”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!
”மூடு டாஸ்மாக்கை!” – சாராயக் கடைக்கு எதிராக சேலம் மக்கள் போராட்டம்!
சேலம் சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், புதிதாக டாஸ்மாக் சாராயக் கடை திறக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (15.05.2023) அப்பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கெனவே, இதே சீலநாயக்கன்பட்டியில் ஆறு டாஸ்மாக் சாராயக் கடைகள் இயங்கிவரும் நிலையில், மக்கள் எதிர்ப்பையும் மீறி தற்போது ஏழாவது கடையாக திறக்க கங்கணம் கட்டிக் கொண்டு இயங்கி வருகிறது, மாவட்ட நிர்வாகம்.
தேசிய நெடுஞ்சாலை ஓரமாக; பள்ளிகள் அருகில்; குடியிருப்புகள் அருகில்; வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் அரசு டாஸ்மாக் சாராயக் கடைகளைத் திறக்கக்கூடாது என்று மக்கள் எதிர்ப்புகளையடுத்து பல்வேறு ”கூடாதுகளை” அரசுக்கு உத்தரவுகளாகப் பிறப்பித்திருக்கின்றன நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகள்.
அவற்றையெல்லாம் கசக்கி கடாசிவிட்டுத்தான், அரசுப் பள்ளிக்கு மிக அருகிலும்; மக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் குறிப்பாக, சீலநாயக்கன்பட்டி தேசிய நெடுஞ்சாலையில், தனியார் திருமணம் மண்டபம் அருகில், 58-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் கோபால் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் அமையவிருக்கிறது, இந்த எழவெடுக்கும் ஏழாவது டாஸ்மாக் சாராயக்கடை.
- சோழன் தேவ்