என்னது, எம்.பி.க்கும் கட்டிங்கா? விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் !
என்னது, எம்.பி.க்கும் கட்டிங்கா? விழிபிதுங்கி நிற்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் !
தமிழகத்தில் ஒரு காலத்தில் உச்சத்தில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில் கொரோனா காலத்துக்கு பின்னர் மீண்டு எழ முடியாத அளவுக்கு நெருக்கடியை சந்தித்து வருவதாக பலரும் புலம்பி வருகிறார்கள்.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கு நிகராக நிலத்தில் முதலீடு செய்வதையும் பாதுகாப்பான முதலீடாகவே பார்க்கப்படுகிறது. நடுத்தர வர்க்கத்தினரையும் குறிவைத்து, மாதாந்திர தவணை திட்டம், வங்கி நிதியுதவியுடன் வீட்டுமனை விற்பணை என பல கவர்ச்சிகரமான திட்டங்களுடன் வெற்றிகரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த ரியல் எஸ்டேட் தொழில் இன்று பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்தில் இருந்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
ஒரு ஏக்கர் இரண்டு ஏக்கர் அளவுக்கு நிலங்களை வாங்கி அதனை வீட்டு மனைகளாக மாற்றி, உள்ளூர் அளவில் ரியல் எஸ்டேட் செய்து வந்த பலரும் தொழிலை வெற்றிகரமாக நடத்த முடியாத அளவுக்கு விழிபிதுங்கி நிற்கிறார்கள். மக்களிடம் பணப்புழக்கம் இல்லை என்பதால் மட்டுமல்ல; கார்ப்பரேட் நிறுவனங்களின் கால்தடமும் ரியல் எஸ்டேட் பிசினஸில் புகுந்த அரசியலும்தான் பிரதான காரணம் என்கிறார்கள்.

“நிலத்தை வாங்கிறதுல இருந்து அத பிளாட்டுகளா மாற்றி பத்திரம் பதிவு செஞ்சு கொடுக்கிற வரைக்கும் கட்டிங் கொடுத்தே மாளல … இதுல புதுசா சம்பந்தமே இல்லாம, எம்.பி.யையும் கவனிச்சாதான் தொழில் பண்ண முடியும்னு ஆக்கிட்டாங்க. இந்த கொடுமையெல்லாம் எங்கெண்ணு சொல்ல…” என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்புகிறார், மேற்கு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர்.
”என்னது, எம்.பி.க்கும் கட்டிங் வெட்டினாதான் பிசினஸ் பண்ண முடியுமா?” சங்கதி புதுசா இருக்கேனு, மெல்ல, அவரது வாயை கிளறினோம்.
“அட, அந்தக்கூத்தை ஏன் கேக்குறீங்க. புதுசாவா, இதெல்லாம் ஓவரா இல்லியா உங்களுக்கு?னு கேட்குற மாதிரிதான் இருக்கு. நேரடியாக கேட்க முடியுமா, என்னா? என்னத்த பண்ணி தொலைக்கிறதுனு வெளிய சொல்ல முடியாம புழுங்கிட்டு கிடக்கோம்.” என்கிறார், அவர்.
“ஒரு விவசாயிகிட்ட இருந்து ஒரு ஏக்கர் நிலத்த ஒரு கோடி கொடுத்து வாங்குறோம்னு வச்சுக்கோங்க. முதல்ல, அந்த இடத்துல வேற வில்லங்கம் ஏதும் இருக்கானு பார்த்து, அதுல ஏதும் சிக்கல் இருந்தா ரெவினியூ ஆட்கள வச்சி சரிசெஞ்சி இடத்த எங்க பேருக்கு எழுதி வாங்கனும். அப்புறம், அத அளந்து சப்டிவிசன் செஞ்சி, எங்க பேருக்கு பட்டா மாத்தனும். இதெல்லாம் வழக்கமான செலவுகள்னு வச்சிக்கிங்க…”

“இது சொல்றதுக்கு ஈசியா இருக்கும். அந்த இடத்த வாங்கப்போறோம்னு தெரிஞ்சா, அந்த ஊருல டானுனு நாலு பேரு வருவான். இந்த இடத்துல விவகாரம் இருக்கு. நீ ஒதுங்கிக்கனு மிரட்டுவாங்க. இல்ல, நேரடியாக எனக்கு இவ்வளவு கொடு பிரச்சினை பண்ண மாட்டேனு ரேட் பேசுவாங்க. பேசுற ஆளு எப்படி? அவருக்கு பின்னணி என்ன? அப்படிங்கிறதெல்லாம் விசாரிச்சு, அவங்ககிட்ட பேரம் பேசி அப்படி இப்படினு ஏதோ அட்ஜஸ்ட் பண்ணி கொடுத்துதான் ஆகனும். ”
“அதுக்கு அப்புறம், வாங்குன நிலத்த DTCP அனுமதிக்கு விண்ணப்பிக்கனும். அதுக்கு ஆயிரத்தெட்டு பார்மாலிட்டிஸ். அஞ்சு வருசத்துக்கு அடங்கல் வாங்கி கொடுத்தாகனும். வேளாண்துறையில இருந்து அது விவசாய நிலம் இல்லைனு என்.ஓ.சி. வாங்கிக் கொடுத்தாகனும். அப்புறம் ரெவினியூல இருந்து அது நீர்நிலை இல்லைனு ஒரு சான்று வாங்கியாகனும். இதெல்லாம் கொடுத்து விண்ணப்பிச்சா, DTCP ஏ.டி. வந்து சைட்ட பார்ப்பாரு. அத பார்த்துட்டுதான் அனுமதியே கொடுப்பாரு. அவருக்கு ஏதும் கொடுக்காம அவரு அனுமதி கொடுப்பாரா என்ன? அதையும் செஞ்சாகனும். அப்புறம், போட்ட லே-அவுட் படி ரோடுகளை பஞ்சாயத்துக்கு பத்திரம் செஞ்சி கொடுத்தாகனும். ஒன்னு 10% ஓ.எஸ்.ஆர். இடம் ஒதுக்கனும். இல்லையா, விற்கப்போற பிளாட்டோட அளவுல 10% வழிகாட்டி மதிப்புல பணமாக கட்டியாகனும்.”
“DTCP-ல இருந்து லோக்கல் பாடிக்கு அனுப்பிடுவாங்க. ஊராட்சி மன்றத் தலைவரு போயி பார்க்கனும். அவரு இல்லாத பில்டப் கொடுப்பாரு. அதையும் இதையும் சொல்லி மீட்டர் போட பார்ப்பாரு. என்ன உங்க கைக்காசையா கொடுக்கப்போறீங்க. பிளாட்டு வித்து சுளையா எடுக்கத்தானே போறீங்க. கேட்குறத கொடுத்தா என்னனு கேட்பாங்க. அவங்கள சரிகட்டி, அடுத்து RERA –வுக்கு விண்ணப்பிக்கனும்.”
“இதுல ஆறுதல் என்னன்னா, RERA-வுக்குதான் ஏதும் பெரிசா செலவு பண்ண தேவையில்லை. கவருமெண்ட் பீஸ் மட்டும் கட்டினா போதும். வேற மேல் செலவு ஏதுமில்லை. RERA-அப்ரூவ்டு கிடைச்சாச்சுனா சம்பந்தபட்ட சப்-ரெஜிஸ்டரை பார்த்தாகனும். அவரு நேரா மினிஸ்டர பார்த்துட்டு வாங்கனு சொல்லி அனுப்பிடுவாரு. ரெண்டு மூனு மாவட்டத்துக்கு ஒரு ஆளுனு போட்டு வச்சிருக்காங்க. அவர போயி பாக்கனும். செண்ட்-க்கு ரெண்டாயிரம் ரூபா சுளையா எடுத்து வச்சாகனும். ஒரு ஏக்கர் ஒரு செண்ட் இடம்னா கூட தள்ளுபடியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. இரண்டு இலட்சத்து ரெண்டாயிரம் ரூபாயை எடுத்து வச்சிடனும். அவருகிட்ட கொடுத்துட்டோம்னா, அவங்க நேரடியா மாவட்ட பதிவாளருக்கு தகவல் கொடுத்திருவாங்க. மாவட்டப்பதிவாளர் சார்பதிவாளருக்கு சிக்னல் கொடுத்திடுவாரு. அதோட முடிஞ்சதுனு நினைக்கிறீங்களா? அதான் இல்ல. வழிகாட்டி மதிப்பை சார்பதிவாளர்தான் நிர்ணயம் செய்யனும். அவரும் ஃபீல்டுக்கு வந்தாகனும். சைட்டை பார்த்தாகனும். அவரும் சும்மா வருவாரா? எப்படியும், ஏக்கருக்கு 50-க்கு குறையாம வாங்கிடுவாங்க. கடைசியா, அவரு ஃபார்மலிட்டீஸ் எல்லாம் முடிச்சாதான் பிளாட்ட விற்கவே முடியும்.”
“ஏழு கடல்தாண்டி, ஏழு மலை தாண்டினு சொல்றா மாதிரி, இத்தனை இடங்கள தாண்டி, ஒவ்வொரு இடத்திலயும் கட்டிங் கொடுத்துதான், ஒரு ப்ராஜக்ட்டையே தொடங்க முடியும். அதுவும் எதிர்பார்த்தபடி, முழுசா வித்தாதான் ஆச்சு. நூறு பிளாட் போடுற இடத்துல, 90 வித்து, 10 பிளாட் விற்காம போனாலும் எங்களுக்கு சிக்கல்தான். நாலைஞ்சு ப்ராஜெக்ட் வச்சிருக்கவங்களுக்கு பிரச்சினை இல்ல. எப்படியும் ரொட்டேஷன் ஆயிடும். ஒன்னு ரெண்டுனு உள்ளூர் அளவுல போடுறவங்களுக்கெல்லாம் இது பெரும் நெருக்கடிதான். ”
“நிலமை இப்படி இருக்கிறப்பதான், ஏதோ இந்த தொழிலுக்குள்ள வந்துட்டோம். வேற தொழிலுக்கும் போக முடியாது. ஓஹோனு இலாபம் இல்லாட்டியும் பரவாயில்லை. ஏதோ, வயித்துபாட்டுக்காச்சும் வந்தா பரவாயில்லைனு தம் கட்டினா. இதுவரைக்கும் இல்லாத நடைமுறையா, போயி எம்.பி.யைப்பாருனு சொல்றாங்க.”
“ஊராட்சி தலைவர்களுக்கான பதவிக்காலம் முடிஞ்சி போனதால, அப்ரூவ்டு கொடுக்கிற இடத்துல பி.டி.ஓ. இருக்காரு. அவருதான் தீர்மானம் போட்டு கொடுத்தாகனும். அப்படி பி.டி.ஓ.வ பார்க்க போனப்பதான், எம்.பி.ய பார்த்துட்டு வாங்கனு அசால்ட்டா சொல்றாப்ல. இதுக்கு எதுக்குங்க எம்.பி.ய பாக்கனும். ஏதோ, கவுன்சிலர பாரு, மினிஸ்டர பாருனு சொன்னாகூட பரவாயில்லை. எம்.பி.க்கும் இதுக்கும் என்னங்கனு கேக்கவா முடியும்? வேற வழியில்லையே ! அனைத்து உலகங்களுக்கும், உயிரினங்களுக்கும் தலைவரான அந்த கடவுளின் பெயரை கொண்ட அந்த எம்.பி.ய பார்த்தா, ஏக்கருக்கு மூனு இலட்சம்னு புதுசா கேட்குறாங்க. ஏண்டா, இந்த வேலையை தொட்டோம்னு ஆயிப்போச்சு. பாதி கிணறு தாண்டியாச்சு, பாதியில நின்னா பாதிப்பு நமக்குத்தான். என்ன ஆனாலும் முழுசா தாண்டித்தானே ஆகனும்னு, மனசுக்குள்ள புலம்பிகிட்டே ஓட வேண்டியதாயிருக்கு.”னு வேதனையை வடிக்கிறார்கள் ரியல் எஸ்டேட் காரர்கள்.
நாமும் விசாரணையில் இறங்கினோம். “போன ஆட்சியில ஆரம்பிச்ச வச்ச பார்முலாங்க இது. சொந்தக் கட்சிக்குள்ளேயே இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியிலும், அண்ணே மிடுக்கா நிக்கிறாருனா, அதுக்கு ஃப்ளாஷ்பேக் இந்த பார்முலாதான். தமிழ்நாட்டுல யாரு, எங்க புதுசா பிளாட்டு போடுறதா இருந்தாலும் மினிஸ்டர பார்த்தாகனும்னு அடிக்கல் நாட்டி, அமல்படுத்தி காட்டினது அவங்கதான். அவங்கதான் சரியில்ல, நாங்க அப்படியில்லைனு சொல்றவங்களும் அந்த பார்முலாவை மாத்தாம, அப்படியே தொடர்ந்துகிட்டுருக்காங்க. சரி, அதோட நின்னுகிட்டாதான் பரவாயில்லையே, எம்.பி.யும் அந்த பார்முலாவ ஃபாலோ பன்னி பார்ப்போம்னு ஆரம்பிச்சிருக்காரு. இது, இப்போதான். மூனு நாலு மாசமா.” என்கிறார், ஒருவர்.
அட ஏணுங்க … மாவட்டத்துல இருக்கிற அந்த பாராளுமன்ற தொகுதிக்கு இவரு புதுசா வந்தவரு. பக்கத்து மாவட்ட அமைச்சர்தான் இந்த மாவட்டத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்ங்கிறதால, இவரும் நல்ல பசை பார்ட்டினு இவர இங்க நிறுத்தினாங்க. கட்சிக்குள்ளயே புகைச்சல் வந்துச்சி. இருக்கிற எம்.பி.யே தங்கமானவராச்சே. புதுசா இவர ஏன் இங்கே நிறுத்தனும்னு கேட்டாங்க. நல்லவரா இருந்து என்ன பிரயோஜனம். ஒன்னும் சொல்லிகிறமாதிரி இல்லையேனு சொல்லிதான், இவர போட்டாங்க. இப்பவும் பவர்ஃபுல் மினிஸ்டரான அவருக்கும் இவருக்கும் இடையிலான நெருக்கம்தான், அவரை எம்.பி.யாக்கியதுனும் சொல்றாங்க.
“எது எப்படியோ, எங்களை தொழில் பண்ண விட்டா சரி. இதெல்லாம் பிளாட்ட வித்து காசு பார்த்த பிறவு கொடுத்தாகூட நியாயங்கலாம். நாலு காச பார்த்தோம் கொடுத்தோனு போயிடலாம். என்ன கதிக்கு ஆகுனே தெரியாம, கடன வாங்கி முதல் போட்டு இவ்வளவு செலவு செஞ்சி பிளாட் போணியாகமா போச்சுனா? இப்படியே போச்சுனா, தொழிலே பண்ண முடியாது. இத போயிட்டு, யாருகிட்ட கம்ப்ளையிண்ட் கொடுக்க முடியும்? தலையெழுத்தேனு போய்த் தொலைய வேண்டிதான்.” என தலையில் அடித்துக் கொள்ளாத குறையாக புலம்பலை கொட்டித் தீர்க்கிறார்கள், ரியல் எஸ்டேட்காரர்கள்.
– அங்குசம் புலனாய்வுக்குழு.