மணல் Vs எம் சாண்ட் அக்கபோர்.. மந்திரியின் நிழல் யுத்தம்
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கிய அரசியலாக மணல் அள்ளும் வணிகம் மாறிவிட்டது. கடந்த ஆட்சியில் மணல் கொள்ளை அதிகரித்து வந்த நிலையில் எம்.சாண்ட் மணல் விற்பனையும் அதிகரித்தது. இந்த நிலையில் தேர்தல் நேரத்தில் ஒருபடி மேலே சென்று கரூர் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்தல் பிரச்சாரத்தின்போது 11 மணிக்கு பதவியேற்றவுடன் 11.05 மணல் எடுக்க சென்று விடுங்கள் என்று மாட்டு வண்டி க்காரர்களிடம் வாக்குறுதி கொடுத்தார்.
மேலும் தமிழ்நாட்டில் கட்டுமான பணிகளுக்கு அதிக அளவில் மணல் தேவைப்பட்டதால் மக்களும் மணல் எடுப்பதை ஆதரிக்கத் தொடங்கினர். இந்த நிலையில் தமிழக சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன், பல்வேறு தரப்பட்ட மக்களும் மணல் அள்ளுவதற்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போதைய முதல்வரும் தேர்தல் வாக்குறுதியாக மணல் பிரச்சினை தீர்க்கப்படும் என்று கூறியிருந்தார்.
இதை அடுத்து மணல் அள்ளுவது குறித்து நீதிமன்ற தீர்ப்பு வெளியானது. இதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஆலோசித்து தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகளில் திருத்தம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது. சுற்றுச்சூழல் அனுமதிக்கு சென்றால் இப்போதைக்கு வராது என்பதால். சாலைப் பணிகள், அணை கட்ட, கட்டிடப் பணிகளுக்கு மணல் தேவைப்படுகிறது. இதனால் கட்டிடப் பணிகள், சாலைப் பணிகளுக்கு சுற்றுச்சூழல் வாரியம் அனுமதி இல்லாமல் மணல் எடுக்க ஜூன் 30-ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது. 1.5 மீட்டர் வரை மணல் எடுப்பது கனிம வளங்களை எடுப்பது ஆகாது என்பதால் 1.5 மீட்டர் வரை மணல் எடுக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
இந்த நிலையில் கடந்த ஆட்சியிலே எம் சாண்ட் மணல் மற்றும் எம்சாண்ட் குவாரிகளும் அதிகரிக்க தொடங்கியது. இதற்கான அனுமதியை தமிழக அரசு வழங்கியது. இவ்வாறு கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட யூனிட்டுகள் அமைத்து எம் சாண்ட் மணல் மற்றும் எம் சாண்ட் ஜல்லி கற்கள் உற்பத்தி குவாரிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. இப்படி எம்சாண்ட் விற்பனை செய்யும் ஒவ்வொரு இடத்திற்கும் 40 முதல் 50 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து கரூர், நாமக்கல், மாவட்டத்தை சேர்ந்த பெரும் முதலாளி தொழில் தொடங்கி இருக்கின்றனர். இவர்கள் தொழிலை தடையின்றி நடக்கும். நடத்த ஏதுவாக பலரும் தற்போதைய அமைச்சர் செந்தில்பாலாஜி மூலமாக பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர். இதற்காக “வைட்டமின் சி”யும் கைமாறி உள்ளதாக கூறப்படுகிறது.
எம் சாண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் பலரும் அமைச்சரின் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் அமைச்சரும் தனது சமூக லாபியை கையில் எடுத்து எம் சாண்ட் உரிமையாளருக்கு ஆதரவாக தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதேவேளை தமிழ்நாட்டில் மணல் எடுப்பதற்கு அனுமதி தடை விதிப்பதற்கான முயற்சியும் எம் சாண்ட் பெருமுதலாளிகளால் மறைமுகமாக நடைபெற்று வருகிறதாம்.
மேலும் அரசு அதிகாரிகளும் மணல் அள்ளுவதற்கு பல்வேறு காரணங்களை கூறி காலம் தாழ்த்தி வருகிறார்களாம். அதே நேரத்தில் சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டிற்கு சென்ற மாட்டுவண்டி தொழிலாளர்கள் மணல் அள்ள அனுமதி கேட்டு கோரிக்கை வைத்து உள்ளனர். அதற்கு அமைச்சர் சற்று குரலை உயர்த்தி உங்களுடைய கோரிக்கை விரைவில் செய்து தரப்படும். அதுவரை அமைதியாக இருங்கள் என்று கறாராகக் கூறி திருப்பி அனுப்பி வைத்துவிட்டாராம், மேலும் PWD அதிகாரிகளை சந்தியுங்கள் என்று கூறி மாட்டுவண்டி தொழிலாளர்களை திசை திருப்பி விட்டாராம்