பேஸ்புக், இன்ஸ்டாவில் சாதி வெறியை தூண்டும் பதிவுகள் … கண்காணித்து நடவடிக்கை எடுக்குமா போலீசு ?
தமிழகத்தில் தென் மாவட்டங்களில் குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய இந்த இரு மாவட்டங்களில் தொடர்ந்து குற்ற சம்பவங்கள் ஜாதிய ரீதியிலான மோதல், பழிக்கு பழி கொலை போன்ற சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
அது மட்டுமல்லாமல் பள்ளியில் படிக்கின்ற மாணவர்களுக்கிடையே சமீப காலங்களாக இணையதள மூலம் ஜாதிய மோதல் பின்னணியில் சிக்கி புத்தகங்கள் வைத்திருக்க வேண்டிய பையில் அரிவாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பள்ளிக்கு உள்ளே எடுத்து வரும் அளவிற்கு நிலைமை மிக மோசமாக மாறி உள்ளது.
தொடர்ந்து எப்போதும் இந்த இரண்டு மாவட்டங்கள் ஜாதி ரீதியிலான பிரச்சனையில் பதட்டமான சூழ்நிலையில் காணப்பட்டாலும், தற்போது அந்த வரிசையில் புதிதாக இப்போது விருதுநகர் மாவட்டமும் சேர்ந்துள்ளது. அந்தப் போக்கின் வெளிப்பாடாக, இணையதளம் மூலம் ஜாதி, மற்றும் போதை ரீதியிலான கலாச்சாரம் தலைதூக்க தொடங்கியுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர் காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடைபெறும் ஜாதி, மத, மோதலுக்கு சமூக வலைத்தளங்கள் முக்கிய காரணமாக இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். மேலும், நவீன தொழில்நுட்பங்களை அழிவு பாதைக்கு பயன்படுத்துவோரை ஆரம்பக் கட்டத்திலேயே கண்டறிந்து களை எடுக்க வேண்டும் என்றும் பேசியிருந்தார்.
முதலமைச்சர் சுட்டிக்காட்டியது போலவே குறிப்பாக பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதள பக்கங்களில் இளைஞர்கள் சிலர் தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரைக் போட்டுக் கொண்டு மூன்று அரிவாளுடன் நாங்க தான் கஞ்சா பார்ட்டி ஓ*** ஒதுங்கி இருந்துக்கோ… என பதிவிட்டும், சமீபத்தில் தீபக் ராஜா என்பவர் கொலை செய்யப்பட்ட அவரது புகைப்படத்தை பயன்படுத்தி குறிப்பிட்ட வார்த்தையை தெரிவித்தும், அதாவது நாங்கல்லாம் கஞ்சா போடும் பார்ட்டி எங்க கிட்ட எப்பவுமே ஒதுங்கி இருந்துக்கோ என மிரட்டும் தொனியில் அரிவாளுடன் தகாத வார்த்தையால் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

இது ஒரு புறம் என்றால், மற்றொரு பள்ளிப்படிப்பு வயதில் உள்ள சிறுவர்கள் சிலர் ஒன்றாக இணைந்து ரயில் நிலைய பெயர் பலகை முன்பாக இன்ஸ்டாகிராம் மூலம் ரீல்ஸ் வீடியோவில், சாத்தூர் தான் எங்க கோட்டை எங்க கிட்ட வச்சிக்கிடாத சேட்ட ஒ*** மண்டையில விழுந்துரும் உனக்கு ஓட்டை என தகாத வார்த்தையால் பேசி பதிவிட்டுள்ளனர்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்த இரண்டு இணையதள பதிவுகளை பார்க்கக் கூடிய மாற்று சமூகத்தை சேர்ந்த ஒரு சில நபர்கள் இந்த பதிவிற்கு கீழே ஜாதிய மோதலை தூண்டும் வகையில் தங்களுடைய பங்கிற்கு அவர்களும் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
இது போன்ற பதிவுகளால் சமூகத்தில் ஒருவருக்கொருவர் வெறுப்பு மற்றும் இரு பிரிவினர் கிடையே ஜாதிய மோதலாக உருமாறி சட்ட ஒழுங்கு பிரச்சனையாக உருவெடுக்கிறது. சமீப காலங்களாக போதை, சமூக வலைத்தளங்கள் மீதான மோகம் மற்றும் சினிமா காட்சிகளில் வரும் ஆயுத கலாச்சாரங்களால் சிறுவர்கள் இளைஞர்கள் தவறான பாதைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
அவ்வப்போது காவல்துறை குழந்தைகள் நல அலுவலர்கள் என அனைவரும் பள்ளி, கல்லூரிகளில், போதைப் பொருள் தீங்கு குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தாலும், இது போன்ற சம்பவங்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆரம்ப கட்டத்திலேயே குற்றச் செயல்களை தடுக்க முடியும் என சமூக ஆர்வலர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்கின்றனர்.
விருதுநகர் மாவட்டம் என்றில்லை. பொதுவில் தமிழகத்தில் இது ஒரு போக்காவே உருவெடுத்திருக்கிறது. நாமெல்லாம் இந்த சாதி என்பதாக, சொந்த சாதி பெருமை பேசுவதாகவும்; குறிப்பிட்ட சாதியினருக்கு எதிரான குரோத மனநிலையை உருவாக்கும் விதமாகவும் இத்தகைய சீண்டல் பதிவுகள் அமைந்திருக்கின்றன என்பதுதான் ஆபத்தானது. போலீசார் இந்த விவகாரத்தில் உரிய கவனத்தையும் அக்கறையும் செலுத்த வேண்டும் என்பதே எல்லோரது எதிர்பார்ப்பும்.
— மாரீஸ்வரன்.