எங்களைப் பற்றி என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா ?
ஒரு நாட்டின் முன்னேற்றம் அதன் கல்வியால் மட்டுமே சாத்தியமாகும். கல்வியின் அடித்தளம் ஆரம்பப் பள்ளிகளில் தான் வைக்கப்படுகிறது. அந்த அடித்தளத்தை உறுதியாக அமைக்கும் பொறுப்பை தாங்கிக் கொண்டு இருக்கும் ஆசிரியர்கள் தான் Primary மற்றும் Montessori ஆசிரியர்கள். அவர்கள் குழந்தைகளின் மனதை உருவாக்கி, பழக்க வழக்கங்கள், ஒழுக்கம், அடிப்படை அறிவு, படிப்பு ஆர்வம் ஆகியவற்றை வளர்க்கிறார்கள். ஆனால், அவர்களுக்குக் கிடைக்கும் வாழ்க்கைத் தரமும் சம்பளமும் மிக மோசமான நிலையில் இருக்கிறது. தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சம்பளம் வாழ்க்கைக்கு போதாத அளவு கொடுக்கப்படுகிறது பெரும்பாலும் மாதம் ரூ.6,000 முதல் ரூ.10,000 வரை மட்டுமே சம்பளம் பெறுகிறார்கள். சில பெரிய நகரங்களில் கூட அதிகபட்சம் ரூ. 10,000 – ரூ. 15,000 தான். ஆனால், இன்றைய சூழலில் வீட்டு வாடகை, போக்குவரத்து செலவு, அன்றாட உணவு, குழந்தைகளின் கல்வி கட்டணம், மருத்துவ செலவு என இவற்றைக் கூட்டிப் பார்த்தால், இந்தச் சம்பளம் ஒரு குடும்பத்தை நடத்துவதற்கு போதாது.
இதனால் பல ஆசிரியர்கள் கூடுதல் டியூஷன், வேறு பக்க வேலைகள் செய்வதற்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால், பள்ளி வேலை மட்டும் அவர்களை அனைத்து நேரமும் பிஸியாக வைத்திருப்பதால், அதையும் சரியாகச் செய்ய முடியவில்லை. அரசு ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது ஒரே பாடத்திட்டம் கற்பிப்பதும், ஒரே பொறுப்பு ஏற்பதும் என்றாலும், அரசுப்பள்ளி ஆசிரியர்களின் நிலைமையும், தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமையும் ஆகாய –பாதாள வித்தியாசம். அரசு ஆசிரியர்களின் சம்பளம் குறைந்தபட்சம் ரூ 35,000 முதல் ரூ 70,000 வரை இருக்கும். அனைத்து அரசு விடுமுறைகளும் கிடைக்கும். PF, pension, மருத்துவ காப்பீடு, maternity leave போன்ற நலன்களும் கிடைக்கும். வேலைப் பாதுகாப்பு உறுதியாக இருக்கும்.
ஆனால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு குறைந்த சம்பளம் (வாழ்வாதாரத்திற்கு போதாது), அரசு விடுமுறைகள் இல்லை (ஞாயிறு மட்டும் ஓய்வு; சில நேரங்களில் அதுவும் கிடையாது), கூடுதல் வேலைகள் annual day, sports day, exam duty. ஆனால், overtime சம்பளம் இல்லை. வேலைப் பாதுகாப்பு இல்லை. (பள்ளி நிர்வாகம் விரும்பினால், ஒரே நாளில் வேலை நீக்கம்) மிகவும் வருத்தமான விஷயம் என்னவென்றால், தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து மிக உயர்ந்த கட்டணங்கள் வசூலிக்கின்றன. LKG முதல் 5 ஆம் வகுப்பு வரை கூட, வருடாந்திர கட்டணம் பல இடங்களில் ரூ 30,000 – ரூ 1,00,000 வரை செலுத்தப்படுகின்றது. Books, uniform, transport, extra – curricular activities என பெயர் சொல்லி பல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், இவ்வளவு கட்டண வசூல் இருந்தும், அந்த பணம் ஆசிரியர்களிடம் செல்லவில்லை. நிர்வாகம் கட்டடங்கள், விளம்பரங்கள், வசதிகள் என்பவற்றில் அதிகம் செலவழிக்கிறது. ஆனால், அந்தக் கட்டிடங்களில் உயிரோடு உழைத்து நிற்கும் ஆசிரியர்களின் சம்பளத்தை உயர்த்தவே தயங்குகிறது.
இது மிகப்பெரிய அநீதி வேலைச்சுமை, ஓய்வில்லா உழைப்பு, தனியார் பள்ளி ஆசிரியர்களின் நாளாந்த வாழ்க்கை மிகவும் கடினம். காலை 8.30 க்கு பள்ளி வந்துவிட வேண்டும். 9 மணி முதல் 4 மணி வரை non-stop classes. Lunch break கூட பலமுறை மாணவர்களை கவனிப்பதற்காகவே செல்கிறது. School முடிந்த பிறகும் lesson plan, note correction, assignment checking, parent meeting என வேலைகள் தொடர்கின்றன. மேலும், பள்ளியின் cultural functions, annual day, sports day, exhibitions என பல்வேறு நிகழ்ச்சிகளுக்காகவும் ஆசிரியர்கள் தான் சுமை சுமக்கிறார்கள். ஆனால், அதற்கு தனியாக எந்த allowance- மும் வழங்கப்படுவதில்லை. இவர்களுக்கு மிஞ்சுவது வெறும் மதிப்பும் மரியாதை குறைவும் தான். ஆசிரியர்கள் தான் குழந்தையின் இரண்டாம் தாய், இரண்டாம் தந்தை. Montessori ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு சுயமாக வாழ்வதற்கான அடிப்படை பழக்கங்கள் கற்றுக்கொடுக்கிறார்கள். Primary ஆசிரியர்கள் எழுத்து, கணக்கு, ஒழுக்கம், அறிவியல் என அனைத்து அடித்தளக் கல்வியையும் கற்றுக்கொடுக்கிறார்கள்.
ஆனால், சமூகத்தில் இவர்களுக்கு வழங்கப்படும் மதிப்பு மிகவும் குறைவு. “இது சின்ன class தான்” என்று பள்ளி நிர்வாகம் அவர்களை அலட்சியம் செய்கிறது. பெற்றோரும் சில நேரங்களில் ஆசிரியர்களை குறைவாக மதிக்கிறார்கள். குறைந்த சம்பளம் காரணமாக சமூகத்தில் கூட அவர்களின் நிலை உயர்வதில்லை.
யாருக்குப் பொறுப்பு?
ஒரே வேலையைச் செய்தும், அரசு ஆசிரியர் உயர்ந்த சம்பளம் பெறுகிறார். தனியார் ஆசிரியர் குறைவான சம்பளத்தில் வாழ்கிறார். ஏன் இந்த வித்தியாசம்?
தனியார் பள்ளிகள் பெற்றோரிடம் இருந்து அதிக கட்டணம் வசூலித்தும், ஆசிரியர்களுக்கு சம்பளம் தராமல் போகும் அநீதி யாருக்குப் பொறுப்பு?
ஒரு ஆசிரியர் மன அமைதியின்றி, சம்பளக் கவலைக்குள் தள்ளப்பட்டால், மாணவர்களின் கல்வித் தரம் எப்படி உயரும்?
செய்ய வேண்டியவை
- அரசு தலையீடு – தனியார் பள்ளி ஆசிரியர்களுக்காக குறைந்தபட்ச சம்பள அளவை சட்டமாக்க வேண்டும்.
- அரசு விடுமுறைகள் – அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைக்கும் விடுமுறைகள் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.
- வேலைப் பாதுகாப்பு – தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை எளிதில் நீக்கக் கூடாது; சட்ட ரீதியான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
- கூடுதல் வேலைக்கு allowance – exam duty, annual day போன்ற வேலைகளுக்கு கூடுதல் சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
- நலத்திட்டங்கள் – PF, ESI, medical insurance, maternity leave போன்ற அடிப்படை உரிமைகள் எல்லா ஆசிரியர்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும்.
- மரியாதை – பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் ஆசிரியர்களை ஒரு professional ஆக மதிக்க வேண்டும்.
ஒரு குழந்தையின் எதிர்காலம் அதன் ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது.
அந்த ஆசிரியர்களே தங்களின் வாழ்க்கைக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அது நாட்டிற்கே ஒரு அவமானம். அரசும், பள்ளி நிர்வாகமும், பெற்றோரும் சேர்ந்து “ஆசிரியர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டால்தான் மாணவர்களின் கல்வி மேம்படும்” என்பதை உணர வேண்டிய காலம் இது.
— மதுமிதா







Comments are closed, but trackbacks and pingbacks are open.