விறகு எரிக்காமல்… விநோதப் பொங்கல்….!!!
அது எப்படி விறகு வைத்து எரிக்காமல் விநோதப் பொங்கல்? என்று தானே எல்லோர்க்கும் கேட்கத் தோன்றும்? ஆமாம். அப்படித் தான். சமீபத்திய நான்கு ஆண்டுகளாக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வேண்டி, அரியலூர் மாவட்டக் கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு கிராமம் எனத் தேர்வு செய்து, தைப் பொங்கல் திருநாள் முன்பாக “விறகு வைத்து அடுப்பு மூட்டி எரிக்காமல் விநோதப் பொங்கல்” நிகழ்வினை நடத்தி வருகிறார் தங்க. சண்முகசுந்தரம்.
அரியலூர் மாவட்டம், கீழக் காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் தங்க சண்முகசுந்தரம். மாவட்ட விவசாயிகளின் உரிமைகள் மற்றும் நலன்கள் சார்ந்து களத்தில் தொடர்ந்து போராடி வரும் வேளாண் போராளி. பச்சை நிற ஆடைகள் அணிந்து உலா வருவதாலும், விவசாயிகளின் மேன்மைக்கு தொடர்ந்து கவனம் செலுத்தி இயங்கி வருவதாலும், அவரை பொதுமக்கள் “பச்சை மனிதன்” என்றே அழைக்கிறார்கள்.
கடந்த மூன்றாண்டுகளில் அரியலூர் மாவட்டத்தில் இந்த வகையிலான விழிப்புணர்வுப் பொங்கலினை வெற்றியூர், வடுகபாளையம், மேல வரப்பன்குறிச்சி ஆகிய ஊர்களில் பெண்கள் ஆண்கள் பொதுமக்களை வைத்துக் கொண்டாடி உள்ளார். இந்த ஆண்டு மேலப்பழுவூர் கிராமத்தில் அதனை நடத்தியுள்ளார். அரியலூருக்கும் டால்மியாபுரத்துக்கும் இடையே உள்ளது மேலப்பழுவூர் கிராமம். அங்கு தனியார் பள்ளி மைதானத்தில் 2௦25 ஜனவரி 1௦ வெள்ளிக்கிழமை அன்று, “விறகு வைத்து எரிக்காமல் விநோதப் பொங்கல்” விழிப்புணர்வு பொங்கல் விழா கொண்டாடப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரித்தல், மாட்டு வண்டி பயணம், பானை உடைத்தல், புறா பந்தயம் என்று களை கட்டியிருந்தது மேலப்பழுவூர் கிராமம்.
மூன்று செங்கல் என ஐந்து இடங்களில் விறகு எரிக்காத அடுப்புகள். அதன் மீது அலங்காரமாக ஐந்து மண் பானைகள். கதம்ப மலர்கள் சுற்றி. பார்க்கவே அத்தனை அழகு.
“பத்து நாட்களுக்கு முன்பாக எங்க ஊருக்கு வந்தாரு அந்த அண்ணன் சண்முகசுந்தரம். எங்க அஞ்சு பேருக்கு ஏதோ பாடம் நடத்துறாப்புல வகுப்பு எடுத்தாரு. ஊர்ல எங்களுக்கு அதெல்லாம் ரொம்ப புதிதாகவே இருந்தது. பாரம்பரிய அரிசி ரகத்தோட அவல் தான் வேணும்னு சொல்லிட்டாரு. நாங்க அதுக்குனு பாரம்பரிய ரகம் தூயமல்லி நெல்லை வாங்கிட்டு வந்தோம். அந்த நெல்லை ஊற வைத்து நிழலில் உலர்த்தி எடுத்தோம். வறுத்து பின்னர் இடித்து எடுத்தோம். இப்போது கெட்டி அவலா எங்களுக்குக் கிடைத்தது. விழிப்புணர்வு பொங்கலுக்கான பாரம்பரிய ரகத்தைச் சேர்ந்த தூயமல்லி அரிசி அவல் அச்சு அசலா எங்களுக்கு கிடைத்து விட்டது.” மேலப்பழுவூர் கிராமத்தின் கீழையூர் பகுதியில் வசித்து வரும் ர. அவிலா.
“இந்த விநோதப் பொங்கல் எங்களை ரொம்பவே டிரில் வாங்கிட்டதுங்க. சர்க்கரைப் பொங்கல்னா பச்சரிசிய உலையிலக் கொட்டி வேக வைத்து, வெந்து பொங்கி வரும் போது மண்டை வெல்லத்தை நுணுக்கிப் பொட்டு கொஞ்சமா நெய்யி, முந்திரிப் பருப்பெல்லாம் போட்டு நல்லாக் கிண்டி இறக்கி வெச்சுடுவோம். இந்தப் பொங்கல் அப்படி இல்லீங்க.
தூயமல்லி கெட்டி அவலை தண்ணீரில் ஒன்றரை மணி நேரம் ஊற வெச்சோம். பருத்தித் துணியில வடிகட்டி நல்லா இறுக்கிப் பிழிந்தோம். இப்போ தூயமல்லி அவல், சோறு போல வந்து விட்டது. வெல்லம் ஊற வைத்ததை வடிகட்டி வெல்லப் பாகாக ரெடி பண்ணிட்டோம். நிலக்கடலைப் பருப்பு உடைச்சி வெச்சிகிட்டோம். ஏலக்காய்த் தூள் ஆக்கிட்டோம். உலர் திராட்சையும் ரெடி.
புத்தம் புது மண் பானைக்கு உள்ளே தூயமல்லி ரக அவல் அள்ளிப் போட்டோம். அதுக்குத் தகுந்த அளவுக்கு வெல்லப் பாகு அதில் விட்டோம். உடைபட்ட நிலக்கடலை, ஏலக்காய் தூள், உலர் திராட்சை இவைகளை மண் பானைக்குள் விட்டு, அகப்பையால் கிளறினோம். இப்போது எங்களுக்கு அடுப்பில் விறகு வைத்து எரிக்காமல், விழிப்புணர்வு மிக்க விநோதப் பொங்கல் கிடைத்து விட்டது.” என்கிறார் மேலப்பழுவூர் கிராமத்தின் கீழையூர் பகுதியில் வசிக்கும் ந. அமுத பிரியா.
“இந்த விழிப்புணர்வு விநோதப் பொங்கலினை மைதானத்தில் கூடியிருந்த ஆண்கள் பெண்கள் சிறுவர் சிறுமியர் என அனைவர்க்கும் பகிர்ந்து தந்தோம். எல்லோரும் நல்ல ருசி என்றார்கள். நான் அவர்களிடம், ‘நல்ல ருசி மட்டுமல்ல. நம் உடலுக்கு அத்தனைச் சத்து மிகுந்தது இந்தப் பாரம்பரியத் தூயமல்லி அரிசி அவல் பொங்கல்” என்று விளக்கம் தந்தேன். இந்த 2௦25ம் ஆண்டு ஜனவரி 1௦ வெள்ளிக்கிழமை அன்று, தைப்பொங்கல் முன்னதாக நாங்கள் கொண்டாடி இருப்பது, இது நான்காவது ஆண்டாகும்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்கு முன்னர் வெற்றியூர், வடுகபாளையம் மற்றும் மேல வரப்பன்குறிச்சி போன்ற கிராமங்களில் ஒரு ஆண்டுக்கு ஒரு கிராமம் என மாறி மாறிக் கொண்டடியுள்ளோம். காரணம், எல்லார்க்கும் இந்த விஷயம் பரவலாகட்டும் என்பது தான். மேற்கண்ட கிராமங்களில் ஒவ்வொரு முறையும் பூங்கார், மாப்பிள்ளைச் சம்பா, ஆத்தூர் கிச்சடிச் சம்பா என்று தேடிப் பிடித்து பாரம்பரிய ரக அரிசி அவல் ரகங்களைத் தான் பயன்படுத்தி வந்துள்ளோம். வெறும் விழாவாக மட்டும் அதனை அப்போது நான் நிறைவு செய்து விடுவதில்லை. கூடியிருக்கும் பொதுமக்களிடமும் சிறுவர் சிறுமியரிடமும் நம்முடைய பாரம்பரிய நெல் அரிசி அவல் இல் நிறைந்து இருக்கும் சத்துகள் குறித்தும் அவ்வப்போது விரிவாகப் பேசி வருகிறேன்.” என்கிறார் அரியலூர் மாவட்டத்தின் “பச்சை மனிதன்” தங்க. சண்முகசுந்தரம்.
— ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு.