ஆத்துல மணல் அள்ளுறதை விட… சமயபுரம் தேருக்கு வாய்க்காலில் தண்ணீர் விடுறது… அத்தனை முக்கியமா என்ன….???
தமிழ்நாட்டின் மிக முக்கியமான சித்திரை மாத திருத்தேர் விழாக்களில் ஒன்று, சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் தேர் திருவிழா ஆகும். அன்றைக்கு மட்டும் பல்லாயிரக் கணக்கில் பக்தர்கள் சமயபுரத்தில் கூடுவார்கள். ரொம்பவும் தொலை தூரத்தில் இருந்தும் கிராம மக்கள் வந்து குடும்பம் குடும்பமாகக் குழுமி இருப்பார்கள். எவ்வளவு பேர் வந்தால் என்ன? வராவிட்டால் என்ன? என்று விட்டேத்தியாகச் செயல்பட்டுள்ளது மூன்று வகையான அரசு சார்ந்த அமைப்புகள். அத்தனை ஆயிரம் வெளியூர் கிராம மக்களுக்கு, சமயபுரம் சுற்றிலும் ஓடி வரும் வாய்க்கால்கள் எதிலுமே, பொது மக்கள் பயன்படுத்தும் அளவுக்கு தண்ணீர் ஓடி வரவில்லை என்பது தான், இந்தத் தேர் திருவிழாவுக்கு வந்திருந்த கிராம மக்கள் நேரடியாக அனுபவித்த மாபெரும் அவஸ்தையாகும்.
சமயபுரம் பேரூராட்சி நிர்வாகம் ஆளும் கட்சியான தி.மு.க. வசம் இருக்கிறது. அந்த நிர்வாகமாவது நம்ம ஊரில் திருவிழா, வருகின்ற ஜனங்களுக்கு வாய்க்காலில் தண்ணீர் விட ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று இயங்கவே இல்லை. சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்துசமய அறநிலையத்துறையின் கீழ் இயங்கி வருகிறது. அந்தக் கோயில் நிர்வாகத்துக்கும் இது குறித்தெல்லாம் அக்கறையோ அல்லது நடவடிக்கைகளோ எடுக்கவில்லை. சமயபுரம் எல்லைக்கு உட்பட்டது தான் மண்ணச்சநல்லூர் சட்டமன்றத் தொகுதி. அதன் மாண்புமிகு உறுப்பினர் தி.மு.க. ஆவார். அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. க்கும் சமயபுரம் தேர் திருவிழா அன்று வாய்க்காலில் தண்ணீர் வருகிறதா இல்லையா என்கிற கரிசனமும் இல்லை. இத்தனை “இல்லை”களும் சேர்ந்து தான் திருவிழா சமயத்தில் சமயபுரம் வாய்க்கால்களில் போதுமான அளவு தண்ணீர் வராமல் பார்த்துக் கொள்ளும் “அருந்தொண்டு” ஆற்றியுள்ளன என்றால் அது மிகையல்ல.
நாம், சமயபுரம் தேருக்கு இரண்டு நாட்கள் முன்பாகவே குறிப்பிட்ட பகுதி ஆர்.சி. டிவிசன் லஸ்கரிடம் போனில் பேசினோம். “வாய்க்காலில் தண்ணீர் வந்துடும் சார்.” என்றார் நம்மிடம். 18.04.2023 செவ்வாய்க்கிழமை காலையில் சமயபுரம் தேர். அதற்கு முதல் நாளில் இருந்தே வெளியூர் பக்தர்கள் குடும்பம் குடும்பமாக சமயபுரம் வந்து தங்கத் தொடங்கி விட்டார்கள். வெளியூர் பக்தர்களுக்கு வாய்க்காலில் குளிக்கவும் தண்ணீர் இல்லை. அவ்வளவு ஏன்? மலஜலம் கழித்த பின்னர் அதனைக் கழுவக் கூட எந்த வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை. இந்த நிலையில் தேருக்கு முதல் நாள் திங்கட்கிழமை காலையில் மீண்டும் நாம், வாய்க்கால் கரை லஸ்கரிடம் போனில் பேசினோம். அதற்கு அவர், “முக்கொம்புல தண்ணி திறந்தாச்சுங்க. நான் தண்ணியோடத் தான் வந்துட்டுருக்கேன். இன்னைக்கி நைட்டு வாய்க்கால்ல தண்ணி வந்துடும் சார்.” என்றார்.
நாம் இனிமேலும் இது சரிப்பட்டு வராது என்றெண்ணி, தெரிந்த நண்பர்களிடம் தொகுதி எம்.எல்ஏ., (தி.மு.க.) தொடர்பு நெம்பர் கேட்டிருந்தோம். அதற்கு ஒருவர், “அவர் அவ்வளவு சட்டுனு உங்கள்ட்ட போனில் பேசிட மாட்டாருங்க. எதுக்கும் அவுரோட பி.ஏ. நெம்பர் தர்றேன். வேணும்னா பேசிப் பாருங்க.” என்றார். நாம் தான் கலைஞர் போல எந்த முயற்சியிலும் அசர மாட்டோமே. அந்த பி.ஏ.க்கு போன் போட்டு பேசினோம். அவரும் அந்த லஸ்கர் நம்மிடம் சொன்னது போலவே, “தண்ணி வந்துட்டே இருக்கு சார். தண்ணி வந்துடும் சார்.” என்றார்.
கடைசியாக தேருக்கு முதல் நாள் திங்கள் நள்ளிரவு நேரத்தில், சமயபுரம் வாய்க்கால்களில் தண்ணீர் மெல்ல மெல்ல எட்டிப் பார்த்தது. அதாவது, சமயபுரம் தேர் செவ்வாய் அன்று காலையில், வாய்க்கால்களில் வெறும் கணுக்கால் அளவு தண்ணீரே ஓடி வந்தது. ஒரே நாற்றம் வேறு. தண்ணீர் கொஞ்சமாவது அதிகம் வந்தால் தான், அந்தக் கசடுகள் அடித்துச் சென்று பின்னர் வாய்க்கால் தண்ணீர் தெளிவாக ஓடி வரும். அதற்கெல்லாம் எந்தவொரு வாய்ப்பும் இல்லை. வாய்க்காலில் சன்னமாக ஓடி வந்த அந்த நாற்றம் எடுத்த தண்ணீரில், கிராமத்து ஜனங்கள் இறங்கி கை கால் முகம் கூட அலம்பிக் கொள்ளவில்லை. இந்த ஆண்டு சமயபுரம் தேருக்கு வந்திருந்த வெளியூர் ஜனங்கள் அனுபவித்த இது போன்ற அவஸ்தைகள் சொல்லி மாளாது. இந்தக் கடுங்கோடையிலும் மேட்டூர் அணையில் நூற்றி இரண்டு அடி உயர நீர் மட்டத்துக்கு தண்ணீர் நிறைந்துள்ளது.
பொதுவாக திருவிழா காலங்களில் முன்கூட்டியே, ஆர்.சி. டிவிசன் எனப்படும் ஆற்று பாதுகாப்புத் துறையிடம் தகவல் தெரிவிப்பார்கள். அவர்கள் தங்களுக்கு மேலுள்ள அதிகாரிகள் மத்தியில் பேசுவார்கள். அவர்கள் மேட்டூர் அணை நிர்வாக அதிகாரிகளிடம் கலந்து பேசுவார்கள். பின்னர் ஒருமித்த கருத்துடன் பேசி, மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் முக்கொம்பு வந்து சேரும். அதனையடுத்து முக்கொம்பில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டு சமயபுரம் வாய்க்கால்களில் தேர் திருவிழாவினை முன்னிட்டு இரண்டு மூன்று நாட்களுக்கு தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும். இது ஒவ்வொரு ஆண்டிலும் தவறாமல் நடைபெற்று வரும் செயல்பாடு ஆகும்.
இந்த ஆண்டு 2௦23 தேர் திருவிழா நாளில் சமயபுரம் வாய்க்கால் படு மோசம் என்பதில் எவருக்குமே மாற்றுக் கருத்து ஏதுமில்லை. இந்த லட்சணத்தில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர், “சமயபுரம் மாரியம்மன் கோயில் பெயரில் வங்கியில் ரொக்கப் பணமாக சுமார் ஐந்நூறு கோடிக்கு மேல் இருப்பில் உள்ளது.” என்று அறிவிக்கிறார். எத்தனை நூறு கோடி ரூபாய் வங்கியில் இருந்து என்ன? இல்லாவிட்டால் என்ன? சமயபுரத்தில் முக்கியமான சித்திரை தேர் திருவிழாவுக்கு வந்திருந்த மிக எளிய கிராமத்து மக்களுக்கு, சமயபுரம் வாய்க்கால்களில் போதிய அளவுக்கான தண்ணீர் ஓடி வர நடவடிக்கை எடுக்காமல் “கள்ள மௌனம்” காத்தது எதனால்? ஆத்துல மணல் அள்ளுவதை விட, சமயபுரம் தேருக்கு வாய்க்காலில் தண்ணீர் விடுவது, அத்தனை முக்கியமா என்ன?”
@ இருள்நீக்கியான்.