செயின்ட் ஜோசப் கல்லூரியில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!
இந்திய நாட்டின் 77 வது குடியரசு தின விழா திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு செயின்ட் ஜோசப் கல்லூரி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. தலைமை தாங்கினார். முன்னதாக கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் அற்புத சகாயராஜ் வரவேற்புரையாற்றினார். கல்லூரி அலுவலகக் கண்காணிப்பாளர் என்.எம்.புஷ்பராஜ் அவர்கள் தேசியக்கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டார். கல்லூரியின் தேர்வு நெறியாளர் முனைவர் கு.அலெக்ஸ் சிறப்புரை நிகழ்த்தினார்.
அவர்தம் சிறப்புரையில், இன்று இந்தியா முழுவதும் மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருக்கிறது. பல்வேறு வீரர்களின் அணிவகுப்பு சிறப்பான முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனிப்புகள் பரிமாறப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஒரு கொண்டாட்ட விழாவாக மக்களால் மகிழ்வோடு நிகழ்த்தப்படுகிறது. காரணம் இன்று குடியரசு தினம். இந்த குடியரசு தினம் நமக்கு சில வினாக்களை நினைவூட்டல் செய்கிறது. நாம் யார்? நாம் எங்கிருந்து வந்தோம்? இந்த நாடு நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறது? இந்த வினாக்களையே இந்தக் குடியரசு தினம் எழுப்புகிறது.
மனிதர் மனிதர்களாக இருக்கிறோமா? என்கிற வினாவையும் இந்தநாள் நம்முன் வைக்கிறது. காலங்காலமாய் நல்ல பாம்புகள் விஷம் கொண்டவையாகவே இருக்கின்றன. நரிகள் தந்திரப்புத்தி உடையவையாகவே இருக்கின்றன. கழுதைகள் பிடிவாதம்மிக்க விலங்காகவே இருக்கின்றன. ஆமைகள் மெதுவாக நகரும் இயல்புடையவராகவே இருக்கின்றன. குரங்குகள் சேட்டைத்தனம் உள்ள உயிராகவே இருக்கின்றன. இவ்வாறு எந்த விலங்கும் தன் சுயரூபத்தை மாற்றாமல் அந்த சுயரூபத்தோடு இருக்கிறது.
ஆனால் மனிதன் மட்டும் பாம்பு மாதிரி விஷம் ஏறியவனாக, கழுதை மாதிரி பிடிவாதம் கொண்டவனாக, நரி மாதிரி தந்திர புத்தி உடையவராக, ஆமை மாதிரி தன் இயல்புக்கு மாறாக சோம்பேறி தனம் உடையவராக இருக்கிறான். மனிதன் மனிதனாக இருக்கிறானா என்கிற வினாவிற்கு விடை தேடுவதும் மனிதன் மனிதனாக இருப்பதும் நமக்கு முன்னால் இருக்கிற சவால். நாம் மனிதனாக இருக்கிறோமா என்கிற கேள்வியை உயரப் பறக்கின்ற கொடி நமக்குள் கேட்கிறது இந்த நாட்டுக்கு அறிவாளிகள் மட்டுமல்ல நல்ல மனிதர்கள் தேவை.
1990 ஆம் ஆண்டு விகடன் தீபாவளி மலரில் ஒரு வினா எழுப்பப்பட்டது “எது அழகு?” என்று எழுப்பப்பட்ட வினாவிற்கு இயற்கை அழகு, பறவை அழகு, நீர்வீழ்ச்சி அழகு, குழந்தை அழகு, குழந்தையின் சிரிப்பழகு என்றெல்லாம் விடைகள் வந்தன. அந்த வினாவை அன்றைய முதல்வர் கலைஞர் அவர்களிடம் கேட்டார்கள் அவர் “தமிழ் அழகு” என்று பதில் கூறினார். அந்த வினாவை எதிர்க்கட்சித்தலைவர் ஜெயலலிதா அவர்களிடம் கேட்டார்கள். “நாட்டியம் அழகு” என்று பதில் கூறினார். அன்றைய புகழ்பெற்ற கவிஞர் வாலியிடம் கேட்டார்கள். அவர் “கவிதை அழகு” என்று பதில் கூறினார். புகழ்பெற்ற நடிகை சுகாசினிடம் கேட்டார்கள். “இயல்பாக நடிப்பது” என்று பதில் கூறினார். வளர்ந்து வரக்கூடிய அன்றைய கவிஞர் வைரமுத்து அவர்களிடம் கேட்டார்கள் “வரிகள் அழகு” என்று கூறினார். அன்று புதிதாகப் பணியில் சேர்ந்த இறையன்பு ஐ.ஏ.எஸ் அவர்களிடம் அந்த வினாவைக் கேட்டார்கள். 20 இல் 20 ஆகவும், 60 இல் 60 ஆகவும் இருப்பது அழகு என்று சொன்னார்கள்.

இந்த அழகைதான் நம்முடைய குடியரசு தினம் நமக்கு நினைவுபடுத்துகிறது. நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களாக இருப்பது அழகு. தேசிய மாணவர் படை மாணவர்கள் தேசிய மாணவர் படை மாணவர்களாக இருப்பது அழகு. தேர்வு நெறியாளர் தேர்வு நெறியாளராக இருப்பது அழகு. அவரவருக்குரிய பணியை செய்து அழகாய் வாழ்வோம் என தம் கருத்துக்களைப் பதிவு செய்தனர்.
இறுதியில் கப்பற்படையின் தேசிய மாணவர் படை அதிகாரி முனைவர் அன்பரசு நன்றியுரையாற்றினார். கல்லூரிப் பண்ணிசைக்குழுவின் தேசிய கீதத்துடன் விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வை தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் ஆர்ம்ஸ்ட்ராங் அரசு தொகுத்து வழங்கினார். இவ்விழாவில் கல்லூரியின் பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை தேசிய மாணவர் படை அதிகாரி கேப்டன் வில்சன் மற்றும் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.








Comments are closed, but trackbacks and pingbacks are open.