பொன்முடி சிறைக்கு செல்வாரா ? உச்சநீதிமன்றத்தில் அடுத்து என்ன நடக்கும் !
பொன்முடிக்கு 3 சிறைத் தண்டனை மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றத்தில் என்ன நடக்கும் பரபரப்பு தகவல்கள் !
தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பொன்முடிக்குச் சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 21ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை 50 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு வெளியான சில நிமிடங்களில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகத்திலிருந்து ஓர் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அது என்னவெனில்,‘3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அமைச்சர் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் தானாகவே இழக்கிறார். இதனைத் தொடர்ந்து உயர்கல்வி அமைச்சர் பதவியையும் இழக்கிறார்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அடுத்த சில மணி நேரங்களில் தமிழ்நாடு அரசு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பொன்முடியின் வசம் இருந்த உயர்கல்வித்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் இராஜக் கண்ணப்பன் அவர்களுக்குக் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கூடுதல் பொறுப்புக்குத் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.
பொன்முடியைச் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்ட திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என்ற அறிவிப்பை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும். அதனைத் தொடர்ந்து 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்படவேண்டும் என்ற விதி உள்ளது.

பொன்முடிக்கு வழங்கப்பட்ட உயர்நீதிமன்றத் தீர்ப்பின் நகல் தமிழ்நாடு சட்டமன்றச் சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும். சபாநாயகர் உயர்நீதி மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் பொன்முடி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார் என்பதை அறிவிப்பதுதான் அதிகாரப்பூர்வ அறிவிப்பாகும். இதனைத் தொடர்ந்து பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் பதவி இழப்பைத் தேர்தல் ஆணையத்திற்குச் சபாநாயகர் தெரிவிப்பார்.
அதன் அடிப்படையில் இந்தியத் தேர்தல் ஆணையம் விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதி காலியாக உள்ளது என்று அறிவிப்பை வெளியிடும். 6 மாதத்திற்குள் இடைத்தேர்தலை நடத்தும் என்பது தேர்தல் ஆணைய நடைமுறையாகும்.
சபாநாயகர் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழப்பை உடனே சொல்லவேண்டும் என்ற கால வரையறை கிடையாது. ஆய்வு செய்கிறேன் என்று காலம் கடத்தலாம். அந்தக் காலம் கடத்தலில் நீதிமன்றம் தலையிட முடியாது என்ற தகவலும் உள்ளது. “சபாநாயகர் பொன்முடி விவகாரத்தில் உடனடி முடிவெடுக்காமல் காலம் கடத்துவதையும் செய்யலாம்” என்று பத்திரிக்கையாளர் மணி குறிப்பிட்டுள்ளார்.
மேலும்,“உச்சநீதிமன்றத்தில் பொன்முடி சார்பில் உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து முறையீடு செய்யப்படும் என்று வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டில் பொன்முடி சார்பில் இரு வேண்டுகோள் வைக்கப்படும். 1. உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு முழுத் தடை கோருதல் 2. உயர்நீதி மன்றத்தின் 3 ஆண்டு சிறைத் தண்டனைக்கு ஜாமீன் என்னும் பிணை கோருதல் என்பதாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உச்சநீதி மன்றம் தடை கொடுக்கும் வாய்ப்பு உள்ளது. அது அரிதினும் அரிதாகவே வழங்கப்பட்டுள்ளது. கொலை மற்றும் கிரிமினல் குற்றங்களுக்கு வழங்கப்பட்ட அமைச்சர்களுக்கு எதிரான தீர்ப்புகளில் உச்சநீதி மன்றம் தடை வழங்கியுள்ளது.
சொத்துக்குவிப்பு மற்றும் ஊழல் வழக்குகளில் தடை கொடுக்கப்பட்டதாக முன்னுதாரணம் இல்லை. என்றாலும் மாவட்ட நீதிமன்றம் பொன்முடியை விடுதலை செய்ததும், உயர்நீதிமன்றம் தண்டனை வழங்கியதும் முரண்பாடானது என்பதைச் சுட்டிக்காட்டிப் பொன்முடி தரப்பு தீர்ப்புக்குத் தடைக் கோரலாம்.
அப்படித் தடை கிடைத்தால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் தகுதி இழப்பு தானே இரத்தாகிவிடும். இதனைத் தொடர்ந்து பொன்முடி அமைச்சராகவும் உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரை நீடிக்கலாம்.
தீர்ப்புக்குத் தடை கிடைக்கவில்லை என்றால், தொடர்ந்து 3 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிணை கோரப்படும். பிணை கிடைத்தால் பொன்முடி மற்றும் அவரது மனைவி உச்சநீதிமன்றத் தீர்ப்பு அளிக்கப்படும்வரை சிறைக்குச் செல்லவேண்டிய தேவை இருக்காது. ஒருவேளை ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதி மன்றம் உடனே பிணை வழங்கவில்லை. முதலில் சிறை தண்டனையை ஏற்றுக்கொண்டு பின்னர்ப் பிணை கேட்டு மனு செய்யுங்கள் அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில் சிறையில் இருந்துகொண்டு ஜெயலலிதா பிணை கேட்டு 3 வாரங்கள் கழித்துப் பிணை வழங்கப்பட்டு வெளியே வந்தார். இதுபோன்று பொன்முடியின் பிணை மறுக்கப்பட்டுச் சிறை செல்லவும் வாய்ப்பு உள்ளது. சிறையிலிருந்து கொண்டு பிணை கேட்டு விண்ணப்பிக்கலாம் என்ற நடைமுறை உள்ளது” என்று கூறியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட 3 ஆண்டு சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கவில்லை என்று அறிவித்துள்ளது. மேல்முறையீட்டிற்காக 30 நாள் வழங்கப்பட்டுள்ளது. 30 நாள்களுக்குள் மேல்முறையீடு நடக்கவில்லை என்றால் வரும் 2024 ஜனவரி 22ஆம் உயர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். 30 நாள்களுக்கு மேல் நீடிப்பு வழங்குவது குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

காரணம் தற்போது உச்சநீதிமன்றம் குளிர்கால விடுப்பில் உள்ளது. உச்சநீதிமன்றம் மீண்டும் ஜனவரி 4ஆம் நாள்தான் செயல்படத் தொடங்கும். பொன்முடி தரப்பின் மேல் முறையீடு ஜனவரி 2ஆம் நாள்தான் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இடையில் 20 நாள்கள் மட்டுமே உள்ளது. உச்சநீதிமன்றம் சிறப்பு அவசர வழக்காக விசாரித்தால் மட்டுமே பொன்முடிக்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. உச்சநீதிமன்றம் அவசர வழக்காக விசாரிக்க மறுத்தால், 30நாள்களைக் கடந்தால் சென்னை உயர்நீதிமன்றம் பொன்முடி ஆஜராகும் நாளை நீடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை எந்த வழக்கறிஞரும் முன்கூட்டியே ஊகிக்கமுடியாது என்றும் உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டின் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.
ஒருவேளை உயர்நீதிமன்றத்தின் முழுத் தீர்ப்புக்குத் தடை கிடைத்தால் பொன்முடி அமைச்சராகவும் வாய்ப்புள்ளது. அதனால் சபாநாயகர் உச்சநீதிமன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்பு வரும்வரை பொன்முடியின் தகுதி இழப்பை அறிவிக்காமல் காலம் கடத்தலாம் என்ற செய்தியும் உள்ளது. உச்சநீதி மன்றத்தின் மேல்முறையீட்டு தீர்ப்புக்குக் காத்திருப்போம்.
-ஆதவன்