குட்கா வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட 5 கடைகளுக்கு சீல் !
குட்கா வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட 5 கடைகளுக்கு சீல் !
திருச்சியில் குட்கா மற்றும் புகையிலை பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழக்கறிஞர் அலுவலகம் உட்பட ஐந்து கடைகளுக்கு சீல் வைத்திருக்கிறார்கள் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள். மேலும், அழுகிய காய்கறிகளை கொண்டு கடைகளுக்கு சமோசா தயாரித்து விற்பணை செய்து வந்த நிறுவனத்தையும் சீல் வைத்திருக்கிறார்கள்.
அக்-04 அன்று திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபு தலைமையில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்கள்.
அப்போது, அங்காளம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாலிங்கம் அலுவலகம் உள்ளிட்டு, பாஸ்கர், முத்து, தமிழ்ச்செல்வன், சுந்தரவல்லி ஆகியோரின் மளிகை கடைகள் மற்றும் பெட்டிக்கடைகளில் இருந்து தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்தது கண்டறியப்பட்டு சீல் செய்யப்பட்டன.
இந்த அதிரடி ஆய்வில் 1.215 கிலோ கிராம் போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கிறார்கள். இது குறித்து முசிறி காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
மேலும் இந்த ஆய்வின்போது, செந்தில் ஸ்நாக்ஸ் என்ற பெயரில் சமோசா மொத்த விற்பணை செய்து வந்த செந்தில் குமார் என்பவர் அழுகிய காய்கறிகளை கொண்டு சமோசா செய்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்த நிலையில், அங்கிருந்த சுமார் 150 கிலோ கிராம் கொண்ட அழுகிய காய்கறிகளை பறிமுதல் செய்து அழித்திருக்கிறார்கள். மேலும் சமோசா தயாரிப்பு நிறுவனத்தையும் தற்காலிகமாக சீல் வைத்திருக்கிறார்கள்.
முழு வீடியோ
இந்த ஆய்வின்போது உணவு பாதுகாப்பு அலுவலர்களான பாண்டி, சையத் இப்ராஹிம், செல்வராஜ், மகாதேவன், அன்புச்செல்வன், வடிவேல், கந்தவேல், சண்முகசுந்தரம் ஆகியோரும் மற்றும் ஆயுதப்படை காவலர்களும் உடனிருந்தனர்.
”திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களோ அல்லது கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருட்களோ அல்லது சுகாரமற்ற முறையில் உணவு தயாரிப்பில் ஈடுபட்டு விற்பனை செய்வது தெரிய வருமாயின் கீழ்கண்ட தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரியபடுத்த வேண்டும் என்றும், தகவல் அளிப்போரின் தகவல் ரகசியம் காக்கப்படும்” என்பதாக தெரிவிக்கிறார், மாவட்ட நியமன அலுவலர் ரமேஷ்பாபு.
மாவட்ட புகார் எண் : 96 26 83 95 95
மாநில புகார் எண் : 94 44 04 23 22
– அங்குசம் செய்திப்பிரிவு.