திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் புரோகிதர்கள் சாலை மறியல் !
திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள அம்மா மண்டபம் மிகவும் பிரசித்தி பெற்ற இடம். இங்கு தினம்தோறும் பொதுமக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி தர்ப்பணம் செய்து புனித நீராடி விட்டு செல்வது வழக்கம் மேலும் முக்கிய நாட்களான ஆடி புரட்டாசி தை உள்ளிட்ட மாதங்களில் வரக்கூடிய அமாவாசை தினங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து தங்களது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது வழக்கமாக உள்ளது.
அதனை செய்து கொடுக்கக்கூடிய புரோகிதர்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் இங்கு உள்ள மண்டபம் படித்துறை மற்றும் அம்மா மண்டபத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பல தலைமுறைகளாக அமர்ந்து வரக்கூடிய மக்களுக்கு திதி உள்ளிட்ட முன்னோர் வழிபாடுகளை செய்து கொடுப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில் ,
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகமானது திடீரென அம்மா மண்டபம் மற்றும் படித்துறை சுற்றியுள்ள பகுதிகளில் கோவிலுக்கு உண்டான இடம் உள்ளது எனக் கூறி அளவைகள் நடும் பணி நடைபெற உள்ளது எனக் கூறி அளவை கற்களை கொண்டு வந்து மண்டபத்தில் வைத்துள்ளனர்.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கோவில் நிர்வாகம் எடுத்த திடீர் நடவடிக்கையை கண்டித்து தங்களை நம்பி சுமார் 500 குடும்பங்கள் உள்ளது எனவும், இதனால் தங்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும் எனக் கூறி திடீரென புரோகிதர்கள் அம்மா மண்டபத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். மறியலில் ஈடுபட்ட புரோகிதர்களிடம் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.







Comments are closed, but trackbacks and pingbacks are open.