பா.ஜ.க.வின் மக்கள்விரோத செயல்பாடு- வீடுவீடாக கொண்டு செல்வோம்

எஸ.ஜி.ஆர்

0

இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் பேட்டி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக இளைஞர் அணித் தலைவராக திருச்சியைச் சேர்ந்த லெனின் பிரசாத் என்பவர் தேர்வாகியிருப்பது தமிழக காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் ஆச்சர்யத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

https://businesstrichy.com/the-royal-mahal/

பொதுவாக தமிழக காங்கிரஸ் கட்சியென்றால் சமீபகாலமாக சிதம்பரம் மற்றும் மாணிக்கம் தாகூர் கோஷ்டி என இரு கோஷ்டிகளின் ஆதரவாளர்கள் மட்டுமே முக்கிய பொறுப்பில் இடம் பிடிப்பர். ஆனால் இந்த முறை எவரும் எதிர்பாராத வகையில் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான விச்சு(எ)லெனின் பிரசாத் மாநில இளைஞர் அணித் தலைவர் பதவியை கைப்பற்றியுள்ளார்.

கார்த்திக் சிதம்பரம் ஆதரவாளரான ஜோஷ்வா, மாணிக்கம் தாகூர் ஆதரவாளரான நவீன்குமார் ஆகியோரும் இந்த போட்டியில் முன்னணி வகித்தனர். இங்கு தான் அந்த அரசியல் நிகழ்ந்தது. கார்த்திக் சிதம்பரம், மாணிக்தாகூர் என இவர்களின் ஆதரவாளர்களில் ஒருவர் வெற்றி பெற்றால் மேலிடத்தில் அவர்களின் செல்வாக்கு அதிகரிக்கும் என்பதை அறிந்த தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட எதிர்தரப்பினர் ஒன்றிணைந்து லெனின் பிரசாத்தை ஆதரித்தனர். எதிரணியினரை ஒன்றிணைத்தது தான் லெனின் பிரசாத்தின் வெற்றிக்கு காரணம் என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரத்தினர். வெற்றி பெற்ற லெனின் பிரசாத்தை சந்தித்து பேசினோம்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

நான் ராகுல் காந்தியின் பேச்சால் காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக என்னை இணைத்துக் கொண்டேன். 2010ல் திருச்சி மேற்கு தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்து மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவரானேன். தொடர்ந்து பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர், பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் தலைவர் பின்னர் அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர், தெலுங்கானா, புதுச்சேரியின் இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளர் என படிப்படியாக கட்சியில் பல்வேறு பொறுப்புகளை பெற்று செயல்பட்டு வந்தேன். கட்சிப் பணியில் என்னை இணைத்துக் கொண்டது முதலே களப் பணியில் அதிகம் என்னை நான் ஈடுபடுத்திக் கொண்டேன். இதனால் தமிழகம் முழுக்க பலரையும் நான் அறிவேன்.  பொதுவாக காங்கிரஸ் கட்சியில் பதவி என்பது டெல்லி தலைமை நியமனம் செய்வதாக முன்பு இருந்தது. இதனால் பதவியை கைப்பற்ற நிர்வாகிகள் தங்களை ஆதரிக்கும் தலைவர்கள் மூலம் பதவியை பெற்று வந்தனர். இது தான் கோஷ்டி உருவாக முக்கிய காரணமாக அமைந்தது. இதை கண்டுணர்ந்த ராகுல்காந்தி, தேர்தல் மூலமே இளைஞர் காங்கிரஸ் தலைவர் நியமிக்கப்பட வேண்டும் என முடிவெடுத்தார்.

முதன்முதலாக நடைபெற்ற தேர்தலில் இளைஞர் காங்கிரஸ் தலைவராக யுவராஜ் தேர்வானார். அடுத்து ஹசன் மவுலானா தேர்வு செய்யப்பட்டார்.  அவரது பதவி காலம் முடிந்ததை தொடர்ந்தே இளைஞர் காங்கிரஸ் தேர்தல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு போட்டியிட ரூ.7,500 கட்டி தேர்தலை எதிர்கொண்டேன். ஆன்லைன் மூலமே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆரம்பத்தில் நான் சொன்னது போல், களப்பணியின் மூலம் பலரையும் அறிந்து கொண்டதால் அனைவரையும் எனக்கு ஆதரவளிக்க வலியுறுத்தினேன். இறுதியில் எனக்கு 2,04,947 வாக்குகள் கிடைத்தது. என்னுடன் போட்டியிட்ட ஜோஸ்வா, நவீன்குமார் இருவரும் தலா 1.30 லட்சம் வாக்குகள் பெற்று இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்றிருந்தனர். கூடுதலான வாக்குகள் பெற்று விட்டால் மட்டும் வெற்றி சாத்தியமாகாது. வாக்கெடுப்பை தொடர்ந்து நேர்முகத் தேர்வும் நடைபெறும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

தேர்வு செய்யப்பட்டவர்கள் நேர்காணலில் இடம் பெற்றாலும், அவர்களின் கடந்த கால கட்சி நடவடிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படுகிறது. அதில், தகுதி மற்றும் திறமையான செயல்பாட்டில் முன்னுரிமை பெறுபவரே, தலைவர் பதவிக்கு தேர்வு செய்யப்படுவார்.

நேர்காணலில் நான் பங்கேற்று அளித்த பதில், இது நாள் வரை காங்கிரஸ் கட்சியில் ஈடுபாட்டுடன் செயலாற்றியதன் காரணமாகவே இந்த வெற்றி சாத்தியமானது. நான் வெற்றி பெறுவதற்கு பேருதவியாக இருந்தவர் செல்வப்பெருந்தகை. இந்த தேர்தல் வழிமுறை தான் அகில இந்திய கட்சியான காங்கிரஸ் கட்சியில் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த என்னாலும் மாநில தலைவர் பதவியை எட்டமுடியும் என்பதை சாத்தியமாக்கியது. எனவே இன்னமும் காங்கிரஸ் கட்சியில் கோஷ்டி என்றெல்லாம் பேசத் தேவையில்லை.

சமீபத்தில் நடைபெற்ற 4 மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்துள்ளது குறித்து..?

உத்தரப்பிரதேசத்தில் பிரியங்கா காந்தி வீடுவீடாக சென்று வாக்கு சேகரித்தார். காங்கிரஸ் கட்சி இந்த நாட்டுக்கு செய்துள்ள நன்மைகள் குறித்தும், பா.ஜ.க.வின் மக்கள் விரோத மதவெறி ஆட்சி குறித்தும் எடுத்துரைத்தார். ஆனாலும் மக்கள் பா.ஜ.க.விற்கு வாக்களித்திருக்கின்றனர். காரணம் பா.ஜ.க.வின் பொய் பிரச்சாரம். பத்திரிக்கையும், ஊடகமும் பா.ஜ.க.வின் மக்கள் விரோத ஆட்சி குறித்த உண்மைநிலையை எடுத்துரைக்க வேண்டும்.

பொதுவாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் தான் மக்கள் நலப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அது போன்ற ஒரு செயல்பாடுகளை காங்கிரஸ் கட்சி செய்து வருகிறதா..?

முதன்முதலில் பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தை நாங்கள் தான் முன்னெடுத்தோம். ஏராளமான ஆர்ப்பாட்டங்களையும், போராட்டங்களையும் நடத்தியுள்ளோம். வரும் காலங்களிலும் மக்கள் விரோத பா.ஜ.க. அரசின் செயல்பாடுகள் குறித்து ஆர்ப்பாட்டம், போராட்டங்களை முன்னெடுப்போம்.

வருகிற நாடாளுமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள்.?

தமிழகம் முழுக்க கிராமங்கள் தோறும் வீடுவீடாகச் சென்று காங்கிரஸ் இந்த நாட்டுக்கு செய்துள்ள நன்மைகள் குறித்தும், பாஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகள் குறித்தும் எடுத்துரைப்போம். இளைஞர்கள் பெருமளவு காங்கிரஸ் கட்சியில் இணைந்து வருகின்றனர். அவர்களை முழுமையாக பிரச்சார களத்தில் ஈடுபடுத்துவோம். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமராக்கும் வகையில் முழுமூச்சுடன் எங்கள் இளைஞர் காங்கிரஸ் செயல்பாடுகள் அமையும்” என்றார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.