அங்குசம் பார்வையில் ‘வேட்டையன்’ திரைப்படம் திரை விமர்சனம் !
அங்குசம் பார்வையில் ‘வேட்டையன்’ திரைப்படம் திரை விமர்சனம் ! தயாரிப்பு : லைக்கா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன். டைரக்ஷன் : த.செ.ஞானவேல் . நடிகர்—நடிகைகள் : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அமிதாப்பச்சன், ஃபகத் பாசில், மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ராணா டகுபதி, ராவ்ரமேஷ், அபிராமி, ரோகிணி, கிஷோர், ஜி.எம்.சுந்தர், ரக்ஷன், ரமேஷ் திலக். ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.கதிர், இசை : அனிருத், திரைக்கதை : பி.கிருத்திகா, எடிட்டிங் : பிலோமின் ராஜ், ஸ்டண்ட் : அன்பறிவ், தயாரிப்பு வடிவைமைப்பு : கதிர். ஆர்ட் டைரக்டர் : சக்தி வெங்கட்ராஜ், காஸ்ட்யூம் டிசைனர் : பெருமாள் செல்வம், அனுவர்தன், தினேஷ் மனோகரன், லைக்கா தலைமை : ஜி.கே.எம்.தமிழ்க்குமரன்,. பி.ஆர்.ஓ. : ரியாஸ் கே.அகமத் & சதீஷ் [ எய்ம் ]
கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக இருக்கும் அதியன் [ ரஜினி ] ரவுடிகளை என்கவுண்டர் செய்வதில் ஸ்பெஷலிஸ்ட். இவரது பேரைக் கேட்டாலே குலை நடுங்குகிறது ரவுடிகளுக்கு. நிம்மதி மக்களுக்கு. இந்த சமயத்தில் பேச்சிப்பாறை அருகே இருக்கும் மலைகிராமத்தில் அரசுப்பள்ளி ஆசிரியையாக இருக்கும் சரண்யா [ துஷாரா விஜயன் ] தனது பள்ளியில் மூட்டை மூட்டையாக கஞ்சாவைப் பதுக்கிவைத்திருப்பதாக எஸ்.பி.அதியனுக்கு கடிதம் அனுப்புகிறார்.
அதியனின் அதிரடி வேட்டையில் கஞ்சா அழிக்கப்படுகிறது. கஞ்சா வியாபாரியான ரவுடி குமரசேனையும் போட்டுத்தள்ளுகிறார் அதியன். அதன் பின் பி.எச்.டி.படிக்கும் ஆசையில் சென்னைக்கு டிரான்ஸ்பர் வாங்கிச் செல்கிறார் சரண்யா. அங்கே கற்பழித்துக் கொலை செய்யப்படுகிறார். இதற்குக் காரணம் குணா என்ற ரவுடி தான் எனத் தெரிகிறது நாகர்கோவிலில் இருக்கும் அதியனுக்கு.
டிஜிபி.யின் ஸ்பெஷல் பெர்மிஷனுடன் சென்னைக்குச் செல்லும் அதியன் சரண்யாவின் ஆன்மா சாந்தியடைய குணாவை என்கவுண்டரில் போடுகிறார். அதன் பின் தான் அதியனுக்குத் தெரிகிறது, சரண்யாவைக் கொலை செய்தது குணா அல்ல என்று. நிரபராதியை என்கவுண்டர் பண்ணிவிட்டோமே என்று கலங்குகிறார் அதியன். சரண்யாவைக் கொலை செய்த உண்மைக் குற்றவாளி யார்? என்பதன் சூப்பர் க்ளைமாக்ஸ் தான் சூப்பர் ஸ்டாரின் இந்த ‘வேட்டையன்’.
இயக்குனர் த.செ.ஞானவேலின் இதற்கு முந்தைய ‘ஜெய்பீம்’ என்ற படம் அப்பாவிகளின் லாக்கப் மரணங்களுக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பியது. இந்த வேட்டையனோ என்கவுண்டருடன் சேர்த்து நீட் கோச்சிங் செண்டர் கொள்ளையர்கள், கல்வி வியாபாரிகளுக்கு எதிராக ஓங்காரக் குரல் எழுப்பியுள்ளது. சட்டம், நீதி, கல்வி, இந்த மூன்றும் ஏழைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்ற சமூகநீதிக் கருத்தை ரஜினிகாந்த் என்ற மாபெரும் கலைஞன் மூலம் வெளிப்படுத்தியிருப்பதில் ஞானவேலுக்கு நல்ல வெற்றி கிடைத்திருக்கிறது. இந்தக் கதைக்குள் தன்னைப் பொருத்திக் கொண்டு பயணித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் பெருமைக்குரியவர், பாராட்டுக்குரியவர்.
போலீஸின் என்கவுண்டருக்கு எதிராக மனித உரிமைக் கமிஷனில் ஆஜராகும் முன்னாள் நீதிபதி சத்யதேவ் கேரக்டரில் இந்தி ஐகான் அமிதாப்பச்சன் கனகச்சிதம். குணாவை அதியன் என்கவுண்டர் செய்த பின் தனது டீமுடன் பேசும் போது, “போலீஸ் நடத்த்தியது போலி என்கவுண்டர்” என டேக்டிக்கலாக சொல்லும் சீனிலும் கோர்ட்டில் ஜட்ஜ் முன்பு ஆவேசமாக வாதிடும் சீனிலும் அசத்திவிட்டார் அமிதாப்பச்சன்.
படத்தில் செம எனெர்ஜிட்டிக்காக வரும் கேரக்டர் என்றால், ரஜினிக்கு அன் –அஃப்ஃபிஸியலாக உதவும் திருடன் பேட்ரிக்காக வரும் ஃபகத் பாசில் தான். அதிலும் கணினி தொழில்நுட்பத்தில் எக்ஸ்பெர்ட் இந்த பேட்ரிக். க்ளைமாக்சில் ஃபகத்தை ரஜினி கட்டியணைத்து அழும் சீனில் இருவருமே அசத்திவிட்டார்கள்.
ரஜினிக்கு ஏற்ற ஜோடியாகவும் “மனசிலாயோ” பாடலில் ஜொலிப்பாகவும் ரவுடிகளை சுடும் சீனில் ஆக்ரோஷமாகவும் தூள் கிளப்பியிருக்கார் மஞ்சுவாரியர். இருந்தாலும் நடிப்பில் பட்டையைக் கிளப்பிருப்பவர் நம்ம திண்டுக்கல் பொண்ணு துஷாராவிஜயன் தான். கதை முழுவதுமே துஷாராவின் சரண்யா கேரக்டரை மையமாக வைத்துத் தான் பயணிக்கிறது.
அதே போல் ரித்திகா சிங்கையும் சும்மா சொல்லக் கூடாது. அடிஷனல் கமிஷனர் ரூபா கிரண் கேரக்டரில் பெரும்பாலான காட்சிகளில் ரஜினியுடனேயே பயணிக்கிறார். ஒரு ஸ்டண்ட் சீனிலும் அதகளம் பண்ணியிருக்கார். செம அழகாகவும் இருக்கிறார். இடைவேளைக்குப் பின் வரும் வில்லன் நட்ராஜ் [ ராணா டகுபதி ] கேரக்டர் தான் கொஞ்சம் பலவீனமாகிப் போச்சு. ராணாவின் ஆளாக வரும் அபிராமி, பொருளாதாரக் குற்றப்பிரிவு டிஎஸ்.பி.யாக வரும் ரோகிணி, திருட்டுப் போலீஸாக வரும் கிஷோர் என எல்லா கேரக்டர்களையுமே ரஜினியுடன் கரெக்டாக மேட்ச் பண்ணியுள்ளார் டைரக்டர் ஞானவேல்.
ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிரின் மேம்பட்ட உழைப்பு, எடிட்டர் பிலோமின்ராஜின் ஷார்ப்னெஸ், இவையெல்லாம் வேட்டையனின் விறுவிறுப்புக்கு சூப்பர் சப்போர்ட் என்றால், அனிருத்தின் பின்னணி இசை பக்கா சப்போர்ட்.
“குப்பத்துல இருக்குறவன் ஓடிப்போயிருவான், மாடி வீட்ல இருக்குறவன் ஓடமாட்டானா? வெள்ளையா இருக்குறவன் பொய் சொல்லமாட்டான், பணக்காரன் திருடமாட்டான்னு காலங்காலமா நம்ப வச்சுக்கிட்டிருக்கீங்க. ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய கல்வி வியாபாரிகள் கையில சிக்கிருக்கு. நாங்க கஷ்டப்பட்டு அக்யூஸ்டை பிடிக்கப் போவோம். நீங்க ஈஸியா ஆண்டிசிபேட்ரி பெயில் கொடுத்துடுறீங்க” ரஜினியின் இந்த வசனம் தான் இயக்குனர் த.செ.ஞானவேலுக்கு சபாஷ் போட வைக்கிறது. சபாஷ் போட காரணகர்த்தாவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு ட்ரிபிள் சபாஷ்.
ரஜினியின் தற்போதைய ‘ஹானஸ்ட்’க்கு இப்போதைய ‘விட்னெஸ்’ இந்த ‘வேட்டையன்’.
–மதுரை மாறன்