தட்டுமுட்டுச் சாமான்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!
தட்டுமுட்டுச் சாமான்களுடன்
காத்திருப்பு போராட்டத்தில்
ஈடுபட்ட குடியிருப்புவாசிகள்!
குடிமனைப் பட்டா வழங்க வேண்டும் என்பதுள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ஒன்றியம் மணக்கரம்பை ஊராட்சி எம்ஜிஆர் நகர் குடியிருப்புவாசிகள் தஞ்சை ஆதி திராவிடர் நல வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அடுப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட தட்டுமுட்டுச் சாமான்களுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இக் குடியிருப்புவாசிகள் குடிமனைப் பட்டா கேட்டு பலமுறை மனு அளித்தும் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், உரிய தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் இக் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.
சிபிஎம் மாநகரக் குழு உறுப்பினர் சி.ராஜன் தலைமையில் நடைபெற்ற இக் காத்திருப்பு போராட்டத்தில், மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பி.செந்தில்குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் ந.குருசாமி, என்.சரவணன், மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர்.
காலை 10 மணி முதல் நடைபெற்ற இக் காத்திருப்பு போராட்டத்தில் எம்ஜிஆர் நகர் குடியிருப்புவாசிகள் அடுப்பு, சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட தட்டுமுட்டுச் சாமான்களுடன் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
இதைத் தொடர்ந்து, ஆதி திராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் ரகுநாதன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள், தஞ்சை நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சந்திரா ஆகியோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்ட தனி வட்டாட்சியர், ‘குடிமனைப் பட்டா தொடர்பாக ஆவணங்களைப் பரிசீலனை செய்து வகை மாற்றம் செய்யவும், மனைப்பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அரசு விதிகளின்படி மனைப்பட்டா வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என உறுதி அளித்தார். இதையேற்று மதியம் 1 மணிக்கு காத்திருப்பு போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.