திருச்சி சிறையில் சிறைத்துறை டி.ஜி.பி ஆய்வு- சாதனை படைத்த சிறைவாசிகளுக்குப் பாராட்டு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மத்திய சிறைக்கு சிறைத்துறை தலைமை இயக்குநர் வருகை – சாதனை படைத்த 3 சிறைவாசிகளுக்குப் பாராட்டு; பெண்கள் தனிச்சிறையில் குழந்தைகள் காப்பகம் திறப்பு.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறையின் தலைமை இயக்குநர்  சந்தீப் ராய் ரத்தோர், இ.கா.ப., அவர்கள்  (09.10.2026) திருச்சிராப்பள்ளி மத்திய சிறைக்கு வருகை தந்து, சிறையின் நிர்வாகம், பாதுகாப்பு, சிறைவாசிகள் நலன் மற்றும் மறுவாழ்வு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளைப் பார்வையிட்டார்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

மத்திய சிறையில் செயல்பட்டு வரும் பேக்கரி தொழிற்கூடத்தைப் பார்வையிட்டு, சிறைவாசிகளின் தொழில் சார்ந்த செயல்பாடுகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து, சிறைவாசிகள் சிறையில் அனுமதிக்கப்படும் நடைமுறைகளைப் பார்வையிட்டதுடன், சிறை சமையலறையில் உணவு தயாரிக்கும் முறைகள், தூய்மை, சுகாதாரம் மற்றும் உணவுத் தயாரிப்பு ஏற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.

மேலும், சிறை வளாகத்தில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்திற்கு (Government ITI) சென்று, அங்கு தொழிற்பயிற்சி பெற்று வரும் சிறைவாசிகளுடன் கலந்துரையாடினார்.

இந்திய அளவில் சிறை வளாகங்களுக்குள் நிறுவப்பட்டுள்ள மிகச் சில அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் திருச்சி மத்திய சிறையில் செயல்பட்டு வரும் அரசினர் தொழிற்பயிற்சி நிலையமும் ஒன்றாகும். இந்நிலையம், சிறைவாசிகளுக்குத் தொழில்சார் கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி, அவர்களின் சீர்திருத்தம் மற்றும் விடுதலைக்குப் பிந்தைய சமூக மறுவாழ்விற்கு வழிவகுக்கும் முக்கியமான முயற்சியாக விளங்குகிறது.

இத்தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்று, இறுதித் தேர்வில் 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்த மூன்று சிறைவாசிகளுக்குத் தலைமை இயக்குநர் அவர்கள் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். மேலும், கல்வி மற்றும் தொழிற்திறன் மேம்பாட்டில் தொடர்ந்து சிறந்து விளங்குமாறு அவர்களை ஊக்குவித்தார்.

இந்நிகழ்வின்போது, அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் மண்டல இணை இயக்குநர் ஆகியோரும் உடனிருந்தனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதனைத் தொடர்ந்து, சிறை வளாகத்தில் அமைந்துள்ள தோட்டத்தைப் பார்வையிட்டு, சிறைவாசிகளால் பயிரிடப்பட்டு வரும் காய்கறிப் பயிர்களையும், விவசாயம் சார்ந்த மறுவாழ்வு நடவடிக்கைகளையும் பார்வையிட்டார்.

சிறைப் பணியாளர்களின் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், திருச்சி மத்திய சிறையில் பணிபுரியும் சிறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் பணிசார்ந்த பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, திருச்சிராப்பள்ளி பெண்கள் தனிச்சிறைக்குச் சென்ற தலைமை இயக்குநர் அவர்கள், அங்கு தங்களது தாய்மார்களுடன் தங்கியுள்ள குழந்தைகளின் நலனுக்காகப் புதிதாக அமைக்கப்பட்டுள்ள குழந்தைகள் காப்பகத்தை (Crèche) திறந்து வைத்தார். இக்காப்பகம், சிறையில் தாய்மார்களுடன் தங்கியுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான, அன்பான மற்றும் குழந்தைகளுக்கு உகந்த சூழலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மேலும், பெண்கள் தனிச்சிறையில் உள்ள சிறைவாசிகளுடன், குறிப்பாகத் தங்களது குழந்தைகளுடன் தங்கியுள்ள தாய்மார்களுடன் கலந்துரையாடி, அவர்களது வாழ்க்கைச் சூழல், அடிப்படை வசதிகள், தேவைகள் மற்றும் நலன் குறித்து கேட்டறிந்தார்.

அத்துடன், பெண்கள் தனிச்சிறையில் பணிபுரியும் பெண் சிறை அலுவலர்கள் மற்றும் பெண் சிறைக்காவலர்களுடனும் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களது குறைகள், கோரிக்கைகள் மற்றும் பணிசார்ந்த பிரச்சினைகளைக் கேட்டறிந்தார்.

இவ்வருகையின்போது, திருமதி ராஜலட்சுமி, சிறைத்துறை துணைத் தலைவர், திருச்சி சரகம் மற்றும் திருமதி ருக்மணி பிரியதர்ஷினி, திருச்சி மத்திய சிறையின் பொறுப்பு சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் திருச்சி பெண்கள் தனிச்சிறையின் சிறைக் கண்காணிப்பாளர் ஆகியோர் தலைமை இயக்குநர் அவர்களுடன் உடனிருந்தனர்.

சிறைவாசிகளின் பாதுகாப்பான காவல், திறமையான சிறை நிர்வாகம், கல்வி மற்றும் தொழிற்திறன் மேம்பாடு, சிறைவாசிகளின் சீர்திருத்தம் மற்றும் மறுவாழ்வு, சிறைப் பணியாளர்களின் நலன், பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தொடர்ந்து அளித்து வரும் முக்கியத்துவத்தை இந்த வருகை எடுத்துக்காட்டுகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.