ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்ட 18 நாளில் இடிந்து விழுந்த தரைப்பாலம்!

0

அங்குசம் இதழ் இணையதளத்தில் E-Book வாசிக்க... இந்த லிங்கை பயன்படுத்துங்கள் - அங்குசம் அச்சு இதழ்.. உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே - தொடர்பு எண் - 9488842025

தஞ்சை கீழவாசல் பகுதியில் ஸ்மார்ட சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.2.40 லட்சம் செலவில் தரமற்ற முறையில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலம் வழியே இன்று காலை மணல் லாரி சென்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

கட்டி முடிக்கப்பட்ட 18 நாட்களுக்குள் இப்பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடகு - ஏல நகையை மீட்டு மறு அடகு வைக்க - விற்க

தஞ்சை கீழவாசல் சிராஜுதீன் நகரில் உள்ள பெரிய சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால் வாய்க்காலான ஆதாம் வடிகால் வாய்க்காலில் ஏற்கெனவே இருந்துவந்த பாலம் பழுதடைந்த நிலையில் இருந்ததால் அதை இடித்துவிட்டு புதிதாக பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.2.40 லட்சம் செலவில் புதிய பாலம் கட்டப்பட்டது.

இப் பாலம் கடந்த 18 நாட்களுக்கு முன்பு தான் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இன்னும் மாநகராட்சியிடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

3

இப்பகுதியில் நான்கு பள்ளிக்கூடங்கள், ரேஷன்கடை, பத்திரப்பதிவு அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இப்பகுதியில் வசிக்கும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இப்பாலம் வழியாகத்;தான் அன்றாடம் சென்று வந்தனர். மேலும். அருகில் பள்ளிகள் இருப்பதால் இப்பாலத்தின் மீது இருசக்கர வாகனங்கள் சென்று வந்தன.
இந்நிலையில், இன்று காலை அவ்வழியாக மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி பாலத்தை கடக்க முயன்றபோது திடீரென பாலம் இடிந்து விழுந்தது.

4

இதில் லாரியின் பின்பகுதி வாய்க்காலுக்குள் விழுந்தது. முன்பகுதிய அந்தரத்தில் தொங்கியபடி காணப்பட்டது.

பாலம் இடிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் மாற்றுப் பாதையில் சென்றனர். இதையடுத்து, லாரியில் இருந்த மணலை டிராக்டர் மூலம் அப்புறப்படுத்திவிட்டு அதன் பின்னர் லாரியை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், பாலம் தரமான முறையில் கட்டப்படாததாலேயே இடிந்து விழுந்ததாக  குற்றஞ்சாட்டுகின்றனர் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.

பாலத்தின் கட்டுமானப் பணிகள் முறையாக நடைபெறவில்லை என குற்றஞ்சாட்டினோம். ஆனால் எங்களது குற்றச்சாட்டை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவே இல்லை.
பாலம் எவ்வளவு நிதியில் கட்டப்படுகிறது, ஒப்பந்ததாரின் பெயர், எத்தனை மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்பன போன்ற தகவல்கள் அடங்கிய அறிவிப்பு பலகை எதுவும் வைக்கப்படவில்லை என்கின்றனர் அப்பகுதி குடியிருப்புவாசிகள்.

இப்பகுதியில் பள்ளி வாகனங்கள் அடிக்கடி சென்று வருகின்றன. நல்லவேளை பள்ளி வாகனம் எதுவும் விபத்துக்குள்ளாகவில்லை. அவ்வாறு பள்ளிவாகனம் எதுவும் விபத்துக்குள்ளாகி இருந்தால் பெரும் அளவில் சேதம் ஏற்பட்டு இருக்கும் என்பதை நினைக்கையிலேயே ஈரக்குலை நடுங்குகிறது என்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத பெண் ஒருவர்.


மணல் லாரி விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் உள்ளிட்ட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. இச்சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் அப்பகுதி மக்கள்.
சம்பவ இடத்தை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், ஆணையர் சரவணகுமார் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

இதுபற்றி மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் பல்வேறு இடங்கிளல் மழைநீர் குடியிருப்பு பகுதிக்குள் செல்லாமல் தடுக்கும் வகையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.25 கோடி செலவில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

அதன்படி ஆதாம் வடிகாலில் உள்ள பாலம் பழுதடைந்ததால் அதனை அகற்றிவிட்டு உயர்த்தி புதிய பாலம் ரூ.2.40 லட்சம் செலவில் கட்டப்பட்டது. பாலம் கட்டப்பட்டு 18 நாட்களே ஆகின்றன. பாலம் கட்டி முடிக்கப்பட்டாலும் இன்னும் மாநகராட்சியிடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை என்றார் மேயர் சண்.ராமநாதன்.

“பாலத்தின் இருபுறமும் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. அத்தடுப்புகளை அகற்றிவிட்டு தடையை மீறி சென்றதால் தான் இவ்விபத்து ஏற்பட்டுள்ளது,” என்றார் மேயர் சண்.ராமநாதன்.
“இவ்விபத்துக்கு காரணமான டிரைவர் மற்றும் லாரி உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விபத்துக்கு நாங்கள் தான் காரணம். எனவே பாலத்தை நாங்களே கட்டித் தருகிறோம் என லாரி உரிமையாளர் எழுதிக் கொடுத்துள்ளார். அதன்படி நாளை (ஏப்ரல் 21) புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்படும்,” என்றார் மேயர் சண்.ராமநாதன்.


விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட தஞ்சை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் மணிகண்டன், “ஆதாம் வடிகால் வாய்க்காலில் 15 அடி நீளம் மற்றும் 8 அடி அகலத்தில் இப்பாலம் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் கட்டப்பட்டுள்ளது. பாலம் முறையாக கட்டப்படவில்லை என இப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தும் மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடடிக்கையும் எடுக்கவில்லை,” என்றார்.

மேலும் பாலம் கட்டப்படும்போத அதிகாரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை.. எனவே பாலத்தை முறையாக கட்டாத ஒப்பந்தக்காரர் மீதும், உரிய ஆய்வுகளை மேற்கொள்ளாத அதிகாரிகள் மீதும் உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் மணிகண்டன்.

Furry genius pet hospital

Leave A Reply

Your email address will not be published.