“பலரின் கூட்டு முயற்சி தான் தங்கலான்”- சீயான் விக்ரம் பெருமிதம்!
“பலரின் கூட்டு முயற்சி தான் தங்கலான்”– சீயான் விக்ரம் பெருமிதம்! ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரடக்சன்ஸ் தயாரிப்பில், சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘தங்கலான்’ திரைப்படம் இன்று (ஆக.15) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் இந்தத் திரைப்படத்தை ரசிகர்களிடத்தில் அறிமுகப்படுத்துவதற்காக படக் குழுவினர் ஹைதராபாத், விசாகப்பட்டினம், பெங்களூரூ, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி ,சென்னை உள்ளிட்ட பல இடங்களுக்கு பயணித்து ரசிகர்களை நேரில் சந்தித்து உரையாடினர். இறுதியாக சென்னையில் ஆக.14-ஆம் தேதி பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது சீயான் விக்ரம், நடிகை பார்வதி, நடிகை மாளவிகா மோகனன், ஹாலிவுட் நடிகர் டேனியல், ஒளிப்பதிவாளர் ஏ. கிஷோர் குமார், கலை இயக்குநர் மூர்த்தி, இயக்குநர் பா. ரஞ்சித், ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி தனஞ்ஜெயன், தயாரிப்பாளர் நேகா ஞானவேல் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதில் பேசியவர்கள்… தனஞ்ஜெயன்
“சீயான் விக்ரம் படத்திற்காக உழைத்த உழைப்பை விட படத்தினை விளம்பரப்படுத்துவதற்காக தந்த கடின உழைப்பு.. நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு சிறந்த முன்னுதாரணமாக திகழும். ஒரு நடிகர் திரைப்படத்தில் நடிப்பதுடன் மட்டும் நிறுத்திக் கொள்ளாமல், அந்த படத்தினை ரசிகர்களிடம் சென்று சேர்ப்பதற்காக மேற்கொள்ளும் உழைப்பு தயாரிப்பாளர் மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் வெற்றியை கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் வழங்கிய அன்பும், ஆதரவும் அசாதாரணமானது. ஒவ்வொரு இடத்திலும் அவரின் செயல்கள் சிறப்பானதாக இருந்தது.
திரளாக கூடும் ரசிகர்களை கட்டுப்படுத்தி, அவர்களுடன் உரையாடி அவர்கள் மொழியிலேயே உரையாடி, அவர்களின் தேவையை புரிந்து கொண்டு உற்சாகமாக பேசி தங்கலானை சென்றடைய செய்திருப்பது அவருடைய தனிச்சிறப்பு. சீயான் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், டேனியல் என அனைவரும் கலந்து கொண்டதற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் திரைப்படம் மிகச்சிறப்பாக உருவாகி இருக்கிறது. ரசிகர்கள் பார்த்துவிட்டு கொண்டாடுவார்கள்.” என்றார்.
இசையமைப்பாளர் ஜீ. வி. பிரகாஷ்
“பழங்குடியின மக்களின் வாழ்வியலை இசையாக சொல்ல முயற்சித்து இருக்கிறோம். தமிழ் சினிமாவில் பழங்குடியின மக்களின் வாழ்வியல் பெரிதாக காண்பிக்கப்படவில்லை. ஏராளமான புதிய ஒலிகளை உண்டாக்கி அதில் பழங்குடியின மக்களின் வாழ்வியலோடு தமிழ் மணத்துடன் இரண்டற கலக்கச் செய்திருக்கிறோம். இதுவரை கேட்காத புல்லாங்குழல் ஓசை என தேடித்தேடி பல ஒலி மற்றும் ஓசைகளை சேகரித்து இணைத்து இருக்கிறோம். நிச்சயம் ரசிகர்களுக்கு இது புதிய அனுபவத்தை வழங்கும்”.
நடிகை மாளவிகா மோகனன் பேசுகையில், ” தங்கலான் நான் நடிக்கும் நான்காவது தமிழ்ப் படம். இது எனக்கு மிகவும் முக்கியமான படம். விக்ரம் சிறந்த சக நடிகர். பொதுவாக அனைத்து நட்சத்திர நடிகர்களும் சுயநலம் மிக்கவர்களாக இருப்பர். ஆனால் விக்ரம் இந்த விசயத்தில் தாராளமாக சக கலைஞர்களின் திறமையை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். உடன் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள் மீது அக்கறை செலுத்துபவர். இது மிகவும் அரிதான தகுதி. இதைப் பெற்றிருக்கும் சீயான் விக்ரமை பாராட்டுகிறேன். இதற்காக நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.
நடிகை பார்வதி பேசுகையில், “படத்தில் ரவிக்கை இல்லாமல் நடிப்பது சவாலாக இருந்தது. இதற்கு தேவையான உளவியல் வலிமையை வழங்கிய படத்தில் பணியாற்றிய கலைஞர்களுக்கு நன்றி. சீயான் விக்ரமின் அன்பு- நட்பு -உழைப்பு இதை நேரில் கண்டு வியந்து விட்டேன். ஒரு கற்பனையான கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கு எல்லையில்லை. ஆனால் அதனை ஏற்று நடித்து நடிப்பிற்கு எல்லையே இல்லை என்பதை மீண்டும் மீண்டும் தொடர்ச்சியாக நிரூபித்து வருகிறீர்கள். உங்களுடைய நடிப்பு எனக்கு முன்மாதிரியாக இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல வளர்ந்து வரும் அனைத்து கலைஞர்களுக்கும் உங்களுடைய நடிப்பு சிறந்த பாடமாக அமைந்திருக்கிறது. ” என்றார்.
இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில்,
“இந்தப் படத்தில் தங்கலானுக்கும் அவருடைய சமூக அரசியலுக்கும் இடையேயான புரிதலை விவரித்து இருக்கிறேன். தங்கலான் தான் யார்? என்பதை தேட தொடங்குவதன் ஊடாக விடுதலையை எப்படி அடைகிறார் என்பதும் இடம் பிடித்திருக்கிறது. இதை என்னுடைய திரை மொழி வடிவத்தில் சொல்லி இருக்கிறேன். என்னுடைய திரை மொழி வடிவம் சிக்கலானது என்றாலும்.. இந்தப் படத்தில் எளிமையாக சொல்ல முயற்சித்திருக்கிறேன்.
தமிழ் திரையுலக ரசிகர்கள் எப்போதும் முற்போக்கான விசயங்களுக்கு ஆதரவை வழங்குவார்கள். தமிழ் ரசிகர்கள் வணிகப் படம் கலைப் படம் என பிரித்துப் பார்த்து ஆதரிப்பதில்லை. அவர்கள் அனைத்தையும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் தான் பார்த்து ரசித்திருக்கிறார்கள். அதனால்தான் என்னுடைய படங்களில் நான் பேசும் அரசியலை புரிந்து கொண்டு தொடர்ச்சியாக ஆதரவளித்து வருகிறார்கள். நான் பேசும் கருத்தியலில் முரண் இருக்கலாம்.
ஆனால் என்னுடைய திரை மொழியை வரவேற்கிறார்கள். தொடர்ச்சியாக அவர்கள் அளித்து வரும் ஆதரவினால் தான் நான் தங்கலானை உருவாக்கி இருக்கிறேன். அத்துடன் ரசிகர்களுக்கு தங்கலான் ஒரு புது அனுபவத்தை வழங்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். தமிழ் ரசிகர்களுக்கு மட்டுமல்ல இந்திய ரசிகர்களுக்கும் இந்த தங்கலான் புதிய அனுபவத்தை அளிக்கும். ” என்றார்.
சீயான் விக்ரம் பேசுகையில்,
“இந்தப் படத்திற்காக இயக்குநர் பா. ரஞ்சித் கடினமாக உழைத்து இருக்கிறார். ஒவ்வொரு காட்சியை உருவாக்கும் போதும் அதனை படமாக்கும் போதும் படப்பிடிப்பு தளத்தில் அவருடைய கடின உழைப்பை என்னால் உணர முடிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருந்தாலும்.. படைப்பிற்கு என்ன தேவையோ.. அதனை நட்சத்திரக் கலைஞர்களிடமிருந்து பெறுவதில் உறுதியாக இருந்த விதம் என்னைக் கவர்ந்தது.
இந்தப் படத்திற்குப் பிறகு இதில் நடித்த அனைத்து கலைஞர்களுக்கும் எந்த படத்திலும் எளிதாக நடிக்க கூடிய அளவிற்கு பயிற்சியை வழங்கி இருக்கிறார். எங்கள் அனைவரையும் திறமை வாய்ந்த நட்சத்திரமாக மாற்றி இருக்கிறார்.
இந்தப் படத்தில் அனைவரும் கடினமாக உழைத்து இருக்கிறார்கள் என சொல்கிறார்கள். ஆனால் இது ஒரு கூட்டு முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். என்னைப் பொறுத்தவரை இந்தப் படம் அதை போன்றது.. இதைப் போன்றது.. என்று சொல்வார்கள்.
ஆனால் இது வேற மாதிரியான படம் என்பதை மட்டும் உறுதியாக சொல்வேன். படத்தை பார்த்துவிட்டு உங்களின் மேலான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.