துறையூர் கனிம வளக் கொள்ளை ! காத்திருப்பு பட்டியலில் தாசில்தார் ! கலெக்டர் அதிரடி !
திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் பகுதிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஏரி மற்றும் மலைகள், அதன் அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராவல் மண், செம்மண், பாறைகள் உள்ளிட்ட அதிகப்படியான கனிம வளங்களை எவ்வித முன் அனுமதியின்றி, அதிகாரிகளின், ” ஆசியுடன் “அரசியல் பின்புலத்துடன் ஒரு சில மணல் மாபியா கும்பல் கொள்ளையடித்து வருவது வாடிக்கையாக நடந்து வருகிறது.
இது குறித்து அந்தப் பகுதிகளில் உள்ள ஒரு சிலரிடம் நாம் பேசிய போது…. பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன. துறையூர் அடுத்த சிக்கத்தம்பூரில் தொடங்கி திருச்சி மாவட்ட எல்லைப் பகுதியான த.மங்கப்பட்டி புதூர் வரை உள்ள ஏரிகளில் கனிம வளக் கொள்ளை தொடர்ச்சியாக நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அந்த பகுதிகளுக்கு சென்று பார்த்த போது கனிம வளங்கள் அப்பட்டமாக கொள்ளை போனதும் தெரிய வந்தது. குறிப்பாக சிக்கத்தம்பூர், ஒக்கரைபிலிருந்து எரகுடி இபாதர்பேட்டை செல்லும் வழியில் உள்ள ஏரி, வெங்கடாசலபுரம் ஏரி, மாராடி, கிருஷ்ணாபுரம் , சோபனபுரம் வழியாக காஞ்சேரிமலை அடிவாரத்தில் உள்ள ஏரி, கொப்பம்பட்டி பெரிய ஏரி மற்றும் ஒக்கரை விலிருந்து ஒட்டம்பட்டி செல்லும் பாதையில் உள்ள மலையில் இரவு பகலாக பாறைகளில் வெடி வைத்து ஹிட்டாச்சி இயந்திரம் மூலம் பாறைகளை தகர்த்து எடுத்து செல்கின்றனர்.
இன்று வரை எவ்வித முன் அனுமதியும் பெறாமல் கனிம வளங்கள் கொள்ளை போகின்றன.செங்கல் சூளைக்கு செம்மண், வீடு கட்ட அடி மனை அஸ்திவாரத்திற்கு சுக்கா மண், ரியல் எஸ்டேட் பகுதிகளுக்கு இடத்தை சீர்ப்படுத்த எனதரம் பிரித்து கனிம வளங்கள் இப்பகுதியில் கொள்ளை போகின்றன.
இது போன்ற கனிம வளக் கொள்கைகள் பற்றி துறையூர் தாசில்தார் புஷ்பராணியிடம் அந்தந்த பகுதிகளில் உள்ள சமூக ஆர்வலர்கள் தகவல் கொடுத்தால், அதைப் பற்றி சிறிதும் கண்டு கொள்வதே இல்லையாம். மாறாக அந்தந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய் ஆய்வாளரை அனுப்பி சில சுவீட் பாக்ஸ் வாங்கிக்கொண்டு கப்சிப் ஆகிவிடுகிறராம்.
மக்களின் கோரிக்கையை, அவர்கள் தரும் மனு மீதான பிரச்னையை தீர்ப்பதில்லை மாறாக மனுவைத் தரும் நபர்களை தேவையில்லாமல் அதிகப் பிரசங்கித்தனமான கேள்விகளை கேட்டு பிரச்னையைத் திசை திருப்பி விடுவதே வழக்கமாம்.
உப்பிலியபுரம் மண்டலத்தில் உள்ள அனைத்து கிராம வருவாய்த்துறையினரை வாரம் ஒருமுறை தனது துறையூர் அலுவலகத்திற்கு வரவழைத்து பொதுமக்கள் பிரச்னையைப் பற்றி விவாதிக்காமல் , யார் யார் மண் எடுத்தார்கள், என்று பட்டியல் கேட்டுக்கொண்டே இருப்பாராம். ஆனால் எந்த ரைடும் நடந்தது கிடையதாம்…
தாசில்தார் புஷ்பராணி தன்னை எதிர்க்கும் எல்லோரிடமும் கலெக்டர் சப்போர்ட் நிறையவே இருக்கு , உன்னால என்னை எதுவும் செய்ய முடியாது என அதிகாரமாக பேசுவாராம். . இப்படித்தான் ஒக்கரையில் மணல் கடத்தும் பெரும் புள்ளி ஒருவரிடம் மாதம் ஒரு முறை மாமூல் வந்த நிலையில், துறையூர் தாசில்தார் புஷ்பராணி பொறுப்பேற்று ஒரு வருடமாகி விட்டது, 5-ம் தேதி டிரான்ஸ்பர் ஆகப் போகிறார் என்ற தகவலின் பேரின் பேரில் மாமூல் தந்தவர் திடீரென நிறுத்திவிட, மண் கடத்தல் புள்ளிக்கும், தாசில்தாருக்கும் லடாய் ஏற்பட்டு, மண் கடத்தும் போது மிக நேர்மையான அதிகாரி போல் இரண்டு லாரிகளை மடக்கி உப்பிலியபுரம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று மடக்கிய லாரியை ஒப்படைத்து வழக்கு போடச்சொல்லி வந்திருக்கிறார்.
தனக்கு கீழுள்ள விஏஓ, ஆர்ஐ போன்ற அதிகாரிகளை இது போன்று இயற்கை வளங்களை அநியாயமாக கொள்ளையடிக்கும் கும்பலிடம் வசூல் செய்யும் வேலையில் மட்டும் அக்கறை காட்டச் சொல்லி அதிகார மமதையில் துறையூர் தாசில்தார் புஷ்பராணி ஆட்டம் போட்டு வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் தயங்கும் நேரத்தில் தனது ஜூப்பை எடுத்துக் கொண்டு ஏரியாவிற்கு ஆய்வுப் பணிக்காக செல்வதாகக் கூறி, மண் கடத்தும் புள்ளிகளை நடுவழியிலேயே சந்தித்து தனக்கு சேர வேண்டியதை கறாராக கறந்து விடுவதில் கில்லாடியாம் தாசில்தார் புஷ்பராணி. இப்படியெல்லாம் வசூல் செய்த பணத்தில் தான் நெ.1, டோல்கேட் அருகில் ஆடம்பரமாக வீடு கட்டி வருவதாக தகவலும் உள்ளது.
துறையூர் வட்டாட்சியர் அலுவலகமே, நில அளவைப் பிரிவு அலுவலகம், ஒவ்வொரு பிரிவிற்கும் பணம் வாங்கித் தருவதற்கு,தனித்தனி புரோக்கர்கள் என தாலுக்கா அலுவலகமே புரோக்கர்கள் மயமாகக் காட்சியளிக்கிறது. பொதுவாக 1 வருடம் கழித்து தாசில்தார்களுக்கு டிரான்பர் இருக்கும், என்னைய மட்டும் தொடர்ந்து நீடிக்க சொல்லியிருக்கார் கலெக்டர் என்று சொல்லிக்கொண்டு வருகிறாராம்.
இந்த நிலையில் அவ்வப்போது மாவட்ட ஆட்சித் தலைவரான பிரதீப் குமாரிடம் தாசில்தாரின் முறைகேடுகள் புகார்கள் மூலமாக சென்ற வண்ணம் இருந்தாலும், இது வரை கலெக்டர் ஏன் இவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே மில்லியன் டாலர் கேள்வியாக தாசில்தாரால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாக உள்ளது.
இந்த குற்றச்சாட்டு குறித்து தாசில்தார் புஷ்பராணியிடம் பேசினோம். காசுவாங்குற பழக்கம் எனக்கு கிடையாது, இந்த குற்றசாட்டை முற்றிலும் மறுக்கிறேன். இந்த மணல் கடத்தும் கும்பல் யார் என்றே தெரியாது. அப்படி பணம் கொடுத்தவர்கள், கலெக்டரிடம் புகார் கொடுக்கட்டும். எனக்கு மணல் கடத்தல் புகார் வந்தது அதனால் பிடித்தேன், நான் நடவடிக்கை எடுப்பதால் தப்புபண்றவுங்க தான் என்னை பத்தி தப்பு தப்பா சொல்றாங்க என்றார்.
இந்த நிலையில் இன்று காலை 12.04.2023 தற்போது வெளியான தாசில்தார் டிரான்பர் பட்டியலில் துறையூருக்கு முசிறியில் இருந்து மண்டல துணை வட்டாச்சியர் வனஜா நியமித்து உள்ளனர். ஆனால் தாசில்தார் புஷ்பராணிக்கு வேறு பதவி ஏதுவும் கொடுக்காமல் காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். என்பது குறிப்பிடதக்கது.
-ஜோஸ்