மறியல் போராட்ட அறிவிப்புக்கு கிடைத்த முதற்கட்ட வெற்றி !
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் வட்டம் பூதலூர் சரகம் பூதலூர் கிராமத்தில் உள்ள பேருந்து நிலையத்தில் கட்டி முடித்து நான்கு மாதங்கள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ள கழிவறையை உடனே திறக்கக்கோரியும்; பூதலூர் ஊராட்சி நாச்சியார்பட்டி கிராமத்தில் கடந்த நான்கு மாதமாக காவிரி குடிநீர் வராததை கண்டித்தும்; பூதலூர் கல்லணை கால்வாய் தென்புறம் உள்ள நீர் தொட்டியில் தினந்தோறும் நீர் நிரப்பிட வலியுறுத்தியும்; பூதலூர் ஊராட்சியில் பல பகுதிகளில் உள்ள குடிநீர் தட்டுப்பாடுகளை உடனே சரிசெய்திட வலியுறுத்தியும்;
பூதலூர் வட்டம் புங்கனூர் கல்லணைக் கால்வாய் பாலத்திலிருந்து சின்ன காங்கேயம்பட்டி வரை கல்லணைக் கால்வாய் கரையில் தெருவிளக்கு அமைத்திட வலியுறுத்தியும்; புங்கனூர் பாலத்திலிருந்து சின்னக் காங்கேயம்பட்டி கிராமம் வரை கல்லணைக் கால்வாயின் கரையில் தடுப்பு வேலி அமைத்திட வலியுறுத்தியும்; சின்னக்காங்கேயம்பட்டி கிராமத்திற்குள் கூடுதலாக காவிரி குடிநீர் இணைப்பு வழங்கிட வலியுறுத்தியும் மக்கள் உரிமை கூட்டமைப்பு பூதலூர் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் எதிர்வரும் 03.04.2025 அன்று காலை பூதலூர் மேம்பாலத்தில் மறியல் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்கள்.
இந்நிலையில், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாரின் முன்னெடுப்பில், மார்ச் 29 அன்று 11.30 மணியளவில் பூதலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில், பூதலூர் வட்டாட்சியர் கலைச்செல்வி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தைக்கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில், மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார், பூதலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் அறிவானந்தம், பூதலூர் ஊராட்சி ஆணையர் ஷேக் தாவூத், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் தயாளசாமி, கல்லணைக் கால்வாய் உதவி பொறியாளர் மணிகண்டன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலர் இளங்கோ, தமிழன் காமராஜ், திதியோன், மற்றும் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அமைதிப் பேச்சுவார்த்தையில், பூதலூர் கல்லணைக் கால்வாய் தென்புறமுள்ள நீர்த்தொட்டியில் தற்சமயம் நீர் நிரப்பப்பட்டு வருகிறதென்றும்; பூதலூர் பேருந்து நிலையத்தில் கட்டி முடிக்கப்பட்ட கழிவறை கட்டிடம் ஒரு வாரத்திற்குள் திறக்கப்படும் என்றும்; பூதலூர் ஊராட்சியில் உள்ள குடிநீர் தட்டுப்பாடுகள் ஸ்தல ஆய்வு செய்து தீர்வு காணப்படும் என்றும் வட்டார வளர்ச்சி அலுவலரால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சின்ன காங்கேயம்பட்டி கல்லணைக் கால்வாய் கரையில் தடுப்பு வேலி அமைப்பதில் நெடுஞ்சாலைத்துறையின் தடையின்மை சான்று வாங்கி மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என உதவிப்பொறியாளர் நீர்வளத்துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. சின்ன காங்கேயம்பட்டி கிராமத்திற்கு காவிரி குடிநீர் இணைப்பு மூலம் குடிநீர் வழங்கிட கூடுதலாக, ஒரு குடிநீர் குழாய் 15 தினங்களுக்குள் அமைத்து தரப்படும் என குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் வாக்குறுதியளித்தார்.
நாச்சியார்பட்டி கிராமத்தில் காவிரி குடிநீர் கிடைக்க இரண்டு கேட் வால்வு அமைப்பதன் மூலம் பொதுமக்களுக்கு குடிநீர் வசதி செய்து தரப்படும் என குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளர் உத்தரவாதம் கொடுத்துள்ளார். மேற்கண்ட முடிவுகளை தொடர்ந்து, மக்கள் உரிமை கூட்டமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்த மறியல் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக, அதன் தலைவர் பழ.ராஜ்குமார் அறிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தொடர்ச்சியாக, அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும் உரிய முக்கியத்துவம் அளித்து மக்களின் கோரிக்கைகள் பரிசீலிக்கப்படாமல் இருந்த நிலையில், மறியல் போராட்ட அறிவிப்பும் அதனைதொடர்ந்த அமைதி பேச்சுவார்த்தையின் வழியே, அவர்களின் கோரிக்கைகள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.
— தஞ்சை.க.நடராஜன்.