ஆற்றுமணல் குவாரிகள் – தீர்க்கமான முடிவை எடுக்குமா அரசு ?
தமிழகத்தில் கடந்த 16 மாதங்களுக்கு முன்பு, மணல் காண்டிராக்டர் எஸ்.ஆர். குரூப் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு நடத்திய நாளில் மூடப்பட்ட மணல் குவாரிகள் இன்று வரையில் மீண்டும் திறக்கப்படாமல் இருக்கிறது.
மணல் குவாரிகளை மட்டுமே நம்பி தமிழகத்தில் எப்படியும் ஒரு இலட்சத்திற்கும் குறைவில்லாத டிப்பர் லாரிகள் இருப்பதாகவும்; இவையனைத்தும், மணல் மற்றும் ஜல்லிகளை ஏற்றி இறக்குவதற்கு மட்டுமே பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்றும்; மற்ற லாரிகளை போல, சாக்கு மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சவாரி பார்க்க முடியாது என்றும்; தற்போது தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், ஒரு தனி அதிகாரியை போட்டு அரசே மணல் குவாரிகளை உடனடியாக திறக்க வேண்டும் என்ற கோரிக்கையுடனும் டிப்பர் லாரி உரிமையாளர்கள் தரப்பிலிருந்து ஒருவர் விரக்தியுடனும் ஆதங்கத்துடனும் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகியிருக்கிறது.
இது தவிர, தமிழகம் முழுவதும் மாட்டு வண்டியில் மணல் அள்ளுபவர்கள் எப்படியும் 50,000-க்கும் குறைவில்லாதவர்கள் இருக்கிறார்கள். சொந்தமாக மாட்டையும் வண்டியையும் சேர்த்து வைத்திருப்பவர்கள், நாளொன்றுக்கு இரு நூறு ரூபாயாவது அந்த மாடுகளின் தீவனத்திற்காக செலவு செய்தே ஆக வேண்டுமென்ற நெருக்கடியையும் சேர்த்தே சந்திக்கிறார்கள். இந்த வண்டிகளுக்கு லோடு அடிக்கும் தினக்கூலிகளை கணக்கிட்டால், அவர்கள் ஒரு இலட்சத்திற்கும் மேல் இருக்கிறார்கள் என்கிறார்கள்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இன்னொருபுறம், ஆற்றுமணல் தட்டுப்பாட்டால் கட்டுமானத் தொழில் பெருமளவு பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்கிறார்கள். மத்திய மற்றும் மாநில அரசுகளின் குடியிருப்பு திட்டங்கள் முழுவீச்சுடன் செயல்படுத்தப்பட்டு வரும் இந்த கால கட்டத்தில், குவாரிகள் திறப்பது தொடர்ந்து தள்ளிப்போடுவது எம்.சாண்ட் உற்பத்தியாளர்களின் ஆதிக்கத்துக்கு வழிவகுத்துவிட்டது என்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த 5 யூனிட் எம்.சாண்டின் விலை ரூ15,000-லிருந்து இப்போது அப்படியே இருமடங்காக உயர்ந்து ரூ.30,000-ஐ தொட்டுவிட்டது என்கிறார்கள்.
அப்படி இருமடங்கு தொகை கொடுத்தாலும் உருப்படியான எம்.சாண்ட் கிடைப்பதில்லை. மூன்று முறை தண்ணீரில் கரைத்து, சலித்து எடுக்கப்படும் மணல்தான் அரசு நியதிகளின்படி தரமான எம்.சாண்ட். ஆனால், பெரும்பாலான குவாரிகளில், இவ்வாறு செய்யப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டையும் சொல்கிறார்கள்.
ஆற்றுமணலை நம்பியிருக்கும் குடும்பங்களின் நலனில் இருந்தும்; கட்டுமானத் தொழிலின் தேவை உணர்ந்தும் உடனடியாக ஆற்றுமணல் குவாரிகள் திறப்பது குறித்து அரசு தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக இருக்கிறது.