அங்குசம் பார்வையில் ‘சாமானியன்’

0

அங்குசம் பார்வையில் ‘சாமானியன்’. தயாரிப்பு: ‘எட்செட்ரா எண்டெர்டெய்ன்மெண்ட்’ வி.மதியழகன். இணைத் தயாரிப்பாளர்கள்: டி.பாலசுப்பிரமணியன், சதீஷ் குமார். டைரக்டர்: ஆர்.ராகேஷ். பாடல்கள் & இசை: ‘மேஸ்ட்ரோ’ இளையராஜா. கதை: கார்த்திக் குமார். நடிகர் – நடிகைகள்: ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர், நக்ஷத்ரா சரண், லியோ சிவக்குமார், கே.எஸ்.ரவிக்குமார், கஜராஜ், அபர்ணதி, தீபா சங்கர், மைம் கோபி, போஸ் வெங்கட், வினோதினி, ஷரவணசக்தி, சரவண சுப்பையா முல்லை கோதண்டம். ஒளிப்பதிவு: அருள் செல்வன், எடிட்டிங்: ராம் கோபி, காஸ்ட்யூம்: எஸ்.பி.சுகுமார். பிஆர்ஓ: ஏ.ஜான்.

மதுரை அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சென்னை வருகிறார்கள் ராமராஜனும் எம்.எஸ்.பாஸ்கரும். சென்னையில் அவர்களை வரவேற்று தனது வீட்டில் தங்க வைக்கிறார் அவர்களின் கிராமத்து நண்பரான காதர்பாய் [ ராதாரவி ]. ஒரே ஒரு நாள் தங்கிவிட்டு, மறுநாள் காலையில் சென்னை தியாகராய நகரில் உள்ள ஐபிபிசி என்ற தனியார் வங்கிக்குச் செல்கிறார் ராமராஜன். வேறொரு வீட்டிற்குச் செல்கிறார் எம்.எஸ்.பாஸ்கர்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

35 லட்ச ரூபாய் டெபாசிட் செய்ய வந்திருப்பதாக ராமராஜன் சொன்னதும் அவருக்கு ராஜ உபச்சாரமளிக்கிறது வங்கி. சூட்கேஸை ராமராஜன் திறந்துகாட்டுகிறார். உள்ளே ஆர்டிஎக்ஸ் பாம், இடுப்பு வேட்டிக்குள் ரிமோட் கண்ட்ரோலைக் காட்டி அனைவரையும் சிறை வைக்கிறார் ராமராஜன். கமிஷனர் கே.எஸ்.ரவிக்குமார் தலைமையிலான போலீஸ் படை ஸ்பாட்டுக்கு வருகிறது. கீழே இருந்தபடியே வங்கிக்குள் இருக்கும் ராமராஜனிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் கமிஷனர்.

சாமானியன்
சாமானியன்

- Advertisement -

ராமராஜன் ஏன் இந்த வங்கிக்குள் புகுந்தார்? அவரது நோக்கம் என்ன? என்பதை மிகவும் சாதாரண மனிதனின் பார்வையிலிருந்து சொல்வது தான் இந்த சுவாரஸ்யமான,  ‘சாமானியன்’.

நடுத்தர வர்க்கத்திடம் கிரெடிட் கார்ட் ஆசையைத் தூண்டி அவர்களின் நிம்மதியைக் குலைக்கும் வங்கிகள் [ தனியார் வங்கிகள் மட்டுமல்ல, அரசு வங்கிகளும் தான் ] எஸ்.எம்.எஸ். சார்ஜ், சர்வீஸ் சார்ஜ் என்ற பெயரில் நம்மைப் போன்ற நடுத்தர மற்றும் ஏழைகளின் பணத்தைக் கொள்ளையடிக்கும் வங்கிகள், ஹவுஸிங்லோன் என்ற பெயரில் நமது ஆயுசு முழுக்க அடிமையாகவே அல்லாட வைக்கும் வங்கிகள், நம்மிடம் சுரண்டிய பணத்தைக் கொள்ளையடித்துவிட்டு வெளிநாடுகளில் உல்லாசமாகத் திரியும் கார்ப்பரேட் களவாணிகள் இதையெல்லாம் பார்த்து நொந்து, வெந்து, கொந்தளித்துக் கிடக்கும் சாமானிய மக்களின் மனநிலையை அச்சு அசலாக பதிவு செய்துள்ளார்கள் கதாரிசிரியர் கார்த்திக் குமாரும் அதை திரைவடிமாக்கிய டைரக்டர் ராகேஷும். இதில் மேலும் ஒரு திடுக்கிட வைக்கும் உண்மை என்னன்னா ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கும் கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனிகளுக்கும் வங்கிகளுக்குமிடையே இருக்கும் கள்ள உறவையும் அம்பலத்திற்கு கொண்டு வந்துள்ளார் டைரக்டர்.

மதுரையிலிருந்து சென்னைக்கு பஸ்ஸில் ராமராஜன் வரும் போது, “மதுர மரிக்கொழுந்து வாசம், ராசாவே உன்னுடைய நேசம்” என்ற இசைஞானியின் இண்ட்ரோ சாங்குடன் தான் எண்ட்ரியாகிறார் ராமராஜன். பெரும் விபத்திலிருந்து தப்பி, 13 வருடங்களுக்குப் பிறகு 45-ஆவது படமான இந்த ‘சாமானியனில்’ அவரது உடல் சற்றே பெருத்து, உடலின் இடது பக்கம் கொஞ்சம் தாங்கி நடக்கும் அளவுக்கு இருந்தாலும் இந்த கேரக்டரை அசாத்தியமாக தாங்கி அசத்திவிட்டார் ராமராஜன்.

படத்தின் முதல் முக்கால் மணி நேரம், அதுவும் ராமராஜன் வங்கிக்குள் செல்லும் வரை மேடை நாடகம் போன்றும் டி.வி.சீரியல் போன்றும் காட்சிகள் ரொம்பவே மெதுவாக நகர்ந்து செல்கிறது. ஆனால் ராணுவத்தில் மேஜராக இருந்த சங்கர நாராயணன் தான் ராமராஜன் என்ற ஃப்ளாஷ்பேக்குடன் இடைவேளை விடும் போது, கதையின் மீது எக்கச்சக்க எதிர்பார்ப்பும் இடைவேளைக்குப் பின் சூடு பிடிக்கும் திரைக்கதையும் சாமானியனை ரொம்ப ரொம்ப ரசிக்க வைக்கிறது.

சாமானியன் திரைப்படம்
சாமானியன் திரைப்படம்
4 bismi svs

படத்தின் முக்கியமான மூன்று கேரக்டர்கள் என்றால் ராமராஜன், எம்.எஸ்.பாஸ்கர், ராதாரவி ஆகிய மூவர் தான். ராமராஜனின் மகள் நக்‌ஷா சரண், பாஸ்கரின் மகன் லியோ சிவக்குமார். இருவரும் திருமணமாகி, சென்னையில் சொந்த வீடு வாங்கும் ஆசையில் ஐபிபிசி வங்கியில் லோன் கேட்கிறார்கள். வங்கி மேனேஜர் போஸ் வெங்கட், கன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கம்பெனி ஓனர் மைம் கோபி ஆகியோரின் களவாணித்தனமான சூழ்ச்சி வலையில் சிக்கி, அவர் கட்டிய தரமற்ற வீட்டை வாங்குகிறார்கள்,

சிமெண்ட் பூச்சு பெயர்ந்து விழுந்து நக்‌ஷா—லியோ சிவக்குமாரின் குழந்தை படுகாயமடைந்து உயிருக்குப் போராடுகிறது. இ.எம்.ஐ. கட்டிக்கட்டியே நொந்து போன நக்‌ஷாவும் சிவக்குமாரும் குழந்தையும் விஷம் குடித்துவிட்டு, அந்த வங்கியிலேயே சாகிறார்கள். மனதை உலுக்கி எடுக்கும் இந்த ஃப்ளாஷ்பேக் தான் படத்தின் பெரும்பலம். இதற்கடுத்து படத்தின் தூணாக இருப்பது கமிஷனாராக வரும் கே.எஸ்.ரவிக்குமார் தான்.

தனது அப்பா ராமராஜனை ‘சங்கரா.. சங்கரா’..” என நக்‌ஷா சரண் கூப்பிடும் அழகே தனி அழகு. நக்‌ஷாவுக்கும் நச்சுன்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வைத்திருக்கிறார் டைரக்டர்.

பேங்க் மேனேஜர் போஸ் வெங்கட்டின் மனைவியாக வினோதினி, அசிஸ்டெண்ட் மேனேஜரின் மனைவியாக ஸ்மிருதி வெங்கட், நக்‌ஷா-சிவக்குமார் தம்பதிகளின் பக்கத்துவீட்டுப் பெண்ணாக வரும் தீபா சங்கர், கன்ஸ்ட்ரக்‌ஷன் வில்லனாக வரும் மைம் கோபி, வங்கியால் ஏலத்திற்கு வரும் வீட்டை அபகரிக்கும் முல்லை கோதண்டம் என எல்லா கேரக்டர்களுக்கும் சம வாய்ப்புக் கொடுத்திருக்கிறார் டைரக்டர் ராகேஷ்.

ராமராஜன் என்றாலே இசைஞானிக்கு தனி உற்சாகம் வந்துவிடும் போல. மகள் மீது ராமராஜன் வைத்துள்ள பாசத்தை வெளிப்படுத்தும் பாடலில் பாடகர் கார்த்திக்கின் குரல் தனி சுகம் என்றால், இசைஞானியின் குரலில் ஒரு பாடல் தனி ரகம். க்ளைமாக்சில் அதே ட்யூனில் சோகம் இழையோடும் ஒரு பாட்டையும் வைத்து நம்மை கலங்க வைக்கிறார் இசைஞானி. இடைவேளைக்குப் பின் தான் அவரது பின்னணி இசையின் கொடி பறக்கிறது.

டி.வி.நிருபரான அபர்ணதியிடம் தனது ஃப்ளாஷ்பேக்கை  சொல்லி முடித்ததும் திரையில் நடித்தவர்கள் மட்டுமல்ல, நம்மையும் கண் கலங்க வைத்துவிட்டார் ராமராஜன்.

“சாதாரண பெட்டிக் கடைலகூட கடன் அன்பை முறிக்கும்னு எழுதி வச்சிருக்கான். ஆனா எந்த பேங்க்லயாவது எழுதி வச்சிருக்கானா?. எங்களிடம் கடன் வாங்கினா உங்க ஆயுசைக் குறைக்கும்னு தான் எழுதி வைக்கணும். பேங்க்ல லோன் வாங்கி வாங்குறது வீடு இல்லம்மா, அது ஜெயில். ஆயுசு பூரா சிறை தான் சிலருக்கு தூக்கு தண்டனை கூட கிடைக்கும்” ராமராஜனின் இந்த மதுரை ஸ்லாங்  வசனம் சாமானியர்களின் சங்கநாதம் என்று கூட சொல்லலாம். பேங்கில் இந்தியில் பேசும் ஒருவனிடம் “தமிழ் தெரியலைன்னா மூடிட்டு உட்காரு” என ராமராஜன் ஆவேசப்படுவது கூட ராமராஜன் தன்னை அப்டேட்டாக வைத்திருப்பதற்கு சாட்சி.

க்ளைமாக்சில் சேகுவேரா, பிரபாகரன் புத்தகங்கள். ராமராஜன் அப்டேட்டாக இருந்து, தன்னை ‘அடாப்ட்’ பண்ணிவிட்டார். இந்த ‘சாமானியன்’ அனைத்து சாமானிய இந்தியர்களுக்கான சினிமா`.

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.