ஸ்ரீரங்கத்தில் ஒலித்த வைணவத்தின் சங்கொலி
ஒரு அரசியல் இயக்கத் தலைவரின் வழக்கம் போலான சாதாரண மேடைப் பேச்சு அது என்று, எவராலும் புறந்தள்ளிச் சென்று விட முடியாது என்றேக் குறிப்பிடுகிறார்கள் அந்தப்பேச்சினைக்கேட்டவர்கள். ரங்கம் ராகவேந்திரா ஆலய மண்டபத்தில் நிகழ்ந்தது அந்த அரங்கக் கூட்டம். பேச வந்த தலைப்பு “தேன் தமிழ் திவ்யப்பிரபந்தம்”. பேசியவர் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ. அவரது ஒண்ணேகால் மணி நேர உரைதனில், உலகளந்த பெருமாளை அரங்கில் இருந்தோரின் மனக்கண் முன்பாக நிறுத்தி வைத்திருந்தார் என்றால் அது மிகையல்ல.
தன்னை இது போன்றதொரு தலைப்புகளிலும் பேச வேண்டும் என்றும், பேச முடியும் என்றும் உற்சாகப்படுத்திய ஊக்கப்படுத்திய பத்திரிக்கையாளரும், திருமங்கையாழ்வாரின் ஆன்ம நேயக்காதலருமான மை.பா.நாராயணன் என்பவர் குறித்து உரையின் தொடக்கத்தில் நன்றியுடன் நினைவு கூர்ந்தார் வைகோ. பன்னிரண்டு ஆழ்வார்கள் குறித்து சுருக்கமாகவும், நம்மாழ்வார், பேயாழ்வார், திருப்பாணாழ்வார் குறித்து விரிவாகவும் உரையாற்றினார். காரணம், அத்தனை ஆழ்வார்கள் குறித்தும் விரிவாக உரையாற்றிட அந்த ஒண்ணேகால் மணி நேரம் போதாது.
சூடிக்கொடுத்த சுடர்க்கொடி ஆண்டாளையும், அசோகவனத்து சீதையையும், சிலப்பதிகாரத்து கண்ணகியையும் நம் கண் முன்னே கொண்டு நிறுத்தினார். தனது மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும் துன்பியல் நாடகமான ஷேக்ஸ்பியரின் “ஒத்தெல்லோ” குறித்துப்பேசிச் சென்றவர், அதிலிருந்து ஒரு நுனியினை திவ்யப்பிரபந்தத்தின் சாராம்சம் ஒன்றோடு இணைத்தது மிகவும் நுணுக்கமானது. ராமானுஜர், திருப்பாணாழ்வாரை ஓரிடத்தில் “திருக்குலத்து” நாயகன் எனக் குறிப்பிட்டது, உயர்வு தாழ்வு என பேதம் ஏதும் தன்னிடம் இல்லை என எல்லோரையும் உணர வைத்தவர் என்றார் வைகோ.
ஒரு கட்டத்தில் சகாதேவன் சாம்பல் ஆகிப் போகிறான். அவன் உடல் எரிந்த சாம்பல் சங்காக மாறிப் போகிறது. அந்த சங்கினை எடுத்து ஊதுகிறான் கண்ணன். ரங்கத்தில் வைகோ ஆற்றிய உரையானது, வைணவத்தின் சங்கொலியாக அரங்கில் இருந்தோர்க்கு ஒலித்துக் கொண்டே இருந்தது என்றால் அது மிகையல்ல.
-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு