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் மற்றும் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர் ஆகியோரது சட்டரீதியான முன்னெடுப்புகளையடுத்து, மேற்கண்ட நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் முதலீட்டுத்தொகையினை திரும்ப வழங்க வேண்டுமென்ற உத்தரவை மதுரை TNPID சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜோதி பிறப்பித்திருந்தார். குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த ஓராண்டு காலத்திற்குள்ளாகவே, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு சாதகமான உத்தரவை பெற்றுத் தந்திருக்கிறார், சிறப்பு அரசு வழக்கறிஞர் ஸ்ரீதர்.

இதனையடுத்து, மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்து இதுநாள் வரையில் பணம் கிடைக்காமல் அவதியுற்றிருந்த, 49 வைப்பீட்டாளர்களுக்கும் அவர்கள் மேற்படி நிறுவனத்தில் முதலீடு செய்த முழுமையான அசல் தொகையுடன் 2% வட்டியுடன் திரும்ப ஒப்படைத்திருக்கிறார்கள். கடந்த மார்ச் 20.03.2025 அன்று திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.ராஜலெட்சுமி மேற்படி தொகையை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கியிருக்கிறார்.

இதுதவிர, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணையில் இருந்து வந்த வழக்குகளில் கடந்த ஆண்டுகளில் சரவணா தங்கமாளிகை வழக்கில், 63 வைப்பீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகை ரூ.53,43,823; கருப்புசாமி பைனான்ஸ் நிறுவன வழக்கில், 15 வைப்பீட்டாளர்களுக்கு வட்டியுடன் முதலீட்டுத்தொகை ரூ.12,08,410; மணிக்யூப் நிறுவன வழக்கில் 25 வைப்பீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகை ரூ.56,20,792; குரு பெனிபிட் வழக்கில், 234 வைப்பீட்டாளர்களுக்கு முதலீட்டுத்தொகை ரூ.21,38,190 என அடுத்தடுத்து பாதிக்கப்பட்ட பலருக்கும் தீர்வை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையிலான, திருச்சி மாவட்ட பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரின் தன்முனைப்பான சீரிய காவல் பணியை, பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் B.பாலநாகதேவி இ.கா.ப., காவல்துறை தலைவர் M. சத்தியபிரியா, இ.கா.ப., மத்திய மண்டல காவல்துறை காவல் கண்காணிப்பாளர் M.கிங்ஸ்லின், இ.கா.ப., ஆகியோர் பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள்.
— அங்குசம் செய்திப்பிரிவு.