அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை !
அநியாய உயிரிழப்புகளை தடுக்க திருச்சியில் கீழ்மட்ட பாலம் கட்ட ஆட்சியரிடம் கோரிக்கை ! – திருச்சி புதுக்கோட்டை நெடுஞ்சாலையில் எம்.ஐ.இ.டி. கல்லூரி பேருந்து நிறுத்தம் அருகில், கீழ்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு ஒன்றை திருச்சி மாவட்ட ஆட்சியரிடத்தில் வழங்கியிருக்கின்றனர்.
ஜூலை-18 அன்று திருச்சி மாவட்டம் குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட அயன்புத்தூரில், தமிழ்நாடு முதல் அமைச்சரின் “உங்களைத் தேடி உங்கள் ஊரில் – திட்ட”த்தின் கீழ் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது.
முன்னதாக, குண்டூர் ஊராட்சிக்குட்பட்ட திருவளர்ச்சிப்பட்டி, குண்டூர், அய்யம்பட்டி, குண்டூர் பர்மாகாலனி, அயன்புத்தூர் ஆகிய இடங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் சுகாதார நிலையம், கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், திருவெறும்பூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் நிறைவேற்றப்பட்ட மக்கள் நலத்திட்டங்களையும், செய்யவேண்டிய நலத்திட்டங்கள் குறித்தும் அதிகாரிகளுடன் இணைந்து ஆய்வுப் பணியில் ஈடுபட்டார். இதனைத் தொடர்ந்து, பிற்பகல் 3.00 மணியளவில் அப்பகுதி மக்களின் தீர்க்கவேண்டிய குறைகளுக்கான கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டார்.
அப்போது, குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் MIET பேருந்து நிலையத்தில் மக்கள் நெடுஞ்சாலையைக் கடந்து செல்ல கீழ்மட்ட பாலம் வேண்டி கோரிக்கை மனுவை தலைவர் இராமமூர்த்தி, செயலாளர் தி.நெடுஞ்செழியன், பொருளாளர் நடராசன் ஆகியோர் ஆட்சித் தலைவரிடம் கொடுத்தனர்.
ஆட்சியரிடம் வழங்கிய கோரிக்கை மனுவில், ” புதுக்கோட்டை நெடுஞ்சாலை 4 வழிச் சாலையாக மாற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வந்துவிட்டது. MIET பேருந்து நிலையத்தில் திருச்சி மத்தியப் பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம் செல்வோர், இந்தியன் வங்கி செல்வோர் எனப் பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், மூத்தக்குடிமக்கள் நெடுஞ்சாலையின் கிழக்குப் பகுதியிலிருந்து மேற்குப் பகுதிக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். காரணம் திருச்சி நோக்கி செல்லும் வாகனங்கள் மற்றும் புதுக்கோட்டை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும் அதிவேகத்தில் செல்கின்றன. பொதுமக்கள் கிழக்குப் பகுதியிலிருந்து நடுவில் உள்ள தடுப்பரணில் நின்று மேற்கு பகுதிக்குச் சென்று பேருந்தில் ஏறமுடியாத அளவுக்கு வாகனங்கள் அதிவேகத்தில் செல்கின்றன.
போக்குவரத்துக் காவல்துறையினர் சாலையில் தடுப்பரண்கள் அமைத்தும், கனரக வாகனங்கள் லாரி மற்றும் கார் போன்றவை வேகத்தைக் குறைக்காமல் செல்கின்றனர். இதனால் கடந்த ஆண்டுகளில் பலர் உயிரிழந்துள்ளனர். கல்லூரி மாணவர்களும் இறந்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நலன் கருதி, MIET பேருந்து நிலையம் அருகில் கீழ்மட்டப் பாலம் வடக்கிலும் தெற்கிலும் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைக்கின்றோம்.
எங்களின் வேண்டுகோளை பரிசீலனை செய்து, ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள், MIET பேருந்து நிலையம் கிழக்கிலிருந்து மேற்குப் பகுதிக்கும், மேற்கிலிருந்து கிழக்குப் பகுதிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அச்சமின்றி சென்று புதுக்கோட்டை நெடுஞ்சாலையின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் கீழ்மட்டப் பாலங்களை அமைத்துதரும்படி மாவட்ட ஆட்சித் தலைவர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.” என்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள்.
”எங்களது கோரிக்கையை கனிவுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், எங்களது கோரிக்கையின் மீது உடனடியாக உரிய முடிவை எடுக்குமாறு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்திருக்கிறார். எங்களது கோரிக்கையின் நியாயம் உணர்ந்து, விலைமதிப்பற்ற உயிரிழப்புகளை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு.” என்கிறார், குண்டூர் வடக்கு கிழக்கு கிராம குடியிருப்போர் நலச் சங்கத்தின் செயலரும், ஓய்வு பெற்ற பேராசிரியரும் அங்குசம் இதழின் பொறுப்பாசிரியருமான தி.நெடுஞ்செழியன்.
– அங்குசம் செய்திப்பிரிவு.