டெல்லி : முதல்வர் கடும் போட்டியில் ரேகா குப்தா தேர்வு !
கடந்த பிப்.5ஆம் நாள் டெல்லி சட்டமன்றத்திற்குத் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை பிப்.8ஆம் நாள் நடைபெற்றது. டெல்லி சட்டமன்றத்தில் உள்ள மொத்த இடங்களில் 70இல் பாஜக 48 இடங்களில் வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
இந்நிலையில் பாஜக சார்பில் முதல்வர் யார் என்று கடந்த 10 நாள்களாக அறிவிக்கப்படவில்லை. முதல்வர் வேட்பாளர் தேர்வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பன்சூரி சுவராஜ், மனோஜ் திவாரி, பர்வேஷ் வர்மா, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா, சதீஷ் உபாத்யாய், மஞ்சிந்சிந்தர் சிங் சிர்சா மற்றும் ரேகா குப்தா உட்பட 14 பேர் போட்டியில் இருந்ததால் புதிய முதல்வரைத் தேர்வு செய்வதில் பாஜக தலைமைக்குத் தொடர்ந்து சிக்கல் நீடித்து வந்தது.
இந்நிலையில் 19.02.2025ஆம் நாள் மாலை கூடிய டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் டெல்லியைச் சார்ந்த 7 மக்களவை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். முதல்வரைத் தேர்வு செய்வதில் டெல்லி மக்களவை உறுப்பினர்களுக்கும் கலந்து கொள்ள அம்மாநில சட்டம் வகை செய்கிறது. டெல்லி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், டெல்லி பாஜக சட்டமன்ற கட்சித் தலைவராக ரேகா குப்தா (50) தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு ரேகா குப்தா டெல்லி துணைநிலை ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமைக் கோரும் கடிதத்தை வழங்கினார். அதன் அடிப்படையில் இன்று (20.02.2025) பகல் 12.00 மணிக்கு டெல்லி இராம்லீலா மைதானத்தில் ரோக குப்தா டெல்லி மாநில முதல்வராகப் பொறுப்பேற்கிறார்.
ரேகா குப்தா
டெல்லி மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரேகா குப்தா அரியானா மாநிலம் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள நந்த்கர் கிராமத்த்தில் 1974ஆம் ஆண்டு பிறந்தவர். தந்தையின் அலுவல் பணி காரணமாக டெல்லிக்குக் குடிபெயர்ந்தார். டெல்லியில் தன் பள்ளிக் கல்வி, கல்லூரிக் கல்வியை முடித்தவர். 1992ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் தவுலத் ராம் கல்லூரியில் படிக்கும்போது ABVP இணைந்து அரசியல் வாழ்வைத் தொடங்கினார். தொடர்ந்து RSS அமைப்பிலும் சேர்ந்து பணியாற்றினார்.
1996-97ஆம் ஆண்டுகளில் டெல்லி பல்கலைக்கழக மாணவர் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். 2007ஆம் ஆண்டில் டெல்லி மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து 3 முறை மாநகராட்சி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாஜக மகளிர் அணியின் பொதுச்செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
தற்போது நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில் முதல்முறையாக ஷாலிமார் தொகுதியில் போட்டியிட்டு, ஆம் ஆத்மி வேட்பாளரை சுமார் 30ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார். சட்டமன்றத்திற்கு முதல்முறையாக ரேகா குப்தா வெற்றிப் பெற்றிருந்தாலும் அரசியல் அனுபவமும், நிர்வாகத் திறமையும் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி மாநிலத்திற்குச் சட்டசபை அமைக்கப்பட்டு 4ஆவது பெண் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறார். இதற்கு முன் பாஜகவைச் சார்ந்த சுஸ்மா சுவராஜ், காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த ஷீலா தீட்சித், ஆம் ஆத்மியின் அதிசிக்குப் பின் ரேகா குப்தா முதல்வர் பொறுப்பேற்கிறார்.
— ஆதவன்.