பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மூன்று ஆண்டுகளுக்குச் செப்.17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் – துணைவேந்தர் தகவல் !
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் 2021-22, 22-23, 22-24 ஆகிய மூன்று ஆண்டுகளுக்குச் செப்.17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது – துணைவேந்தர் தகவல் – இணையத்தில் செய்தி வெளியீடு
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பேராசிரியர் முனைவர் செல்வம் அவர்கள் 2021ஆம் ஆண்டு பிப்.6ஆம் நாள் பொறுப்பேற்றுக்கொண்டார். 2021ஆம் ஆண்டு கொண்டாடப்பட வேண்டிய தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாடப்படவில்லை. தொடர்ந்து, 2022, 2023ஆம் ஆண்டுகளிலும் கொண்டாடப்படவில்லை.
2024ஆம் ஆண்டு பிப்.6ஆம் நாளோடு இவரின் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில், மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு கொடுத்து, தமிழ்நாடு ஆளுநரும், பல்கலைக்கழகங்களின் வேந்தருமான ஆர்.என்.இரவி உத்தரவு பிறப்பித்தார். இந்த நீட்டிப்பு பெற்ற வேளையில், வரும் செப்.17ஆம் நாள் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா 2023ஆம் ஆண்டுக்குக் கொண்டாடப்படும் என்று பல்கலைக்கழகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பெரியாரியப் பற்றாளரும், பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர், தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் இணைப்பேராசிரியருமான முனைவர் தி.நெடுஞ்செழியன் அவர்கள் துணைவேந்தரைச் சந்தித்து 21,22,23 ஆகிய ஆண்டுகளுக்கும் கொண்டாடப்பட வேண்டும்.
தந்தை பெரியார் பிறந்தநாள் நிகழ்வு விடுபடாமல் நடக்க முயற்சி எடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். 2021ஆம் ஆண்டு கொரேனா காலம் என்பதால் கொண்டாட நிதிக்கான அனுமதியில்லை என்பதால், 22, 23ஆம் ஆண்டுகளுக்கு மட்டும் கொண்டாடுவது என்று பாரதிதாசன் பல்கலைக்கழகம் முடிவெடுத்தது.
தொடர்ந்து, பாரதிதாசன் பல்கலைக்கழகம் 2021ஆம் ஆண்டும் தந்தை பெரியார் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும் என்று தமிழ்நாடு முதல் அமைச்சர் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சருக்கும் முனைவர் தி.நெடுஞ்செழியன் இணையம் வழி கடிதங்கள் எழுதினார். இதனையடுத்து, இன்று (02.08.24) வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணியளவில் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தரைச் சந்தித்தார்.
அப்போது துணைவேந்தர்,“2021ஆம் ஆண்டுக்கும் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகின்றது என்பதற்காக அறிவிப்பைப் பல்கலைக்கழக இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளோம்” என்று கூறி அதன் நகலை முனைவர் தி.நெடுஞ்செழியனிடம் வழங்கினார்.
அப்போது பெரியார் உயராய்வு மைய இயக்குநர் (பொ) முனைவர் அ.கோவிந்தராசு அவர்களும் உடன் இருந்தார். பின்னர்த் துணைவேந்தருக்கு முனைவர் தி.நெடுஞ்செழியன் நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.
அங்குசம் செய்தி இதழிடம், பல்கலைக்கழகம் இணையத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பைத் தி.நெடுஞ்செழியன் வழங்கினார். அந்தச் செய்திக்குறிப்பில், ஒவ்வொரு ஆண்டுக்கும் பெரியார் சிந்தனைகளைப் பரப்பி வரும் பெரியாரியல் சிந்தனையாளர்களுக்கும், பெரியார் குறித்து நூல் வெளியிட்டவர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு ஆண்டுக்கும் முறையே தலா, ரூ.50 ஆயிரம், ரூ.25ஆயிரம் எனக் கடந்த காலங்களில் வழங்கப்பட்டு வந்தது.
இதில் பெரியார் கொள்கைப்படி வாழ்ந்து அகவை முதிர்ந்த 75 வயதைக் கடந்தவர்களுக்கு வழங்கப்படும் ரூ.1 இலட்சம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அறியமுடிந்தது. இதனால் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.3 இலட்சத்தைப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் வழங்காமல் உள்ளது பேரதிர்ச்சியாக இருந்தது.
பாரதிதாசன் பல்கலைக்கழகம் பெரியார் பிறந்தநாளை முறையாகக் கொண்டாட மனம் இல்லாமலும், பணம் இல்லாமலும் தவித்து வருகின்றது என்பதை உணர்ந்துகொள்ள முடிகின்றது. பெரியார் பிறந்தநாளைக் கொண்டாடப் பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு நிதி ஒரு தடையாக இருந்தால், தமிழ்நாடு முதல் – அமைச்சரும், உயர்கல்வித் துறை அமைச்சரும், பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவேந்தருமான பொன்முடி அவர்களும் தந்தை பெரியார் பிறந்தநாள் கொண்டாடுவதற்குரிய நிதியை உடனே வழங்கவேண்டும் என்று அங்குசம் இதழ் கேட்டுக்கொள்கிறது.
-ஆதவன்