துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் !
துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரியில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
துறையூர் அம்மா உணவகத்திற்கு குப்பை அள்ளும் வண்டியில் வந்திறங்கிய அரிசி மூட்டைகள் !
திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை , மாலை என இரு வேளைகளில் சுமார் 12 பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படும் நிலையில் , நேற்று மதியம் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினி லாரியில் அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் வந்திறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாமர மக்கள் அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை ,எளிய மக்கள் பசியாறும் உணவுக்குண்டான அரிசியை குப்பை லாரியில், சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் பேருந்து நிலையத்தில் பலர் பார்க்க நடைபெற்ற இந்த நிகழ்வு இழிவான ஒன்று. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இச்சம்பவம் தொடர்பாக, துறையூர் நகர்மன்றத் தலைவரான செல்வராணியிடம் கேட்டபோது, “அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு கடந்த ஒரு வார காலமாக இருந்து வந்துள்ளது பற்றி , எனது கவனத்திற்கு பணியாளர்கள் நேற்று முன்தினம் தான் எனக்கு தெரியப்படுத்தினர். உடனடியாக தேவைப்படும் அரிசி மூட்டைகளை ஏற்பாடு செய்து அதனை தனியாக வாடகை வண்டி மூலம் கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தினேன். ஆனால், இடையில் ஏதோ தவறு நடந்துள்ளது. எனது கவனத்திற்கு கொண்டு வந்ததற்கு நன்றி. உரிய நடவடிக்கை எடுக்கிறேன். ” என்றார்.
துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் செயல்படும் அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
-ஜோஸ்