அங்குசம் பார்வையில் ‘சபரி
அங்குசம் பார்வையில் ‘சபரி’ தயாரிப்பு: ‘மகா மூவிஸ்’ மகேந்திரநாத் கொண்ட்லா. டைரக்ஷன்: அனில் கட்ஸ். ஆர்ட்டிஸ்ட்ஸ்: வரலட்சுமி சரத்குமார், மைம் கோபி, கணேஷ் வெங்கட்ராம், ஷசாங் மற்றும் தெலுங்கு நடிகர்-நடிகைகள். டெக்னீஷியன்கள்-ஒளிப்பதிவு: ராகுல் ஸ்ரீவத்சவ்& நானி சாமிடிசெட்டி, இசை: கோபி சுந்தர், எடிட்டிங்; தர்மேந்திர காக்கர்லா. பி.ஆர்.ஓ.சுரேஷ் சந்திரா.
பள்ளியில் படிக்கும் போது தனது தாயை இழந்துவிடுகிறார் சஞ்சனா[ வரலட்சுமி சரத்குமார்] தனது அப்பா இரண்டாம் கல்யாணம் செய்து கொள்ளும் சித்தி மீது சஞ்சனாவுக்கு எப்போதும் வெறுப்பு. தனது தாய் தன்னுடன் இருப்பதாகவே நம்புகிறார். வளர்ந்து பெரிய மனுசியானதும் கணேஷ் வெங்கட்ராமைக் காதலித்துக் கல்யாணம் செய்து கொண்டு வீட்டைவிட்டு வெளியேறுகிறார்.
இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. தான் வேலை பார்க்கும் கம்பெனியின் சேர்மன் மகளுடன் கள்ளக்காதலில் விழுகிறார் கணேஷ் வெங்கட்ராம். இதை நேரடியாகப் பார்த்து ஆவேசமாகும் வரலட்சுமி, தனது குழந்தையுடன் வெளியேறி தனது தோழியின் வீட்டுக்குப் போகிறார்.
வரலட்சுமியிடமிருந்து குழந்தையைக் கடத்திக் கொண்டு போக முயல்கிறார் மெண்டல் ஆஸ்பத்திரியிலிருந்து தப்பிக்கும் மைம் கோபி. குழந்தையைக் காப்பாற்ற போராடுகிறார் வரலட்சுமி. மைம் கோபி ஏன் குழந்தையைக் கடத்த முயற்சிக்கிறார்? அவரிடமிருந்து குழந்தை தப்பித்ததா? இதற்கு விடை தான் இந்த ‘சபரி’
படம் முழுக்க நிறைந்திருக்கிறார் வரலட்சுமி. இவருக்கு அடுத்த இடம் மைம் கோபிக்குத்தான். ஏன்னா அந்தக் குழந்தை அவருடையது. அது எப்படி என்பதை ஸ்கிரீன்ப்ளேயில் கரெக்டாக கொண்டு வந்திருக்கிறார் டைரக்டர் அனில் கட்ஸ். சிலபல திடுக்கிடும் திருப்பங்களுடன் சுமாரான சுவாரஸ்யத்துடன் கதையைக் கொண்டு சென்று, இரண்டு கொலைகளுடன் க்ளைமாக்ஸை சுபமாக முடித்திருக்கார் டைரக்டர். ஆமா.. ‘சபரி’ன்னு ஏன் டைட்டில் வச்சாய்ங்க?
வரலட்சுமி, கணேஷ் வெங்கட்ராம், மைம் கோபி இந்த மூவரைத் தவிர மற்ற கேரக்டர்கள் எல்லோருமே தெலுங்கு நடிகர்கள் என்பதால் நமக்கு யாரையும் தெரியவில்லை. ஆனாலும் வரலட்சுமியின் அம்மாவாக வருபவர், தோழியாக வருபவர், மனநலமருத்துவராக வரும் பெண் ஆகிய மூவரும் பளிச்சென இருக்கிறார்கள். [ ஹிஹிஹி….]
இப்பல்லாம் மலையாள, தெலுங்கு, இந்தி, கன்னட சினிமாக்களை தமிழில் டப் பண்ணி வெளியிடும் போது, டைட்டில் கார்டில் தமிழைக் கொத்திக் குதறியெடுக்கும் கொடுமையை கூச்சநாச்சம் இல்லாமல் செய்கிறார்கள். இந்தப் படத்தின் டைட்டிலில் கூட ‘புரொடியூசர்’ என்பதற்குப் பதிலாக ’ப்ரோடுடிசர்’ எனவும் ரிட்டர்ன் & டைரக்ட்’ என்பதற்குப் பதில் ‘வ்ரிட்டின் & டிரேக்ட் என போட்டுத் தொலைத்து நம்மை சாகடிக்கிறார்கள்.
ஆங்கிலத்தை தமிழாக்கம் செய்வதைக்கூட கூகுளில் தேடித்தான் பண்ணுவீகளாடா? பேப்பயலுகளா… பேசாம இங்கிலீஷ்லேயே போட்டுத் தொலைய வேண்டியது தானடா. ஏண்டான்னு எவனாவது கேக்கப் போறனா?
–மதுரை மாறன்