ஃப்ரெஷ்ஷாக ரீ ரிலீஸ் ஆகிறது ‘ப்ரண்ட்ஸ்’
‘ஸ்வர்க்கசித்ரா’ அப்பச்சன் தயாரிப்பில் சித்திக் இயக்கத்தில் இசைஞானி இளையராஜா இசையில் விஜய்-சூர்யா இணைந்து நடித்து 2001ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற ‘ப்ரண்ட்ஸ்’ படம் 24 ஆண்டுகளுக்கு பின்னர் 4K தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கப்பட்டு வரும் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் ரீ ரிலீஸ் ஆகிறது. இப்போது ‘ஜாக்குவார் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பாளர் வினோத் ஜெயின் ஃப்ரெஷ்ஷாக ரீ ரிலீஸ் பண்ணுகிறார். இதற்காக மீண்டும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் நவம்பர் 17- ஆம் தேதி மாலை நடந்தது.
இவ்விழாவில் வினோத் ஜெயின், விஜய் சார்பில் தமிழக வெற்றி கழகத்தின் சென்னை புறநகர் மாவட்டச் செயலாளர் இசிஆர் பி. சரவணன், சூர்யா சார்பில் அகில இந்திய சூர்யா நற்பணி இயக்கத்தின் செயல் தலைவர் ஆர். ஏ. ராஜா, நடிகர் ரமேஷ் கண்ணா, இயக்குநர்கள் பேரரசு, கௌதம் ராஜ், பொன் குமரன், கணேஷ் பாபு, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் ரீ ரிலீஸ் பண்ணனும் விநியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசியவர்கள் ….
தயாரிப்பாளர் வினோத் ஜெயின்,
”நம் எல்லோருக்கும் நெருக்கமான படம் ‘ப்ரண்ட்ஸ்’. இந்தப் படத்தை எத்தனை முறை பார்த்தாலும் போரடிக்காது. தற்போது 4K தொழில்நுட்பத்தில் டால்பி அட்மாஸ் ஒலி அமைப்புடன் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தினை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க உதவிய அனைவருக்கும் நன்றி. இப்போதும் அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும்”.
ஷானு,
“இப்படத்தை நவீன தொழில்நுட்பத்தில் புதுப்பிக்கும் பணிகள் 70 நாட்களுக்கும் மேலாக நடந்தது. தயாரிப்பாளர் அப்பச்சனிடம் பேசி, மறு வெளியீட்டிற்கான உரிமையை வாங்கும் போது படத்தை மிகப் பெரிய அளவில் வெளியிட வேண்டும் என்ற நிபந்தனையுடன் தான் அனுமதி வழங்கினார். மிகப்பெரிய திறமை வாய்ந்த தொழில்நுட்பக் குழுவிடம் படத்தின் புதுப்பிப்பு பணிகளை வழங்கினோம். இந்தப் படத்திற்காக 5.1 – 7.1- டால்பி அட்மாஸ் – என மூன்று வெர்ஷன்களில் ஒலிகளை மாற்றி அமைத்திருக்கிறோம். ஒவ்வொரு ஃபிரேமையும் டி ஐ (DI) செய்து, கலர் கரெக்ஷனையும் செய்திருக்கிறோம். ரசிகர்களுக்கு ஃப்ரெஷ்ஷான அனுபவத்தை மீண்டும் வழங்குவதற்காக கடினமாக உழைத்திருக்கிறோம். இந்தப் படத்தை எந்தக் காலத்தில் பார்த்தாலும் ரசிகர்களுக்கு சிரிப்பு வரும். அல்டிமேட் டாக இருக்கும்”
இயக்குநர் கௌதம் ராஜ்
“அந்தக் காலத்தில் சித்திக் தான் பான் இந்திய இயக்குநர். அவர் ஒரு கதையை மலையாளத்தில் எடுத்து வெற்றி பெற வைத்து, அதே கதையுடன் தமிழ், தெலுங்கு , இந்தி என ஒரு ரவுண்ட் போய் ஜெயிக்க வைப்பார். அதன் பிறகு மீண்டும் மலையாளத்திற்கு வருவார்.
லெஜெண்ட் இளையராஜாவின் பாடல்களை இப்போது கேட்டாலும் ஃப்ரஷ்ஷாக இருக்கிறது. தற்போதுள்ள இளம் தலைமுறை ரசிகர்கள் இதை ஒதுக்குவார்கள், அதை ஒதுக்குவார்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. நல்லவை அனைத்தையும் ரசிக்கிறார்கள். இந்தப் படம் அவர்களுக்கு வேறு ஒரு அனுபவத்தை வழங்கும்”.
இயக்குநர் பொன்குமரன்
“நான் கன்னடத்தில் படங்களை இயக்கி விட்டு தமிழில் இயக்குவதற்காக வினோத் ஜெயினிடம் ஒரு கதையை சொன்னேன். அப்போது அவர் மற்றொரு கதையை சொல்லி இந்த கதையை படமாக்கலாம் என சொன்னார். அந்தக் கதை மிகவும் அதிகம் செலவாகுமே என்று சொன்னதற்கு பரவாயில்லை என்று சொல்லி, தற்போது ‘கோல்மால் ‘ என்ற பெயரில் படத்தை தயாரித்து வருகிறார். அதே அளவிற்கான நேரத்தையும், பொருளை யும் செலவு செய்து ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை புதுப்பித்திருக்கிறார். தியேட்டருக்கு வரும் ரசிகர்களுக்கு தரமான படத்தை தர வேண்டும் என்ற அவருடைய எண்ணம் உயர்வானது”.
நடிகர் ரமேஷ் கண்ணா
“இயக்குநர் சித்திக் அவர் எழுதிய வசனங்களை தவிர வேறு எந்த வசனங்களையும் நடிகர்கள் பேச அனுமதிக்க மாட்டார். நான் அவருடன் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் வசனகர்த்தாவாக பணியாற்றி இருக்கிறேன். ஸ்கிரிப்டில் இருக்கும் டயலாக்கை தவிர வேறு ஒரு வசனத்தை நடிகர்கள் பேசினால் ஒப்புக்கொள்ள மாட்டார். இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஆணியே புடுங்க வேணாம்’ எனும் டயலாக் கோகுல கிருஷ்ணா வும், டைரக்டர் சித்திக் சாரும் எழுதிய டயலாக் தான்.
ப்ரண்ட்ஸ் படத்தை பொருத்தவரை இயக்குநர் சித்திக் சீன்களை ரசித்து ரசித்து உருவாக்கினார். அவர் ஒரு சிறந்த நகைச்சுவை உணர்வு மிக்கவர். அவரின் மறைவு சினிமாவுக்கு பேரிழப்பு தான்.
நாங்கள் சினிமாவில் அறிமுகமா கும் போது எங்களுக்கு பிடித்த காமெடி படம் ‘காதலிக்க நேரமில்லை’, ‘ஊட்டி வரை உறவு’. இந்தப் படங்களை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். அதேபோல் ‘ப்ரண்ட்ஸ்’ படத்தை எப்போது பார்த்தாலும் சிரிக்கலாம். இதனால் இந்த படம் ரீ ரிலீசிலும் மிகப்பெரிய வெற்றி பெறும்”
இயக்குநர் பேரரசு
“தற்போதுள்ள சூழலில் புதிய படங்களை வெளியிடுவதிலேயே சவால்கள் உள்ளது. இந்நிலையில் ஒரு படத்தை ரீ ரிலீஸ் செய்வது மிகப்பெரிய விஷயம். ரீ ரிலீஸ் செய்கிறார்கள் என்றால் அதற்கான தகுதி இருக்க வேண்டும். அதற்கான தகுதி இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படத்திற்கு இருக்கிறது. தினமும் வெளியாகும் குண்டு வெடிப்பு, வன்முறை, உயிர் பலி போன்ற செய்திகளால் மக்கள் மனதளவில் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகப்பெரிய ரிலீஃபாக இந்த ‘ப்ரண்ட்ஸ்’ படம் அமையும்”.








Comments are closed, but trackbacks and pingbacks are open.