விருதுநகர் அருகே பொங்கல் விழாவில் இரு சமுதாயத்தினர் இடையே மோதல் 12 பேர் மீது வழக்கு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே கே.சொக்கலிங்கபுரம் கிராமத்தில் உள்ள கோவில் மற்றும் ஊர் பொது மடத்தில், 100 ஆண்டுகளுக்கு மேலாக குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து பொங்கல் விழா நடத்தி வந்துள்ளனர்.
இதற்கிடையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஊர் பொதுமடத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞர்கள் ஜாதி அடையாளம் கொண்ட வண்ணத்தை பூசி புகைப்படம் எடுத்து இணையதளம் மூலம் மடம் எங்கள் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்டது என வெளியிட்டுள்ளதாகவும். இதைப் பார்த்த மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பின்னர் இந்த பிரச்சனை சாத்தூர் வட்டாட்சியர் முன்னிலையில் இரு சமுதாயத்தை சேர்ந்தவர்களை வைத்து பேச்சுவார்த்தை நடைபெற்று குறிப்பிட்ட வண்ணம் அளிக்கப்பட்டு ஒரே வண்ணமாக மாற்றம் செய்யப்பட்டது.
இதோடு இந்த விவகாரம் முடியவில்லை மேலும் இரு தரப்பினரிடையே பிரச்சனை தொடர்ந்து வந்ததால். மீண்டும் வட்டாட்சியர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் இரண்டு சமுதாயத்தினரும் வெவ்வேறு நாட்களில் தனித்தனியாக பொங்கல் கொண்டாடலாம் என முடிவு எடுக்கப்பட்டது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஆனால் இரு தரப்பினரிடையே பிரச்சனை தொடர்ந்து வந்ததால், இந்த விவகாரம் தொடர்பாக இரு சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் ஊர் பொதுமடம், பொங்கல் விழா கொண்டாடுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து வழக்கு நடைபெற்று வரும் சூழ்நிலையில்.
ஜன- 15, நேற்று தைப்பொங்கலை முன்னிட்டு குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்தினரும் பொங்கல் மற்றும் விளையாட்டு போட்டி நடத்துவது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பாகவே அனுமதி வேண்டி அப்பையநாயக்கன்பட்டி காவல் நிலையத்தில் மனு கொடுத்துள்ளனர். இதற்கிடையில் இருதரப்பினரும் விளையாட்டுப் போட்டிகள் நடத்திக் கொண்டிருந்தபோது,
குறிப்பிட்ட சமுதாயத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள பொது மடத்தில் எவ்வாறு விளையாட்டு போட்டி நடத்தலாம் என எதிர்ப்பு தெரிவிக்கவே இதை அறிந்த மற்றொரு தரப்பினரும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், பெரும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் நாகராஜன், இருக்கன்குடி காவல் ஆய்வாளர் செல்வம், ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு சட்ட ஒழுங்கு பிரச்சனை காரணமாக இருதரப்புக்கும் பொங்கல் மற்றும் விளையாட்டுப் போட்டிகளுக்கு தடை விதிப்பதாக தெரிவித்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டு ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பு சமுதாயத்தைச் சேர்ந்த 12 நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
— மாரீஸ்வரன்.