தலைமைக் கழக பேச்சாளர் என்னும் ஜந்துகள் !
அரசியலில் பாவப்பட்ட ஜந்துக்கள் என்ற ஓர் இனம் உண்டு. அவர்கள்தான் ஒரு கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர்கள். பாவம் இந்த ஜந்துக்கள் விதர தானம் வயிற்றுக்கு ஏற ஏற கத்தி கத்தி தன் கட்சிக்காக தொண்டை கிழிய பேசுவார்கள். காடு, மலை, மேடு, பள்ளம், குளிர், வெப்பம், சூறாவளி, தென்றல் அனைத்திற்கும் பயணம் செய்து தன்னுடைய கட்சிக்காக பிரச்சாரம்.
சாலையோர தேநீர் கடை தேனீர் தான் இவர்களுக்கு விதிக்கப்பட்டது. அவர் மட்டுமே பேச்சாளர் என்றால் துண்டை கம்பீரமாக போட்டுக்கொண்டு ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் கூட எடுத்துக் கொள்ளலாம். முக்கியமான மந்திரியோ, மாவட்ட செயலாளர் பேசுகின்ற கூட்டம் என்றால் இவர் மைக் எந்த நேரத்திலும் பிடுங்கப்படும் ..
கொஞ்ச காலம் திமுக-வில் தேர்தல் பிரச்சாரங்களுக்கு போய்க் கொண்டிருந்தேன். தலைமைக் கழகப் பேச்சாளராக எங்கள் பகுதிக்கு நியமிக்கப்பட்டது திவாகர் கைவல்யம் என்ற பேச்சாளர் .
இவருடைய தந்தை கைவல்யம் அவர்கள் மடியில் அண்ணா அவர்கள் தவழ்ந்துள்ளார் என்று சொல்வார்கள். அந்த அளவிற்கு பாரம்பரியமான குடும்பத்திலிருந்து வந்தவர்.

எங்கே போனாலும் ஜெயதேவன் எனக்கு கூட வரவேண்டும் என்று கட்சிக்காரர்களிடம் அன்பு கட்டளை போட்டுள்ளார். ஆகவே நானும் தவிர்க்க முடியாமல் அவருடன் பயணிக்க வேண்டியது வந்தது. அப்போதுதான் அவர்களுடைய சிக்கல் சிடுக்கல் விக்கல் வாந்தி எல்லாவற்றையும் உணர முடிந்தது.
பெரும்பாலான தலைமைக் கழகப் பேச்சாளர்கள் தண்ணி இல்லாவிட்டால் பேச முடியாது. கிடைக்கின்ற மட்ட சாராயமும் கலக்கலோ எதுவோ அதை மட்டும் விநியோகிப்பார்கள்.
அதிகபட்சம் போனால் ஊறுகாய் பக்காவடை அள்ளி வாயில் போட்டுக்கொண்டு உயிர் போக போக கட்சிக்காக பிரச்சாரம் செய்ய வேண்டும். அதை நான் அவரோடு இருக்கின்ற பொழுது கண்டது… எப்போதும் அவர் பேசுவதற்கு முன்பு என்னை பேச வைப்பார்கள்.
இந்தத் தலைமைக் கழக பேச்சாளர் என்ற ஜந்து இதுவரை எந்த கட்சியிலும் ஒரு மாவட்டச் செயலாளர் ஆனதாக பூகோளமும் இல்லை. சரித்திரமும் இல்லை . இந்தத் தலைமைக் கழக பேச்சாளர் என்னும் ஜந்து கடைக்கோடி சட்டமன்றத் தொகுதியில் கூட இடம் ஒதுக்கி நிறுத்தப்பட்டது இல்லை.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வயதாகிவிட்டால் சீந்த கூட நாதி இருக்காது. இந்தத் தலைமை கழக பேச்சாளர்களுக்கு பெரும்பாலும் கார் வசதி இருக்காது. பொது போக்குவரத்து தான் .
நினைத்துப் பாருங்கள் தீப்பொறி ஆறுமுகம் இருப்பதிலேயே மிக மிகப் பிரபல்யமான திமுகவின் தலைமை கழக பேச்சாளர்…. அவர் இடையில் அதிமுகவிற்கு போனதற்கு காரணம் தன்னை கருகப்புல்லாக கட்சி பயன்படுத்திக் கொண்டது. ஒரு சட்டமன்ற உறுப்பினர் பொறுப்பு கூட தரவில்லை என்ற ஆதங்கம் இருந்தது அவருக்கு… பிறகு அதிமுகவுக்கு போனார்.. திமுகவுக்கு மீண்டும் வந்தார். அவருக்கு மிஞ்சியது தன்னுடைய பிணத்தின் மீது திமுக கொடி போர்த்தப்பட்டது மட்டும்தான்.
இப்படித்தான் திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சிகளின் தலைமைக் கழக பேச்சாளர் நிலைமை இருக்கிறது. தலைமைக் கழகப் பேச்சாளர் நிலையே இவ்வாறு என்றால் மற்ற பேச்சாளர்கள் நிலைமை பரிதாபம் !
— ஜெயதேவன், எழுத்தாளர்.