மதிமுகவில் அதிகரிக்கும் விரிசல் – சமாதானப்படுத்தும் மூத்த நிர்வாகிகள்!
மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்களின் தற்போதைய நிலைப்பாடு மதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சிவகங்கை மாவட்ட செயலாளர் சிவந்தியப்பன், விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம், திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். மேலும் அவர்கள் மதிமுக பொதுச்செயலர் கட்சிக் கொள்கைக்கு விரோதமாக செயல்படுவதாகவும், வாரிசு அரசியலை எதிர்த்து திமுகவில் இருந்து வெளியேறிய வைகோ தற்போது துரை வைகோவை வைத்து வாரிசு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினர். மேலும் மதிமுகவை திமுகவோடு இணைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர். மேலும் சிவகங்கை மாவட்ட கட்சி அலுவலகத்தை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் மதிமுகவின் மூன்று மாவட்ட செயலாளர்கள் உயர்த்தி இருக்கும் போர்க்கொடி மற்ற மாவட்டங்களுக்கு சென்று விடக்கூடாது என்ற மதிமுக தலைமை தற்போது பிரச்சனையை சுமுகமாக தீர்ப்பதில் தீவிர முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக உயர் மட்ட குழு நிர்வாகிகள் அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளை தொடர்பு கொண்டு ஆறுதல் படுத்தி வருகின்றனர்.
மேலும் மதிமுகவை திமுகவில் இணைப்பதில் உள்ள சிக்கல் குறித்தும், மதிமுகவின் இவ்வளவு பெரிய கட்டமைப்பை அப்படியே எப்படி திமுகவிடம் ஒப்படைப்பது, மதிமுகவின் சொத்துக்கள் அனைத்தையும் திமுகவிடம் கொடுத்துவிடுவதா, திமுகவில் இணைந்தால் மதிமுகவின் தற்போது உள்ள முக்கிய நிர்வாகிகள் அனைவருக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்குமா, மாவட்ட செயலாளர்களுக்கான முக்கியத்துவம் வழங்கப்படுமா, இதர அமைப்பு நிர்வாகிகள் மதிக்கப்படுவார்களா என்றெல்லாம் கேள்வி எழுப்பி, அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்களாம்.