பெண்களும் சமூக செயல்பாடுகளும் – உலக உழைக்கும் மகளிர் தினம் – யாவரும் கேளீர்- தமிழியல் பொதுமேடை -17

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பெண்கள் உரிமைகளைப் பெற போராட வேண்டும் – எழுத்தாளர் கேத்தரின் கருத்து…

அங்குசம் சமூக நல அறக்கட்டளை யாவரும் கேளீர் தமிழியல் பொதுமேடையின் சார்பில் மார்ச்சு 8ஆம் உலக உழைக்கும் பெண்கள் நாள் விழா அங்குசம் அறக்கட்டளை அலுவலகத்தில் ‘பெண்களும் சமூக செயல்பாடுகளும்’ என்னும் பொருண்மையில் நடைபெற்றது. இவ்விழாவிற்குத் திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கப் பொறுப்பாளர் சிறுகதை படைப்பாளர் திருமதி கேத்தரின் ஆரோக்கியசாமி தலைமையில் நடைபெற்றது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இவ் விழாவில் திருச்சி துவாக்குடி அரசினர் கலைக் கல்லூரி வேதியியல் துறை இணைப்பேராசிரியர் முனைவர் இரா. மலர்விழி, திருச்சி பெல், காமராசர்புரம் சாரதா நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் திருமதி பா.சுமதி, மக்கள் கலை இலக்கியம், மக்கள் அதிகாரம் அமைப்புகளின் புரட்சி பாடகர் இலதா, சாமானிய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்ட செயலாளர் திருமதி ஷைனி, திருச்சி துவாக்குடி காக்கும் கரங்கள் மனிதவள மேம்பாட்டு அமைப்பின் இயக்குநர் திருமதி திலகா, தந்தை பெரியார் கல்லூரி மாணவர் விமலா ஆகியோர் உரையாறினர். திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் முனைவர் பட்ட ஆய்வாளர் திருமதி இரேவதி ஜேடிஆர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தி.நெடுஞ்செழியன் நிகழ்வுக்கு வருகை தந்த ஆளுமைகளை அறிமுகம் செய்து வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் புரவலர் பேராசிரியர் ரெ.நல்லமுத்து பயனடைகள் அணிவித்து சிறப்பு செய்தார். பாரதிதாசன் பல்கலைக்கழக பெரியார் விருதாளர் திருச்சி தி.அன்பழகன் ஆளுமைகளுக்கு நூல்களை பரிசாக வழங்கினார். அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் தலைவர் ஜேடிஆர் உரையாற்றிய ஆளுமைகளுக்குச் சான்றிதழ் வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஆளுமைகளின் உரைகள் சுருக்கமாகத் தொகுத்து தரப்பட்டுள்ளன.

எழுத்தாளர் கேத்தரின்

எழுத்தாளர் கேத்திரின் தன் தலைமை உரையில், “அங்குசம் சமூக நல அறக்கட்டளை உலகப் பெண்கள் தினம் என்று கொண்டாடாமல் ‘உலக உழைக்கும் பெண்கள் நாள்’ என்று விழாவை அமைத்திருப்பது பொருத்தமுடையதாக உள்ளது. பெண்களின் சமூக செயல்பாடுகள் குறித்து பேச தலைசிறந்த ஆளுமைகளை அழைத்திருப்பது பாராட்டுக்குரியதாகும். திருச்சி கிழக்கு தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கபிஸ்தலம் ஆசா என்று அழைக்கப்படும் ஆரோக்கியசாமி என் வாழ்க்கைத் துணைவர். அவரும் நல்லதொரு எழுத்தாளர். பல சிறுகதைகளைப் படைத்திருக்கிறார். அவருடைய மறைவுக்குப் பிறகு நான் படைப்பிலக்கியத் துறைக்கு வந்து, சிறுகதைகளை எழுதத் தொடங்கினேன்.

எழுத்தாளர் கேத்தரின்
எழுத்தாளர் கேத்தரின்

அப்போது எனக்கு வயது 60. பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ அவர்கள்தான் என்னை எழுதவேண்டும் என்று தூண்டினார். கடந்த 15 ஆண்டு காலமாக பல சிறுகதை தொகுப்புகளை வெளியிட்டுள்ளேன். என் துணைவர் பெயரில் திருச்சியில் உள்ள தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்த்துறையில் அறக்கட்டளையை நிறுவி, படைப்பிலக்கியத்திற்கான போட்டிகளை நடத்தி, அதில் சிறந்துவிளங்கும் மாணவர்களுக்குப் பரிசுகளையும் நிதி உதவிகளையும் வழங்கிவருகிறேன். பெண்கள் சாதனை செய்ய வயது ஒரு தடையல்ல. பெண்கள் உரிமையோடு வாழவேண்டும். அதற்குப் போராடவேண்டும். உரிமையைக் கொடுப்பார்கள் என்று காத்திருக்கக்கூடாது” என்று வலியுறுத்தி உரையை நிறைவு செய்தார்.

முனைவர் இரா.மலர்விழி

“உலகப் பெண்கள் தினம் என்றால் பெண்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாடட்டம் என்றுதான் இருக்கும். இங்கே சமூகத்தின் உயர்வுக்காகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஆளுமை நிறைந்த பெண்களை அழைத்து உரையாட வைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த பல ஆண்டு காலம் சுற்றுச்சூழல் மற்றும் பல்லூயிர் பாதுகாப்பு குறித்து கல்லூரி / பள்ளி மாணவர்களிடம் தொடர்ந்து உரையாற்றி வருகிறேன். குறிப்பாக நெகிழி என்னும் பிளாஸ்டிக் பயன்பாடு எப்படி இந்த மண் வளத்தைப் பாதிக்கின்றது என்பது குறித்தும் படங்கள் மூலம் விளக்கவுரையாற்றி வருகிறேன்.

மலா்விழி

மலா்விழி

நம்மைச் சுற்றி இருக்கின்ற சூழல் நன்றாக இருந்தால்தான் நம் வாழ்க்கை சிறப்பாகவும் நன்றாகவும் இருக்கும். சூழலைப் பேணிக் காக்காமல் இருந்தால் நம் வாழ்வு சிறப்பாக இருக்காது. என் வீட்டில் ஏசி என்று சொல்லக்கூடிய குளிர்பதனக் கருவி இல்லை என்று குறிப்பிட்டார்கள். என் வீட்டைச் சுற்றி நிழல்தரும் மரங்களை நிறைய வளர்த்து வருகிறேன். அதனால் என் வீட்டில் வெப்ப தாக்கம் குறைவாக இருக்கும். சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நாம் மழைநீரைச் சேகரிக்கவேண்டும். அதனால் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

நல்ல குடிநீர், நல்ல காற்று, நல்ல மழை பொழிவு என்று வாழ்ந்து வருகிறோம். இப்படிப்பட்ட ஒரு உலகத்தை நாம் அப்படியே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கவேண்டும். சூழலைப் பாதிப்பு அடைய செய்யவிட்டு, அடுத்த தலைமுறைக்கு மாசு நிறைந்த உலகத்தை நாம் விட்டுச்செல்லக்கூடாது. நாம் இந்த உலகத்திற்கு வந்த பயணிகள். இந்த உலகம் எல்லா உயிரினங்களுக்கும் சொந்தமானது என்ற எண்ணம் நமக்குள் இருக்கவேண்டும்” என்று சுற்றுச்சூழலின் மேன்மைகளை எடுத்துரைத்தார்.

திருமதி பா.சுமதி

”அங்குசம் சமூக அறக்கட்டளை என்னையும் ஓர் ஆளுமையாக அழைத்து என் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு வழங்கியமைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். நான் தலைமையாசிரியராக உள்ள சாரதா நடுநிலைப்பள்ளி என்பது அரசு உதவிபெறும் பள்ளி. இங்கே படிக்கும் பெரும்பான்மையான மாணவ, மாணவியர் துவாக்குடி மலையில் கல்லுடைக்கும் தொழிலை செய்துவருபவர்களின் பிள்ளைகள். அவர்கள் காலையில் கல்லுடைக்கும் தொழிலுக்குச் சென்றுவிடுவார்கள். இந்தப் பிள்ளைகள் காலை உணவைச் சாப்பிட்டும் சாப்பிடாமலும் வருவார்கள். காரணம், இரவு செய்த சோற்றில் நீர் ஊற்றி வைத்து காலையில் பிள்ளைகளைச் சாப்பிட சொல்லிவிடுவார்கள். பிள்ளைகளுக்கு இந்த சோறு பிடிக்காமல் பள்ளிக்கு வந்துவிடுவார்கள்.

சுமதி
சுமதி

காலையில் நடைபெறும் பிரேயர் நேரத்தில் பிள்ளைகள் நிற்கமுடியாமல் தடுமாறுவார்கள். சிலர் கீழே விழுந்துவிடுவார்கள். காரணம் இவர்கள் காலையில் சரியாக உணவு எடுத்துக்கொள்ளாததால் ஏற்படும் விளைவுகள் என்பதை உணர்ந்துகொண்டோம். கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பே மாணவர்களுக்குக் காலை உணவு வழங்கும் ஒரு திட்டத்தை எங்கள் பள்ளியில் தொடங்கி தொய்வில்லாமல் செயல்படுத்தி வருகின்றோம். இதற்கு பாரதமிகுமின் நிறுவனத்தின் தொழிற்சங்கள், பல தனியார், எங்கள் ஆசிரியர்களின் நிதி உதவி இத் திட்டம் தொடங்க உதவியாக இருந்தது. மதிய உணவு வழக்கம்போல் தொடர்ந்தது.

மாணவ, மாணவியரின் அறிவுத் திறன், தனித்திறன் இந்தக் காலை உணவு திட்டத்தால் உயர்ந்தது. பெற்றோர்களும் காலை உணவுத் திட்டத்திற்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கினார்கள். பசியோடு பிள்ளைகள் கல்வி பெறமுடியாது என்பதை உணர்ந்தே இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தினோம். அங்குசம் இதழில் எங்கள் பள்ளியின் காலை உணவுத் திட்டம் குறித்து கட்டுரை வெளியிடப்பட்டது எங்களுக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது” என்று கூறி, நிகழ்வில் கலந்துகொண்டவர்களும் நெகிழுமாறு உரையாற்றினார்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

திருமதி இலதா

”சமூக நலம் என்பது சமூக அநீதிகளுக்கு எதிராகப் போராடுவது என்ற சிந்தனையின் அடிப்படையில்தான் மக்கள் கலை இலக்கியக் கழகம், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. அதில் நாங்கள் மக்கள் விழிப்புணர்வு பெறும் வகையில் பாடல்களைப் பாடி வருகின்றோம். ஒரு இளைஞன் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்கிறான். கேட்டால் நான் போதையில் இருந்தேன். லேப்-டாப்பில் ஆபாச படம் படித்தேன். அதன் விளைவாக பாலியல் பலாத்காரம் செய்தேன் என்கிறான். பெண்கள் எவ்வளவு முன்னேற்றினாலும் அவர்கள் இன்னும் சமுதாயத்தில் அடிமையாகவே நடத்தப்படுகின்றார்கள். இதற்குதான், ‘சமூகத் தீமைகளை எதிர்த்து நிற்கும் தைரியம் வேண்டும்….” என்று பாடுகின்றோம். ‘ஆணாதிக்க வேரறுக்கப் போராடு……. ஆணாதிக்கம் மிகுந்தவனை இழுத்துப்போட்டு சாத்து” என்றும் பாடுகின்றோம்.

இலதா
இலதா

கேரளவில் ஐயப்பன் கோவிலில் பெண்களும் கோவிலுக்குகள் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பாஜக ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் அந்தத் தீர்ப்பு இப்போது நடைமுறைப்படுத்தப்படாமல் உள்ளது. அப்போது “நாங்க உள்ளே வந்த தீட்டா… ஐயப்பா…. பெண்கள் உள்ளே வந்தால் தீட்டா” என்று பாடினேன். அந்தப் பாடல் தமிழ்நாடு மட்டுமல்லாது கேரளாவிலும் புகழ் பெற்றது. களத்தில் நாங்கள் போராடவும் செய்கின்றோம். திருவையாறு தியாகராசர் ஆராதனையில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படுவதில்லை.

தமிழில் பாடவேண்டும் என்று நாங்கள் மேடையில் ஏறி போராடியபோது எங்கள் தோழர்கள் கடுமையாகக் காவல்துறையால் தாக்கப்பட்டார்கள். பெண்களாகிய நாங்களும் காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டோம். ஸ்ரீரங்கத்தில் கருவறை நுழைவுப் போராட்டத்தை நடத்தினோம். இப்படி இந்த சமூகத்தில் எல்லா நிலைகளிலும் சமத்துவதும் இருக்கவேண்டும் என்ற வகையில் நாள் தொடர்ந்து போராடிக் கொண்டும், களத்தில் பாடல்களைப் பாடியும் சமூகப் பணியாற்றி வருகின்றோம்” என்று உரையை நிறைவு செய்தபோது அரங்கம் கரவொலியால் அதிர்ந்தது.

திருமதி ஷைனி

“சாமனிய மக்கள் கட்சியின் திருச்சி மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். என்னுடைய பணி என்பது தையல் மற்றும் அழகுநிலையம் வைத்திருக்கிறேன். நான் பிறந்தது கேரளா. நான் இப்போது திருச்சியில் இருக்கிறேன். நான் வாழும் திருச்சி, நான் பிறந்த கேரளா போன்று பசுமையாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். சாமனிய மக்கள் கட்சி சார்பில், நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, அரசு புறம்போக்கு நிலங்கள் ஆக்கிரமிப்பு, ஏழை, எளிய மக்களுக்குக் கிடைக்கவேண்டிய முறையான நீதி இவற்றுக்காகத் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுக்காவிலும் போராட்டங்களை நடத்திவருகின்றோம். இப்படி போராட்டங்களில் கலந்துகொள்ளும் போது நீர்நிலைகளை, அரசு புறம்போக்கு நிலங்களை ஆக்கிரமித்தவர்கள் எங்களுக்குக் கொலைமிரட்டல்கூட கொடுத்திருக்கிறார்கள். அதையெல்லாம் நாங்கள் அச்சம், பயம் கொண்டது கிடையாது.

ஷைனி
ஷைனி

அச்சுறுத்துவோரிடம் பணம் இருக்கலாம். எங்களிடம் போராடும் தைரியம் உள்ளது. எங்கள் கட்சி ஒரு சிறிய அரசியல் கட்சியாக இருந்தாலும் சமூக மேம்பாட்டில் மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்திருக்கவேண்டும் என்ற நம்பிக்கையோடு போராடி வருகின்றோம். உலக மகளிர் நாள் விழாவில் என்னையும் அழைத்து உரையாற்றும் வாய்ப்பை வழங்கிய அங்குசம் சமூக நல அறக்கட்டளைக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று உரையை நிறைவு செய்தார்.

திருமதி திலகா

“காக்கும் கரங்கள் மனித வள மேம்பாட்டு அமைப்பு என்ற பெயரில் அரசுசார அமைப்பைத் தொடர்ந்து பல ஆண்டுகாலம் நடத்தி வருகின்றோம். இந்த அமைப்பின் மூலம் பெண்களின் மேம்பாட்டுக்கான திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். தையல் இயந்திரங்கள் வழங்கி வருகின்றோம். தனித்து வாழும் பெண்களின் நலனையும், அவர்களின் குழந்தைகளின் கல்விக்காக அரசு வழங்கும் நிதியைப் பெற்றுத்தர ஆலோசனைகளை வழங்கி வருகின்றோம். பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்களுக்குச் சட்டஉதவிகளை வழங்கி வருகின்றோம். மாநில அரசு வழங்கிவரும் நிதி உதவியையும், அம்பேத்கர் பவுண்டேஷன் வழங்கும் நிதி உதவிகளையும் பெற்றுத் தருகிறோம்.

திலகா

திலகா

தொடர்ந்து பாதிக்கப்பட்ட பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பைபும் பெற்றுத்தருகிறோம். பாதிக்கப்பட்ட பெண்களுக்கு முறையாக நீதி கிடைக்கவில்லை, அரசு உதவி கிடைக்கவில்லை என்றால் மாவட்ட ஆட்சித்தலைவர்களின் பார்வைக்கு இந்த விஷயங்களைக் கொண்டு சென்று தீர்வுகளை ஏற்படுத்தி தருகின்றோம். தெருவில் மீன் விற்கும் பெண்களின் நலனைப் பாதுகாக்கவும் தற்போது திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றோம். இதுமட்டும் அல்லாமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும் அக்கறை செலுத்தி வருகின்றோம்.

பள்ளிகளிலும் கல்லூரிகளிலும், குண்டூர் ஜே.எம்.நகர் பகுதிகளிலும் இதுவரை சுமார் 10ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இருக்கின்றோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எல்லாரும் பங்குபெறவேண்டும் என்ற சிந்தனையில், வீடுகளில் மரம் வளர்க்க பழமரக் கன்றுகளையும் வழங்கி வருகின்றோம். பள்ளிகளில் கிச்சன் கார்டன் அமைத்து தருகின்றோம். அதன் மூலம் அதில் விளையும் காய்கறிகளை மாணவர்களின் பகல் உணவு திட்டத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். காக்கும் கரங்கள் எதிர்காலத்தில் இன்னும் சிறப்பாக செயல்பட பல திட்டங்களை ஆராய்ந்துவருகின்றோம்” என்று குறிப்பிட்டார்.

மாணவர் விமலா

“நான் படிக்கவேண்டும் என்பதற்காக என் தாய் தந்தையரிடம் போராடிதான் இந்த உரிமையைப் பெற்றேன். கல்லூரி சென்று படிக்கவேண்டுமா? என்று என் தந்தை என்னிடம் கேட்டார். படிப்பது ஆண்களுக்கு உரிமையாக இருப்பதுபோல் பெண்களுக்கும் உரிமை என்றேன். +2 முடித்து கல்லூரியில் என் படிப்பு தொடர என் தந்தை ஒரு நிபந்தனை விதித்தார். அது என்னவென்றால், கல்லூரி சென்று கல்வி கற்று வீடு திரும்பிய பின்னர், நாம் நடத்தும் சிற்றுண்டி சாலையில் நீ வேலை செய்ய வேண்டும் என்றார். அதன்படி நான் கல்லூரி சென்று வீடு திரும்பியவுடன் கடையில் வேலை செய்வேன். காய் நறுக்குவேன். சாம்பார் வைப்பேன். வெங்காயம் நறுக்குவேன். தோசை போடுவேன். புரோட்டா வீசுவேன். இப்படி எல்லா வேலைகளையும் யாருடைய துணையும் இல்லாமல் கற்றுக்கொண்டேன்.

விமலா
விமலா

திருச்சியில் நடைபெறம் இலக்கியக் கூட்டங்களில் கலந்துகொள்வேன். பேச்சுப்போட்டி, கவிதைப்போட்டி, கட்டுரை போட்டி என்று எங்கு நடந்தாலும் என்னுடைய படைப்பை அனுப்பி வைப்பேன். பரிசுகளைப் பெறுவேன். பரிசு கிடைக்கவில்லை என்றால் மனம் சோர்ந்து போகமாட்டேன். தற்போது அகில இந்திய வானொலியில் அறிவிப்பாளராகவும் பணியாற்றி வருகின்றேன். பெண் அடிமையாக இருக்கக்கூடாது. உரிமைகளோடு வாழவேண்டும் என்ற உணர்வை எனக்குப் பெரியார் எழுதிய பெண் அடிமையானாள் என்ற புத்தகம்தான் தந்தது. நான் படித்து உயர்கல்வி முடித்து, இந்தச் சமூகத்தில் மதிப்புமிக்கப் பெண்ணாக உயரவேண்டும் என்ற சிந்தனைக்கு வழிவகுத்துக் கொடுத்த அங்குசம் சமூக நல அறக்கட்டளைக்கு என் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தோழர் கார்க்கி அவர்களின் உலகப் பெண்கள் நாள் குறித்த கவிதையை வாசித்தார். நிகழ்வு இனிதே நிறைவுற்றது. பின்னர் நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுமைகளுக்கு அங்குசம் சமூக நல அறக்கட்டளையின் சார்பில் சிற்றுண்டி வழங்கப்பட்டது. உலகப் பெண்கள் நாள் சமூக செயல்பாட்டில் சிறந்து விளங்கும் ஆளுமைகளோடு நடைபெற்றது பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தது என்பது உண்மையே.

 

—   ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.