கலைஞர் தந்த இட ஒதுக்கீடு – காவு கொடுக்கும் திராவிடமாடல் உயர்கல்வித்துறை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

2018-ஆம் ஆண்டுக்கு பிறகு ஐந்து ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உதவி பேராசிரியர் பணிக்கான மாநிலத் தகுதி தேர்வு ( SET-State Eligibility Test ) தமிழ்நாடு அரசின் உயர்கல்வித்துறையால் நடத்தப்படவில்லை. ஒரு வழியாக பிப்ரவரி 2024- ல் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தால் ‘செட்’தேர்வு  அறிவிக்கப்பட்டு, ஜூன் 2024-ல் தேர்வுக்கு ஒரு நாள் முன்பாக தொழில்நுட்ப காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டு, 2025 மார்ச் 6, 7, 8, 9, ஆகிய தேதிகளில் தேர்வுகள் நடத்தப்பட்டது. பின்னர், தற்காலிக விடைக்குறிப்பு &  Response Sheet வெளியீடு நடைமுறையில் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு எழுதியவர்கள் அலைக்கழிக்கப்பட்டு அவஸ்தைக்குள்ளாக்கப்பட்டார்கள். இதுவே “செட்” தேர்வு ஓராண்டு காலம் கடந்து வந்த பாதை.

பல்கலைக்கழக மானியக் குழு வகுத்துள்ள SET தேர்வுக்கான வழிகாட்டுதல் – 2023 ன் படி ( UGC Updated Regulations 2023 for SET Exams) “ ‘அந்தந்த மாநில அரசுகள் பின்பற்றும் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றிக் கொள்ளலாம் ‘ எனும் விதிமுறையைப் பின்பற்றி தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகளில் வழங்கும் “தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீட்டை இத்தேர்வில் வழங்க வேண்டும்” என தொடரப்பட்ட வழக்கானது, அரசின் கொள்கை முடிவுக்காக கால அவகாசம் வழங்கப்பட்டு, ஜூன் 4 – 2025 அன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்பது இன்றைய நிலவரம்.

Sri Kumaran Mini HAll Trichy

கலைஞர் மு. கருணாநிதி
கலைஞர் மு. கருணாநிதி

மேற்கண்ட வழக்கில் ஏப்ரல் 29 ,2025 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர் சி.வி.கார்த்திகேயன் அவர்கள் அமர்வு விசாரணையின் போது “ பள்ளி ஆசிரியர்களுக்கான ‘ TET’ ( டெட்) தகுதித் தேர்வில் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு வழங்கப்படுவதில்லை; ஆகவே, SET – தகுதித் தேர்வுக்கு இந்த  இட ஒதுக்கீடு பொருந்தாது.மேலும் PSTM எனும் இந்த இட ஒதுக்கீடு என்பது Horizontal Reservation ( கிடைமட்ட இட ஒதுக்கீடு); எனவே, ‘ செட்’ தேர்வுக்கு பொருந்தாது”  என்றும் தமிழ் வழி இட ஒதுக்கீடை தரத் தயங்கும் தொனியில் அமைந்த தமிழக அரசுத்  தரப்பு வாதமானது, “கலைஞர் கருணாநிதி கடந்த 2010 ஆம் ஆண்டு வழங்கிய தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டையும்  சமூகநீதிக் கொள்கையையும் படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வதற்கான நெடும் பயணத்தின் சிறு தொடக்கம் என்ற சந்தேகம் எழுகிறது.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

இவ்விரு வாதங்களும் தி. மு. க. வின் இட ஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக அமைவதுடன், “செட்” தேர்வில் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டுக்கு எதிராக  தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவு அமையும்பட்சத்தில் அது திராவிட  அரசியலின்  இட ஒதுக்கீடு கொள்கையில் பெரும் பின்னடைவாக அமையக்கூடும்.

நீதியரசர் சி.வி.கார்த்திகேயன்
நீதியரசர் சி.வி.கார்த்திகேயன்

“டெட்”( TET) தேர்வு – “செட்” ( SET) தேர்வு ஒப்பீடு சரியா?

“பள்ளி ஆசிரியர்களுக்கான ‘TET’ தகுதித் தேர்வில் தமிழ் வழி பயின்றோருக்கான இட ஒதுக்கீடு ( PSTM) வழங்கப்படுவதில்லை. ஆகவே கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான ‘SET’ தகுதித் தேர்வில்  PSTM இட ஒதுக்கீடு பொருந்தாது” என்ற தமிழக அரசின் வாதம் பொருந்தாத முரணான நடைமுறை உதாரணம். இவ்விரண்டு தேர்வுகளுமே தகுதித் தேர்வுகள்தான் என்ற போதும் “ தேர்ச்சி முறை கணக்கீடு “ என்பது முற்றிலும் மாறானதும் தன்னளவில் தனித்தன்மை கொண்டவை.

அதாவது, தமிழ்நாடு அரசின் 69% இட ஒதுக்கீடு கொள்கையே‘டெட்’ தகுதித் தேர்வு தேர்ச்சி முறையில்  பின்பற்ற முடியாத தன்மை கொண்டது. ஏனெனில் “டெட்” தகுதித் தேர்வில் மொத்த மதிப்பெண்களான  150 -க்கு, பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண் 90; BC, MBC- DNC, SC, ST ஆகிய பிரிவினர் தேர்ச்சி மதிப்பெண் 82. அதாவது இத்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் என்பது தேர்வுக்கு முன்பாகவே நிர்ணயிக்கப்பட்ட ஒன்று.

ஆனால், “SET” தேர்வு தேர்ச்சி விதிமுறை என்பது தேர்வு எழுதியவர்கள் மொத்த எண்ணிக்கையில் 6 % சதவீதம் மட்டுமே   (இன வாரியாக பாட வாரியாக – Subject wise & Category wise) .  ஆகவே இங்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கையினை பின்பற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

எனில், “TET” தேர்வோடு   “ SET” தேர்வை ஒப்பிட்டு தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீட்டை மறுப்பதென்பது தேர்வு அடிப்படைகளின்படியே நியாயமாக அமையாது.

தமிழ்வழி ஒதுக்கீடு & Horizontal Reservation – என்பது அரசியல் பிச்சையல்ல !

தமிழ் வழி பயின்றோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீடு ( PSTM) என்பது  Horizontal Reservation ( கிடைமட்ட ஒதுக்கீடு) ; ஆகவே தகுதித் தேர்வில் வழங்க வேண்டியதில்லை எனும் அணுகுமுறை தி.மு.க.வின் “சமூகநீதி “ கொள்கைக்கு எதிரானது. மேலும்  PSTM இட ஒதுக்கீடு வேலைவாய்ப்புகளுக்கான நேரடி நியமனப் போட்டித் தேர்வுகளில் ( Direct Recruitment) மட்டுமே பொருந்தும் என்று சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அதில் தகுதித் தேர்வுகளுக்கும்  பொருந்தும் என எதுவும் குறிப்பிடப்படவில்லை “  என சட்ட நுணுக்கம் மக்கள் மத்தியில்  பரவலாகப் பரப்பப்படுகிறது.

Flats in Trichy for Sale

( TET) தேர்வு
( TET) தேர்வு

தமிழ்நாடு அரசின் கொள்கைப்படி பின்பற்றும்  69 % இட ஒதுக்கீடு என்பதும் மாநிலத் தகுதித் தேர்வுக்கான பிரத்யேக சட்டமல்ல. அதாவது   தமிழ்நாடு அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் பின்பற்றும் 69 % இட ஒதுக்கீடு என்பது வேலைவாய்ப்புக்கான தேர்வு அல்லாத நிலையிலும் இயல்பாகவே  தகுதித் தேர்வான “SET” – தேர்வுக்கும் பொருந்துகிறது.

UGC வழிகாட்டுதல்  (Updated  Guidelines -2023 State Eligibility Test) தேர்வு நடத்தும் அந்தந்த மாநில அரசுகளின் இட ஒதுக்கீடு கொள்கைகளைப் பின்பற்ற இடமளிக்கிறது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. வேலைவாய்ப்புகளில் 69% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 20%, தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கான 20% இட ஒதுக்கீடு மற்றும் உயர்கல்வி பெறும் வகையில்  69% இட ஒதுக்கீடு, பெண்களுக்கு 30%, மருத்துவம் மற்றும் தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 % போன்ற மேற்கண்ட இட ஒதுக்கீடுகள் யாவும் இந்திய ஒன்றியத்தின் பிற மாநிலங்களில் இல்லை. இவை யாவும் தமிழ்நாடு அரசு சமூக நீதியின் அடிப்படையில்  முன்னோடியாக சாத்தியமாக்கிய கொள்கை முடிவுகள்.

பெண்களுக்கான 30 % இட ஒதுக்கீடு (1989), தமிழ் வழியில் பயின்றோருக்கான 20% இட ஒதுக்கீடு (2010) ஆகிய இவ்விரண்டும் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் அமல்படுத்தப்பட்டன.  தகுதித் தேர்வில் Horizontal Reservation வழங்கப்பட்டால் கல்வித் தரம் பாதிக்கப்படும் எனும் கூப்பாடுகள், பல்லாண்டு கால பழமைவாதக் குரல்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கலைஞர் கருணாநிதி தலைமையிலான அரசின்  இட ஒதுக்கீட்டுப்  பார்வை என்பது வடிகட்டும் அணுகுமுறை ( Filtering Approach Policy ) அடிப்படையில் அமைந்ததல்ல . மாறாக உள்ளடக்கிய அணுகுமுறை கொண்டது ( Inclusiveness). ஆனால், இன்று  சமூக நீதி முழக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசோடு சண்டை செய்யும் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தலைமையிலான “ திராவிட மாடல்” அரசின் உயர்கல்வித் துறையானது, கலைஞர் கருணாநிதி வழங்கிய இட ஒதுக்கீட்டை தகுதித் தேர்வுகளிலும் பின்பற்றத் தயங்குவதும், அரசின் கொள்கை முடிவு என்று காரணம் காட்டி காலம் கடத்துவதும் சமூக நீதிக்கு வந்த சோதனை என்று கொள்க. “

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஹிந்தி திணிப்பு” கூர்மைப்பட்டு வரும் நெருக்கடியான இந்த வேளையில், இந்திய ஒன்றியத்தின் வேறெந்த மாநிலத்திலும் மாநில அரசுகளால் வேறெந்த மொழிவழிக் கல்வி பயின்றோருக்கும் வழங்கப்படாத, அதே சமயம் கலைஞர் கருணாநிதியால் 2010- ஆம் ஆண்டிலேயே தமிழ்வழிக் கல்வி  பயின்றோருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது போன்றதொரு முன்னோடித் திட்டத்தை  “  Horizontal Reservation, கல்வித்தரம், தராதரம்” என திரிபுவாதக் காரணங்களால் “ தகுதித் தேர்வில் தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான இட ஒதுக்கீடு பொருந்தாது” என திமுக அரசின் கொள்கை முடிவு அமையுமானால், நாளடைவில் இந்த இட ஒதுக்கீட்டை நீர்த்துப் போகச்செய்து சமாதி கட்டும் நிகழ்வுக்கு கரசேவை புரிந்து முதல் கல் எடுத்துத் தந்த  பெருமை அமைச்சர் கோவி.செழியனுக்கும் முதல்வர் மு. க. ஸ்டாலினுக்கும் சேரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில், எதிர்காலத்தில் தி.மு.க.வின் சமூகநீதிக் கொள்கைக்கு நேர் எதிரான சித்தாந்தம் கொண்ட கட்சி ஆட்சியில் அமரும் போது, இந்தத் தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு என்பது  நிர்வாகக் காரணங்களால் படிப்படியாக இல்லாமல் ஆக்கப்பட்டாலும் அதிசயிக்க ஏதுமில்லை.

“ ஒரே நாளில் EWS இட ஒதுக்கீட்டை  சட்டமாக்கிய  பாஜக அரசின் வேகம் ஒருபுறம் எனில் , 2010- ல் கலைஞர் கருணாநிதி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தமிழ்வழிக் கல்வி இட ஒதுக்கீடு சட்டம் இன்னும் தமிழ்நாடு அரசுக்கு உட்பட்ட துறைகளிலேயே பின்பற்றத் தயக்கம் காட்டும் நிர்வாகமும் கண்டுகொள்ளாத உயர்கல்வித் துறை அமைச்சரின் மெத்தனமும் மறுபுறம் என  இட ஒதுக்கீடு அமலாக்கத்தின் சமகால சாட்சியங்கள் நம் கண் முன்னே இருக்கின்றன.

கோவி செழியன்
கோவி செழியன்

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான 20% Horizontal Reservation என்பது  தமிழ் வழியில் பயின்ற மாணவர்களுக்கு  வழங்கப்பட்ட “அரசியல் பிச்சை” அல்ல; மாறாக,“ மானமிகு  சுயமரியாதைக்காரர்” ஒருவரால் தமிழ்வழிக் கல்விக்கு வழங்கப்பட்ட “அதிகாரப் பிரதிநிதித்துவம்”.

இந்த இட ஒதுக்கீடு வரவிடாமல் ஆயிரம் காரணம் அதிகாரிகள் சொல்வார்கள். அதிகாரிகளை இதை செய்ய வழிவகை பாருங்கள் என்று யார் வேலை வாங்குவது? அதிகாரிகளை மீற அமைச்சரால் முடியாமல் போகலாம். முதல்வர் கவனத்துக்கு இது எப்படி செல்லும்? துறை அமைச்சர் தானே அதிகாரிகளை கடந்து கொண்டு செல்ல வேண்டும்.

கலைஞர் கொடுத்த இட ஒதுக்கீடு  தன் துறையிலேயே பறிபோவது தெரியாமல் அதிமுக அமைச்சர் இருக்கலாம், முனைவர் கோவி செழியன் இருக்கலாமா? அதிகாரிகளிடம் ஐடியா கேட்கக் கூடாது. இதைச் செய்ய வழியைப் பாருங்கள் என்று வேலை வாங்க வேண்டும். அதிகாரிகளை வேலை வாங்குவாரா, அமைச்சர் கோவி செழியன். அப்படியே, முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று இவ்விவகாரத்தில் உரிய நீதியை நிலைநாட்டுவாரா, உயர்கல்வித்துறை அமைச்சர்?

 

—          சாக்ரடீஸ்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.