அங்குசம் பார்வையில் ‘பி.டி.சார்’ [ PT Sir ]
அங்குசம் பார்வையில் ‘பி.டி.சார்’ [ PT Sir ] தயாரிப்பு: வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கே.கணேஷ். டைரக்ஷன்: கார்த்திக் வேணுகோபாலன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: ஹிப்ஹாப் தமிழா ஆதி, காஷ்மிரா பர்தேசி, அனிகா சுரேந்திரன், தியாகராஜன், பிரபு, கே.பாக்யராஜ், இளவரசு, ஆர்.பாண்டியராஜன், பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி, முனீஸ்காந்த், பிரணிகா. டெக்னீஷியன்கள்—இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி [ 25-ஆவது படம் ], ஒளிப்பதிவு: மாதேஷ் மாணிக்கம், ஸ்டண்ட்: மகேஷ் மாத்யூ, எடிட்டிங்: பிரசன்னா, காஸ்ட்யூம் டிசைனர்: ஸ்வப்னா ரெட்டி நடனம்: சந்தோஷ். பி.ஆர்.ஓ.யுவராஜ்.

தனது மகன் கனகவேலின் [ ஹிப்ஹாப் தமிழா ஆதி ] ஜாதகத்தில் ஆபத்தான கட்டங்கள் இருப்பதாக ஜோசியர் சொன்னதால், எந்த வம்புதும்புக்கும் போகக்கூடாது என்று சொல்லிச் சொல்லியே வளர்க்கிறார் அம்மா தேவதர்ஷினி. அப்பா பட்டிமன்ற ராஜாவோ இதற்கு நேர்மாறாக மைக் டைசனின் தீவிர ரசிகராக இருக்கிறார்.
பெரியவனாகி ஒரு தனியார் பள்ளியில் பி.டி.மாஸ்டராக வேலைக்குச் சேர்ந்த பின்னும் அதே பயந்த சுபாவத்துடன் தாய் சொல்லைத் தட்டாத பிள்ளையாக இருக்கும் ஆதிக்கு அதே ஸ்கூலில் டீச்சராக இருக்கும் வானதி [ காஷ்மிரா பர்தேசி ] மீது லவ். ஆனால் வானதிக்கோ கனகவேலின் பயந்த சுபாவம், பிரச்சனையக் கண்டு ஒதுங்கும் குணம் இவற்றைப் பார்த்து எரிச்சல் வந்தாலும் காதலிக்கிறார்.

கனகவேலின் எதிர்வீட்டில் வசிக்கும் இளவரசு—வினோதினி வைத்தியநாதன் தம்பதிகளின் மகளான நந்தினி [ ஆனிகா சுரேந்திரன் ] க்கு சில காலிப்பயல்களால் அவமானம் ஏற்படுகிறது. இந்த சம்பவம் தான் கனகவேலின் வாழ்க்கையையே புரட்டிப் போடுகிறது. ஒரு கட்டத்தில் நந்தினி கொலை செய்யப்பட, அதன் பின் கனகவேலின் வாழ்க்கை மைதானத்தில் நடக்கும் பல்வேறு விறுவிறுப்பான விளையாட்டுகள் தான் இந்த ‘பி.டி.சார்’. இதுவரை நடித்த படங்களில் எல்லாமே சின்னப்புள்ளதனம் என்ற பெர்மனெண்ட் டெம்ப்ளேட்டுடன் தான் வருவார் ஆதி. தூங்கி எந்திருச்சு அப்படியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தது போல் தான் அவரது முகமும் இருக்கும்.
ஆனால் இந்த பி.டி.சார். ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் 25-ஆவது படம் என்ற சிறப்புடன், இதுவரை நடித்த படங்களிலேயே இதான் மிக சிறப்பு என்று சொல்லும் அளவுக்கு நடிப்பில் நல்ல மார்க் வாங்கியுள்ளார் இந்த பி.டி.வாத்தியார் ஆதி. “சார் நீங்க பழைய டிஸ்கோ டான்ஸர் தானே” என கல்வி நிறுவனங்களின் அதிபர் தியாகராஜனைப் பார்த்துக் கேட்பது, “எம்மா எதுக்குமா நீ இவ்வளவு ரியாக்ட் பண்றே” என அம்மா தேவதர்ஷினியைப் பார்த்துக் கேட்பது என அவ்வப்போது டைமிங் காமெடியிலும் அசத்தியிருக்கார் ஆதி. பாடல்களிலும் பின்னணி இசையிலும் ரொம்பவே கவனம் செலுத்தியிருக்கிறார்.

ஹீரோயின் காஷ்மிரா பர்தேசி, காஷ்மீர் பனிமலையின் ஃப்ரஷ் ஆப்பிள் போல இருக்கிறார். ஒன்றிரண்டு சீன்களில் நடிப்பிலும் ஃப்ரஷ்ஷாக தெரிகிறார். இவரின் அப்பா வக்கீல் மாணிக்கவேலாக பிரபு செம கெத்து காட்டியிருக்கிறார்.
ஆதியின் அப்பாவாக வரும் பட்டிமன்ற ராஜா சுமார் ரகம் என்றால், அம்மா தேவதர்ஷினி சூப்பர் ரகம். பஸ். டிரெய்ன், ரேஷன் கடை உட்பட பொது இடங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் சீண்டல் கொடுமைகளை தேவதர்ஷினியும் ஆதியின் தங்கை பிரணிகாவும் கொந்தளித்துப் பேசும் இடத்தில் கைதட்டல் தியேட்டரை அதிரவைக்கிறது. தான் ஒரு சிறந்த குணச்சித்திர நடிகர் என்பதை போலீஸ் ஸ்டேஷன் சீனில் புரூஃப் பண்ணிவிட்டார் இளவரசு. நியாத்தின் பக்கம் நிற்க வேண்டும் என நினைத்தாலும் சாட்சிகள் இல்லாமல் தவிக்கும் நீதிபதியாக கே.பாக்யராஜ்.

படத்தின் முதல் அரை மணி நேரம் விளையாட்டுத்தனமாகவும் மேம்போக்காவும் தான் நகர்கிறது. ஆனிகாவுக்கு நடந்த சம்பவத்திற்குப் பின் தான் 100 மீட்டர் ஓட்டப் பந்தயம் போல் திரைக்கதையில் வேகம் ஆரம்பிக்கிறது.
கல்வி நிறுவனங்களின் அதிபராக மம்பட்டியான் தியாகராஜன். அவரின் குரூர குணத்தை, மெல்ல மெல்ல காட்டி, ஆனிகா சுரேந்திரனை அவர் பாலியல் ரீதியாக இம்சை பண்ணும் காட்சியில் அம்பலப்படுத்தி, அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆதியும் காஷ்மிராவும் போடும் மாஸ்டர் ப்ளான், அதன் பின் நடக்கும் கோர்ட் காட்சிகள், பெண்களின் உடை அரசியல் என ரொம்பவே சமூக அக்கறையுடன் கதையைக் கொண்டு போய் அசத்திவிட்டார் டைரக்டர் கார்த்திக் வேணுகோபாலன்.

கதைக்களம் முழுவதும் ஈரோட்டில் நடக்கும் போது தந்தை பெரியாரைக் காட்டாமல் எப்படி என நாம் யோசித்தோம். க்ளைமாக்சில் ஆனிகா சுரேந்திரன் கம்பீரமாக நடந்து போகும் போது, வீதியில் நின்று கொண்டிருக்கும் முகம் காட்டும் பர்தாவுடன் நிற்கும் முஸ்லிம் பெண்களின் பின்னால் இருக்கும் சுவரோவியத்தில் தந்தை பெரியார் பளிச்சிடுகிறார். சபாஷ் டைரக்டர்.
இந்த ‘பி’டி.சார்’ பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் நல்ல பாடத்தைக் கற்றுத் தந்துள்ளார்.
-மதுரை மாறன்