அங்குசம் பார்வையில் ‘ரயில்’ விமர்சனம்
அங்குசம் பார்வையில் ‘ரயில்’ விமர்சனம் – தயாரிப்பு: டிஸ்கவரி சினிமாஸ் வேடியப்பன். டைரக்ஷன்: பாஸ்கர் சக்தி. நடிகர்-நடிகைகள்: குங்குமராஜ்முத்துசாமி, வைரமாலா, பர்வேஸ் மெஹ்ரூ, செந்தில் கோச்சடை, ரமேஷ் வைத்யா, ஷமீரா, பிண்ட்டூ, வந்தனா, பேபி தனிஷா, தங்கமணி பிரபு, ரமேஷ் யந்த்ரா [ அனைவரும் புதுமுகங்கள் ] தொழில்நுட்பக் குழு—ஒளிப்பதிவு: தேனி ஈஸ்வர், எடிட்டிங்: நாகூரான் ராமச்சந்திரன், இசை: எஸ்.ஜே.ஜனனி. பி.ஆர்.ஓ. : நிகில் முருகன்
தேனி மாவட்டம் வடபுதுப்பட்டி தான் கதைக்களம். அங்கே எலெக்ட்ரீஷயனாக இருக்கிறார் முத்தையா[ குங்குமராஜ்]. இவரது மனைவி செல்லம்மா [ வைரமாலா ]. சம்பாரிக்கும் காசையெல்லாம் குடித்தே அழிக்கிறார் முத்தையா. பத்தாததுக்கு பொண்டாட்டி நகையை வித்தும் குடிக்கிறார். முத்தையாவின் குடிக் கூட்டாளி வரதன் [ ரமேஷ் வைத்தியா ]. முத்தையா—செல்லம்மா குடியிருக்கும் வீட்டின் எதிர்வீட்டில் குடியிருக்கிறான் சுனில் என்ற மும்பை இளைஞன். பஞ்சு மில் ஒன்றில் சூப்பர்வைசராக இருக்கிறான்.
சுனிலுடன் செல்லம்மா பழகுவதை சந்தேகமாகப் பார்க்கிறான் முத்தையா. கார்த்திகை தீபத்தன்று ஓவர் போதையில் செல்லம்மாவை முத்தையா அடிக்கும் போது, விலக்கிவிடுகிறான் சுனில். அப்போது எதிர்பாராதவிதமாக முத்தையாவை தள்ளிவிடுகிறான். இதனால் ஆத்திரமாகும் முத்தையாவும் வரதனும் சுனிலை போட்டுத்தள்ள ப்ளான் போடுகிறார்கள்.
ஆனால் சுனிலோ சாலைவிபத்தில் இறந்துவிடுகிறான். அவனது உடலை முத்தையா குடியிருக்கும் வீட்டிற்கு கொண்டு வந்து வைக்கிறார்கள் போலீசார். மும்பையிலிருந்து சுனிலின் பெற்றோரும் மனைவியும் வரும் வரை பிணத்தைப் பார்த்துக் கொள்ளும்படி சொல்லிவிட்டு கிளம்புகிறது போலீஸ். சுனிலின் குடும்பம் வந்த பின் என்ன நடக்கிறது? என்பது தான் இந்த ‘ரயில்’ பயணத்தின் க்ளைமாக்ஸ்.
இந்தப் படத்தில் நடித்திருக்கும் புதுமுகங்கள் அனைவருக்கும் சிறப்பான நடிப்புப் பயிற்சி கொடுத்து அதை திரையிலும் நேர்த்தியாக பதிவு செய்த இயக்குனர் பாஸ்கர் சக்தியின் நல்ல முயற்சியைப் பாராட்டியே ஆகவேண்டும். குங்குமராஜும் வைரமாலாவும் கிராமத்து மனிதர்களை நன்றாகவே பிரதிபலித்துள்ளார்கள். அதிலும் குறிப்பாக செல்லம்மாவின் அப்பா தண்டபானியாக வரும் செந்தில் கோச்சடை தான் மனதில் கம்பீரமாக பதிகிறார்.
மகள் மீது வைத்துள்ள அதீத பாசத்திற்காக குடிகார மருமகனை வெறுப்புடன் சகித்துக் கொள்வது, இறந்து போன சுனிலை தனது மகனாக நினைத்து அவனுக்கு இறுதி ஊர்வலம் நடத்துவது, சுனிலின் பெற்றோரிடம் பரிவு காட்டுவது என அச்சுஅசல் இளகிய மனமுள்ள கிராமத்துப் பெரியவராக வாழ்ந்திருக்கிறார் செந்தில் கோச்சடை. [ நிறம், உடை, உடல்மொழி, வசன உச்சரிப்பு இவற்றில் ஒரு சாயலில் ‘பூ’ராமுவை நினைவுபடுத்துகிறார் ] இதற்காக இயக்குனர் பாஸ்கர் சக்தியை மீண்டும் ஒருமுறை பாராட்டலாம்.
படத்தின் பெரும்பலம் என்றால் அது கேமராமேன் தேனி ஈஸ்வர் தான். இவரது கேமரா கோணம் மட்டுமல்ல, செல்லம்மாவுக்கும் முத்தையாவுக்கும் கல்யாணமாகி ஏழு வருடங்களாகியும் குழந்தை இல்லாததை குஞ்சுகளுடன் கோழி, குட்டிகளுடன் ஆடு இவற்றை அவ்வப்போது குறியீடாகக் காட்டி அசத்திவிட்டார். அதே போல் இசையமைப்பாளர் ஜனனியின் பணியும் ரொம்பவே நிறைவு. சுனிலின் இறுதி ஊர்வலம் ஆரம்பிக்கும் போது ஒலிக்கும் அந்த இழவுப் பாட்டு கண்ணீரை வரவைத்துவிட்டது.
இந்தப் படத்திற்கு முதலில் ‘வடக்கன்’ என்று தான் முதலில் தலைப்பு வைத்திருந்தார்கள். ஆனால் சென்சாரில் உள்ளவர்கள் பண்ணிய அழிச்சாட்டியத்தால் ‘ரயில்’ என மாற்றியுள்ளார்கள். ‘வடக்கன்’ என்ற தலைப்புப் பிரகாராம் இந்தக் கதையையும் காட்சியையும் பார்த்தால், எந்தவொரு காட்சியும் மனதில் பதிவாகாமல் மேலோட்டமாக கடந்துவிடுவது பெரிய பலவீனம். அதற்கடுத்த பெரிய பலவீனம், சுனில் என்ற இளைஞன், மும்பையிலிருந்து இங்கே வந்திருப்பதாக டைரக்டர் பதிவு செய்துள்ளது தான்.
ஏன்னா தமிழ்நாட்டிற்கு பிழைக்க வரும் வடக்கன்கள் என்றால், ஒடிசா, பீகார், மேற்குவங்காளம், உத்திரப்பிரதேசம், ராஜஸ்தான், ஜார்கண்ட், சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். மும்பயிலிருந்து இங்கே வருவதில்லை. ஏன்னா தமிழ்நாட்டைப் போல மும்பையும் பெரிய தொழில் நகரம் தான். பிழைப்பதற்கு ஏராளமான வழிகள் உள்ள மாநிலம் தான். இந்த பெரிய பலவீனத்தை எப்படி டைரக்டர் கவனிக்காமல் விட்டார் என்று தெரியவில்லை.
ஒருவேளை அந்த மாநிலங்கள் ஒன்றிலிருந்து வந்த இளைஞன் எனச் சொல்லியிருந்தால், படத்தையே சென்சார் தடை பண்ணிவிடுவார்கள் என இயக்குனரும் தயாரிப்பாளர் வேடியப்பனும் நினைத்திருக்கலாம். அதே போல் வடக்கனுக்கு வக்காலத்து வாங்கினால், தமிழ்ர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு கிளம்பும். தமிழனை தூக்கிப் பிடித்தால் சென்சாருக்கு செம கடுப்பு வந்து ஒட்டுமொத்தப் படத்தையே கட் பண்ணிவிடுவார்கள் என்ற பெரிய அவஸ்தையில் சிக்கியிருக்கிறார்கள் இயக்குனரும் தயாரிப்பாளரும். ஏன்னா படத்தில் அடிக்கடி வரும் “வடக்கன்” என்ற வார்த்தையையே ‘மியூட்’ பண்ணியிருக்கும் சென்சார், ஒட்டு மொத்தப் படத்தையும் கட் பண்ணாமலா விடுவார்கள்?
ஏன்னா.. துபாயிலிருந்து ரிட்டர்னாகும் வரதனின் மச்சான், “பொழைக்க வந்தவன், பொழைக்க வந்தவன்னு சொல்றியே, அப்படின்னா நானும் துபாய்க்கு பொழைக்கப் போனவன் தான். நம்ம பயலுக திருப்பூருக்கும் சென்னைக்கும் கோயமுத்தூருக்கும் ஏன் போறான்? இங்க பொழைக்க வக்கில்லாமத் தானே…?” இந்த வசனக் காட்சி தான் இருவரின் அவஸ்தைக்குக் காரணமாக இருந்திருக்கும்.
வடபுதுப்பட்டி கிராமத்திலேயே மொத்தப் படத்தையும் எடுத்து, தயாரிப்பாளர் வேடியப்பனின் பணத்தைப் பாதுகாத்திருக்கிறார் டைரக்டர் பாஸ்கர் சக்தி. அதே நேரம் வடக்கன்களைப் பற்றி, அவர்களின் வளர்ச்சி ஆக்கிரமிப்பு பற்றி, பானிபூரி, பேல்பூரிகளின் நடமாட்டம் பற்றி பத்திரிகைகளிலும் சோஷியல் மீடியாக்களிலும் நிறையவே படித்துவிட்டோம், பார்த்துவிட்டோம்.
அதனால் ‘ரயில்’ என்ற ‘வடக்கன்’ என்ற இந்த சினிமா எந்தவித தாக்கத்தையும் நமக்குள் ஏற்படுத்தவில்லை என்பது தான் உண்மை.
–மதுரை மாறன்