பொதுத் துறையை விற்கத் துடிப்பது தேசத் துரோகம்! அதனை காக்கப் போராடுவதே தேசப் பக்தி !
பொதுத் துறையை விற்கத் துடிப்பது தேசத் துரோகம்! அதனை காக்கப் போராடுவதே தேசப் பக்தி ! இந்திய மக்களாகிய நாம் இந்தியாவின் 78வது விடுதலை நாளை எழுச்சியுடன் கொண்டாட தயாராகிக் கொண்டு இருக்கிறோம். இந்திய விடுதலைப் போராட்டத்தில் மிக முக்கியமான நிகழ்வு 1857யில் நடைபெற்ற மாபெரும் மக்கள் எழுச்சி. இந்திய மக்கள் அன்னிய ஏகாதிபத்தியத்தின் மீது நடத்திய மாபெரும் போர்.
ஜான்சியின் இராணி இலட்சுமிபாய் அவர்களுடன் இணைந்து பல்வேறு அரசர்கள் போரிட்டது மட்டுமல்ல, விவசாயிகள், இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அனைவரும் உழைக்கின்ற வர்க்கமாக அன்னிய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக அணிதிரண்டனர்.
இஸ்லாமியர்கள், இந்துக்கள், சீக்கியர்கள் எனப் பல மதங்களைச் சார்ந்தவர்கள் தில்லியை ஆண்ட இரண்டாவது பகதூர் ஷாவை பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியை எதிர்த்த போருக்கு தலைமையேற்கச் செய்து அவரை இந்தியாவின் சக்கரவர்த்தியாக அறிவித்தனர்.
விடுதலைப் போரில் தீவிரப் பங்காற்றியதற்காக இரண்டாவது பகதூர் ஷாவின் இரண்டு மகன்கள் மற்றும் ஒரு பேரன் ஆகிய மூவரும் பிரிட்டிஷ் இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
போரில் இந்தியர்கள் தோற்றாலும், மக்களிடம் பெரும் எழுச்சி உருவானது. எழுச்சியை எதிர்கொள்ள இயலாத பிரிட்டிஷ் அரசு, இந்தியர்களை மதரீதியாக பிரித்தால் மட்டுமே ஆட்சி செய்ய முடியும் என்ற முடிவிற்கு வந்தனர்.
பிரித்தாளும் சதி திட்டத்தின் படி, வங்காளம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிழக்கு வங்காளம் இஸ்லாமியர்கள் பகுதி, மேற்கு வங்காளம் இந்துக்கள் பகுதி என்று 1905ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு அறிவித்தது.
வங்காள மக்கள் தாங்கள் வங்க மொழி பேசும் மக்கள் என்றும், தங்களை மத ரீதியாக பிரிப்பதை அனுமதிக்க இயலாது என்றும் அறிவித்தனர்.
இஸ்லாமியர்களும், இந்துக்களும் இணைந்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதரீதியான பிரிவினையை எதிர்த்த வங்க மக்களின் போராட்டத்தில் உருவெடுத்ததே “சுதேசி இயக்கம்”.
பின்னர் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் சுதேசி இயக்கம் ஏற்றுக் கொள்ளப்பட்டு நாடு முழுக்க விரிவுப்படுத்தப்பட்டது.
மக்களின் கடும் எதிர்ப்பால் மதரீதியான பிரிவினையை 1911ம் ஆண்டு பிரிட்டிஷ் அரசு திரும்பப் பெற்றது.
பகத் சிங் முதல் வ. உ. சி. வரை நமது மூதாதையர்கள் செய்த தியாகம் இந்திய விடுதலைபப் போராட்டத்தை வலுப்படுத்தியது.
மக்கள் போராட்டம் இராணுவதிலும் பிரதிபலித்தது. 1946ம் ஆண்டு கப்பல் படை வீரர்கள் பிரிட்டிஷ் அரசை எதிர்க்கத் துணிந்தனர்.
மும்பையில் நிறுத்தப்பட்டிருந்த தல்வார் போர்க் கப்பலில் பிரிட்டிஷ் அரசின் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸின் மூவர்ணக் கொடி, முஸ்லிம் லீகின் பச்சைக் கொடி, கம்யூனிஸ்ட் கட்சியின் சிவப்பு கொடி இணைத்து ஏற்றப்பட்டது.
வர்க்கமாக அணிதிரண்ட இந்தியர்களின் ஒற்றுமையைக் கண்டு அஞ்சிய பிரிட்டிஷ் அரசு, ஒன்றுபட்ட மக்கள் போராட்டத்தின் வீரியத்தை உணர்ந்து ஆகஸ்ட் மாதம் 14 / 15 நள்ளிரவில் இந்தியாவை விட்டு வெளியேறியது.
“அக்கா அக்கா என்று நீ அழைத்தாய் அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?” என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார்.
நமது மூதாதையர்களின் இரத்தமும், உயிர் தியாகங்களும் பெற்றுத் தந்ததுதான் நமது இந்திய விடுதலை.
அரை நூற்றாண்டு காலமாக நமது தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பு பெரும் பொதுத் துறை நிறுவனங்களை உருவாக்கியது.
அத்தகையப் பொதுத் துறை நிறுவனங்களே சமூகநீதி அடிப்படையில் இட ஒதுக்கீடு மூலம் அனைவருக்கும் சமமான கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை உருவாக்க பெரிதும் உதவியது.
தற்போது பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தந்து, அரசுப் கல்லூரிளை, அரசுப் பல்கலைக்கழகங்களை, பலவீனமானப் படுத்தி அவற்றை சுயநிதி நிறுவனங்களாக மாற்றிடும் முயற்சியை ஒன்றிய அரசு செய்துவருகிறது. பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை அனைத்தையும் தனியாரிடம் ஒப்படைத்தால் மக்கள் போராடுவார்கள்.
மக்களின் கோபத்தில் இருந்து தான் தப்பிக்க பிரிட்டிஷ் அரசு செய்த அதே சூழ்ச்சியை அரங்கேற்ற துடிக்கிறது ஒரு கூட்டம்.
மத உணர்வுகளை தூண்டி மத ரீதியாக மக்களைப் பிளவுப் படுத்தும் தீய நோக்கம் கொண்ட செயல்பாடே “பிரிவினை பெருங்கொடுமை நினைவுகூரும் நாள்” ((Partition Horrors Remembrance Day) கடைப் பிடிக்கச் சொல்லுவது.
ஏகாதிபத்தியத்தியத்தின் பிரித்தாளும் சூழ்ச்சியால் பெரும் பாதிப்புகளைச் சந்தித்த நாம், அதிலிருந்து மீண்டு, முன்னேறி வரும் சூழலில், முன்னேற்றச் சிந்தனையை மழுங்கடித்து, நாட்டை பின்னோக்கி இழுக்கும் தீய சக்திகளிடம் இருந்து நம்மையும், நம் நாட்டையும் காப்பாற்றிக் கொள்ள இந்திய விடுதலை நாளில் உறுதியேற்போம்.
நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத் துறையையும், தனியார் வசம் ஒப்படைப்பதும், பங்குச் சந்தையில் பொதுத் துறைப் பங்குகளை விற்பதும் நமது அடுத்த தலைமுறையினருக்கு சமூகநீதி அடிப்படையில் வேலையும், கல்வியும் கிடைவிடாமல் செய்யும் துரோகம்.
பொதுத் துறையை விற்கத் துடிப்பது தேசத் துரோகம். பொதுத் துறையைக் காக்கப் போராடுவதே தேசப் பக்தி.
இந்திய நாட்டின் இயற்கை வளங்களையும், பொதுத் துறையையும் காப்பதற்கு கரம் கோர்த்து போராட இந்தியாவின் 78வது விடுதலை நாளில் (15.08.2024) உறுதியேற்போம்.
விடுதலைத் திருநாள் வாழ்த்துக்கள்.
பு. பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு, பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை .
கடந்த காங்கிரஸ் ஆட்சியில் இருந்தே பொதுத்துறை பங்குகளை விற்கிறார்கள் என்ற வாசகத்தை சேர்த்துக் கொள்ளவும்